

இந்திய தேசிய நாட்காட்டியான சக ஆப்தக் கணக்கின்படி, ஆண்டின் முதல் மாதம் சித்திரை. தமிழ் நாட்காட்டியின்படியும் நாட்டின் பற்பல பகுதிகளில் அனுசரிக்கப்படும் சாந்த்ரமான முறை நாட்காட்டிகளின்படியும் ஆண்டின் முதல் மாதம் சித்திரை. வடமொழியிலும் வடமாநிலங்கள் பலவற்றிலும் சைத்ர என்றும், தெலுங்கில் சைத்ரமு என்றும் வங்காளியில் சொய்த்ரோ என்றும் அழைக்கப்படுகிற மாதமே தமிழில் சித்திரை என்று வழங்கப்படுகிறது.
சித்திரையும் புத்தாண்டும்
வசந்தம், ஒய்யார நடை நடக்கும் மாதமே சித்திரை மாதமாகும். இம்மாதத்தின் முதல் நாளே, வருடப்பிறப்பு நாளாக, குடி படுவா, ஸம்வத்ஸரோ பாடுவா, யுகாதி, விஷு என்னும் பெயர்களால் கொண்டாடப்படுகிறது. சாந்த்ரமான முறையில் (சந்திரனின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்ட முறை) பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் சித்திரை தொடங்குகிறது; இந்தப் பிரதமை நாள்தான், வருடப் பிறப்பு நாள் (படுவா=பிரதிபாத என்னும் சொல்லின் மருவு; பிரதிபாத=பிரதமை).
தமிழ் ஆண்டுமுறை, சௌரமான முறையை (சூரியனின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்ட முறை) அடிப்படையாகக் கொண்டது. சூரியன் மேஷ ராசிக்குள் புகும் நாள்தான், இம்முறையின்படி புத்தாண்டு நாளாகும்.
மேஷ ராசிக்குள் சூரியன் புகுகின்ற நாளைப் புத்தாண்டு என்று தமிழர்கள் கொண்டாடுவதைப் போன்று, ‘பணா சங்கராந்தி’ என்று ஒரியர்களும், ‘மஹாவிஷுவ சங்கராந்தி’ என்று வடகிழக்குப் பிரதேசத்தவர்களும், ‘பைசாகி’ என்று பஞ்சாபியர்களும், ‘பிஹு’ என்று அஸ்ஸாமியர்களும், ‘பிஷு பர்பா’ என்று துளுவர்களும் கொண்டாடுகின்றனர்.
சைத்ர நவராத்திரியான வசந்த நவராத்திரி, ஸ்ரீ ராம நவமி, சரக பூஜை ஆகிய பண்டிகைகள் இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகின்றன.
சைத்ரமஸி ஜகத்பிரஹ்ம ஸஸர்ஜு பிரதமேஹானி சுக்ல பக்ஷ ஸமக்ரந்து ததா ஸூர்யோதயே
சதி ப்ரவர்த்தயாமாஸ ததா காலஸ்ய கணனாமபி க்ரஹந்தாரான் ருதூன்மாஸான்
வத்ஸரான் வத்ஸராதிபான்
என்று சதுர்வர்க்க சிந்தாமணி என்னும் நூலின் ஸ்லோகம் ஒன்று கூறுகிறது. ‘பிரம்மாவானவர், சைத்ர மாதத்தின் சுக்ல பக்ஷ பிரதமை நாளில் பிரபஞ்சத்தை சிருஷ்டித்தார். கிரகங்களையும் நட்சத்திரங்களையும் பருவகாலங்களையும் ஆண்டுகளையும் ஆண்டுக்கான அதிபர்களையும் படைத்தார்’ என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள். பிரம்ம சிருஷ்டி தொடங்கிய நாள் என்பதாலேயே, பெரும்பாலான நாட்காட்டிகள், இந்நாளை ஆண்டின் தொடக்கமாகக் கொள்கின்றன.
இயற்கையின் திருவிளையாடல்
மாசி-பங்குனி மாதங்களில், மரங்களிலிருந்து இலைகள் அதிகமாக உதிரும். ஆயின், சுக்ல பக்ஷ பிரதமை நாள் நெருங்கும்போதே, புதிய துளிர்கள் துளிர்த்து, மொட்டுகள் அரும்பி, வசந்தத்தின் வண்ண விளையாட்டு, தலைகாட்டத் தொடங்கிவிடும்.
சாந்த்ரமான யுகாதியைக் (சந்திர முறையின் ஆண்டுத் தொடக்கம்) கணக்கெடுத்தால், அன்று தொடங்கி ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப் பெறும் முதல் விழா வசந்த நவராத்திரியாகும். துர்க்கையை வழிபடும் விழா. இளவேனில் காலத்து விளைச்சல் நன்கமையவேண்டுமென அம்பிகையை பிரார்த்திக்க வேண்டும்.
