கண் ஒளி தந்த கௌமாரியம்மன்
அன்றைய ‘அளநாடு’ என்று அழைக்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதியே இன்றைய வீரபாண்டி ஆகும். ஆதிநாளில் ஒரு அசுரனை வெல்வதற்காக உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரியம்மன் தவம் இருந்தார். இன்று கோவில் கொண்டிருக்கும் இடம் முன்பு அடர்ந்த காடாக இருந்தது. அங்கே தவமிருந்த கௌமாரியைக் கண்டு ஒரு அசுரன் தன் கைவாளை விட்டு விட்டு சப்தமில்லாமல் தூக்கிச் செல்ல முயன்றான்.
இதனை அறிந்த தேவி பக்கத்தில் இருந்த அருகம்புல்லை எடுத்து அசுரன் மீது வீச அப்புல்லே முக்கழுப்படை என உருவெடுத்து அவனை இரு கூறாய் பிளந்ததாம். அவ்வமயம் தேவர்கள் மலர் தூவி கௌமாரியைத் தெய்வமாக்கியதாக ஸ்தல வரலாறு உள்ளது.
வீரபாண்டி மன்னன் மதுரையில் ஆட்சி செய்த போது ஊழ்வினையால் தனது இரண்டு கண்களின் ஒளியை இழக்க நேரிட்டது. கடவுளின் அருளை வேண்டினான். இறைவன் அவன் கனவில் தோன்றி இன்றைய வீரபாண்டி தலம் இருக்கும் இடத்தினை சுட்டிக்காட்டி, வைகைக்கரை ஓரமாகச் சென்று நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற ஸ்ரீ கௌமாரியை வணங்கச் சொல்கிறார். மன்னன் கோவிலுக்கு சென்று அவள் தாழ் வணங்க கண் ஒளி பெற்றதாக வரலாறு கூறுகிறது.
சப்த கன்னியரில் ஒருவர்
இக்கோவிலில் அம்மன் கன்னி தெய்வமாகக் காட்சி அளிக்கிறார். கௌமாரி என்பது சப்த கன்னி தெய்வங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கண்நோய் கண்டவர், அம்மை வந்தவர்கள் அம்மனைத் தூய உள்ளத்துடன் வழங்கி, தீர்த்தம் பெற்றுச்சென்றால் தீராத நோயும் தீர்ந்து விடுகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஸ்தலவிருட்சமாக வேப்பமரம் உள்ளது. திருக்கோவில் முன்பு கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது.
இதுவே காவல் தெய்வமாக உள்ளது. காவல் தெய்வத்தை அடுத்துள்ள முன் மண்டபத்தை கடந்து பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கம்பத்தடி மண்டபம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தடி மண்டபத்தில் தான் சித்திரை திருவிழாவிற்காக கம்பம் நடப்படுகிறது. கம்பத்தடி மண்டபத்தை கடந்து சென்றால் மகா மண்டபம் உள்ளது. இந்த மகா மண்டபத்தினை கடந்து முன் செல்லும் போது கருவறையில் நமக்கு அன்னை கௌமாரி கன்னி தெய்வமாக சுயம்புவாக காட்சி தருகிறார்.
பிரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது தெற்கே விநாயகர், கன்னிமார் தெய்வமும், வடக்கே நவக்கிரக மண்டபமும் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளத்தில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் திருவிழாவிற்கு வருகை தருகின்றனர். அம்மனுக்கு முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து நீர் எடுத்து வந்து கோவில் வளாகத்தில் திருவிழாவிற்காக நிறுவப்பட்டுள்ள முக்கொம்பில் பக்தர்கள் நீர் ஊற்றுகின்றனர்.
பெரியாறு ஆற்றில் குளித்து விட்டு பக்தர்கள் கையில் அக்கினிச் சட்டி ஏந்தி அம்மனுக்கு நன்றி கடன் செலுத்துகின்றனர். மேலும் ஆயிரம் கண் பானை சுமர்ந்து வருதல், மாவிளக்கு படைத்தல் என இப்படியும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
தினம் ஒரு பட்டு
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 22வது நாள் 8 நாட்கள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் கொடியேற்றம் நடந்த நாள் முதல் 21நாட்கள் அம்மன் விரதம் இருப்பார். 21நாட்களும் அம்மனுக்கு மாவு பூஜை மட்டுமே நடைபெறும். நெய்வேத்தியமாக காப்பு அரிசி மட்டும் படைக்கப்படும்.
கொடியேற்ற நாள் முதல் திருவிழா முடியும் வரை கொடி கம்பமாக நடப்படும் அத்தி மரத்தாலான முக்கொம்புக்கு மண் கலயத்தில் முல்லை பெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவது முக்கிய ஐதிகமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த அத்திமர முக்கொம்பையே அம்மன் சிவனாக பூஜிக்கிறாள்.
அத்திமரக்கம்பம் நடப்பெற்றதிலிருந்து திருவிழா முக்கிய நாட்கள் தொடங்கும் வரை உள்ள 21நாட்கள் அத்திமர முக்கொம்பிற்கே மாவு பூஜை நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். சித்திரை திருவிழா நடைபெறும் எட்டு நாட்களிலும் சன்னதி இரவு, பகல் என 24 மணிநேரமும் திறக்கப்பட்டிருக்கும் திருவிழாவில் தினமும் அம்மன் ஒரு பட்டு உடுத்தி பக்தர்களின் மனதைக் குளிரச் செய்கிறார்.
