

கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன 65 டன் எடை, 38 அடி உயர ஆதிபராசக்தி அம்மன் சிலை.
கும்பகோணம்: சேலம் பனைமரத்துப்பட்டியில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, கும்பகோணம் அருகேயுள்ள சத்திரம் கருப்பூரில் வடிவமைக்கப்பட்ட 38 அடி உயரம், 65 டன் எடையுடைய ஐம்பொன்னாலான ஆதி பராசக்தி அம்மன் சிலை நேற்று டாரஸ் லாரியில் அனுப்பிவைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் பனைமரத் துப்பட்டியில் உள்ள பழமையான ஆதிபராசக்தி கோயில் முகப்பில் பிரதிஷ்டை செய்வதற்காக, 65 டன் எடை, 38 அடி உயரம் உடைய ஐம்பொன்னால் ஆன சிலை வடிவமைக்கும் பணி கும்பகோணம் வட்டம் சத்திரம் கருப்பூரி்ல உள்ள தரணி மெட்டல்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் 2016-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்தபதி கோபு தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக சிலையை வடிவமைத்தனர்.
இப்பணி நிறைவடைந்ததையொட்டி, நேற்று காலை 3 ராட்சத கிரேன்கள் மூலம் டாரஸ் லாரியில் 38 அடி உயர சிலை ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க விமரிசையாக அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த சிலை நாளை (மார்ச் 1) அந்த கோயிலுக்கு சென்றடைகிறது. இதுதொடர்பாக சிலையை வடிவமைத்த ஸ்தபதி கோபு கூறியபோது, “ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்ட 65 டன் எடையுடைய ஆதிபராசக்தி அம்மன் சிலையின் மதிப்பு ரூ.10 கோடி. பனைமரத்துப்பட்டி கோயிலில் 13 அடி கருங்கல் பீடம் கட்டப்பட்டு, அதன் மீது இந்த சிலை விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது” என்றார்.