இதே வகையில், ஆண்டின் முதல் நாளில் தொடங்கி, ஏழு நாட்களுக்கு, நாளொன்றுக்கு ஒருவராக, ஸப்த ரிஷிகளையும் வழிபடவேண்டும். இதுவே சப்த ரிஷி விரதம். வசந்த நவராத்திரியின் நிறைவு நாள், ஸ்ரீ ராம நவமியாகும்.
கலப்பை நுனியில் கிட்டியவள் சீதை, அவளைச் சிறை மீட்கவே இராமர் இலங்கை மீது படையெடுத்தார் போன்ற இராமாயணச் செய்திகளை உற்று நோக்கினால், நிலமகளின் வளமை, அதனைக் கெடுப்பவர்களை அழிக்க ஆண்டவன் அவதாரம் செய்கிறார், அவர்கள் திருந்த யத்தனித்தால் மன்னிப்பு வழங்குகிறார், மேலும் மேலும் துன்பம் தந்தால் தண்டிக்கிறார் நிலத்தின் நலம் பேணும் வசந்த நவராத்திரியின் நிறைவில் ராம ஜனன நாளும் ராம பட்டாபிஷேக நாளும் அமைகின்றன.
சித்திரையும் ராமாயணமும்
ராமபிரானுடைய சரிதம், சித்திரை மாதத்தோடு நெருங்கிய தொடர்புடையது. ராமருடைய பிறப்பு, சித்திரையில் நிகழ்ந்ததாக வால்மீகி முனிவர் தெரிவிக்கிறார். ‘சித்திரை (சுத்த அல்லது சுக்ல) நவமித் திதியில் புனர்வசு நட்சத்திரம் ஏறுகதியிலிருக்க, ஐந்து கிரகங்கள் உச்சத்தில் நிலைக்க, பிரஹஸ்பதி குருவான வியாழனும் சந்திரனும் கர்கடக லக்னத்தில் உதயகதி பெற, பிரபஞ்சநாதனும் அனைத்து உலகங்களாலும் வணங்கபடுபவரும் அனைத்து தெய்விக அம்சங்களும் பொருந்தியவருமான ராமரைக் கோசலை பயந்தனள்’. இதன் பின்னர், பூசத்தில் பரதனும் ஆயில்யத்தில் பிற மகன்கள் இருவரும் பிறந்தனர்.
சித்திரை அவதரித்தோர்
மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில், இரண்டு அவதரங்களுக்கு இடம்கொடுக்கும் பெருமை, சித்திரைக்கு உள்ளது. சைத்ர சுக்ல நவமி, ஸ்ரீ ராம ஜன்ம தினம் என்பது தெரியும். மற்றொரு அவதாரம்? முதல் அவதாரமான மத்ஸ்ய அவதாரம்! சைத்ர சுக்ல பஞ்சமியில், மீன் வடிவில் அவதாரம் எடுத்து, பிரளயத்திலிருந்து உலகை மீட்டு, உயிர்கள் மீண்டும் தோன்ற வழி செய்தார் பகவான்.
சித்திரையின் சீர்மிகு விழாக்கள்
திருக்கோயில்களின் விழாக்கள், மிகவும் கோலாகலமாக நடைபெறும் மாதமும் சித்திரையாகும். மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவும், அதன் உள்நிகழ்வுகளான அம்பாள் பட்டாபிஷேகம், மீனாட்சி-சுந்தரேச்வரர் திருக்கல்யாணம் போன்றவையும் உலகப் பிரசித்தம். அழகர் மலை கள்ளழகருக்குச் சித்திரையில் பிரம்மோற்சவம். அழகர் உலா புறப்பட்டு, ஆற்றில் இறங்கி, அகிலத்தோர் எல்லோருக்கும் அருள்பாலிப்பார்.
ஆழித்தேருக்குப் பெயர்போன திருவாரூர் தேர்த் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம் (சில பல காரணங்களால் இப்போது இது மாறக்கூடும்). சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டமும் இம்மாதத்தில்தான். பற்பல திருத்தலங்களில் தேரோட்டம் சித்திரையில் நடைபெறும். வைணவத் திருக்கோயில்கள் பலவற்றிலும், சித்திரை மாதம், விமரிசையான கொண்டாட்ட காலம். திருவில்லிப்புதூரில், பத்து நாள் விழா கண்டு, சித்திரா பவுர்ணமி நாளில் (அ)ரங்கமன்னாரோடு ஆண்டாள் நாச்சியார் தேரில் பவனி வருவாள்.
சித்திரா பவுர்ணமி நாளில், சிவபெருமானை வழிபடுவதும் வெகு சிறப்பு. மருக்கொழுந்து அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் சாற்றி, சுத்தான்னம் (வெண் சாதம்) படைத்து வழிபட்டால், சகல ஐச்வரியங்களும் கிட்டும். திருநெல்வேலிப் பகுதிக்கே உரித்தான சித்திரா நதியில் நீராடி (அதுதான், நம்ம குற்றாலம் அருவியின் தோற்றுவாய் ஆறு) விரதமிருந்து திருக்குற்றால நாதரை வழிபடுவதும் விசேஷமானது.