Published : 22 Apr 2015 09:55 AM
Last Updated : 22 Apr 2015 09:55 AM

ரயில்களில் பாதுகாப்பில்லாத பயணம்: பயணிகள் புகார்

ரயில்களில் பாதுகாப்பில்லாமல் பயணம் செய்வதாகவும், பாதுகாப்பு விஷயத்தில் போலீஸாருக்கு அக்கறை இல்லை என்றும் பயணிகள் புகார் கூறியுள்ளனர்.

பெங்களூரில் இருந்து சென்னை வந்த ரயிலில், வேலூர் அருகே ஏறிய கொள்ளை கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி 3 பெண்களிடம் இருந்து 18 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. மேலும் சமீபத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மது அருந்தி, பெண் மருத்துவர் உட்பட 3 பெண்களை ஆபாசமாக பேசிய அரசியல்வாதிகள், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஆசிரியரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட போலீஸ்காரர் என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ரயில்களில் அதிகமாக நடக்கின்றன.

ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் ரயிலிலும் 3 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கடந்த 6 மாதத்துக்கு முன்பு அரக்கோணத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தின்போது ரயில்வே போலீஸார் அறிவித்தனர். ஆனால் பல எக்ஸ்பிரஸ் ரயில்களில் போலீஸார் இருப்பதில்லை.

அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் நடமாடும் காவல் நிலையம் மற்றும் பெண் கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற ரயில்வே பட்ஜெட் அறிவிப்பும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் தாங்கள் பாதுகாப்பில்லாத பயணத்தை மேற்கொள்வதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பொன்ராம் கூறும்போது, “எல்லா எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஒரு போலீஸ் காரர் கட்டாயம் இருப்பார். பிரச்சினைகள் குறித்து அவரிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தால் போதுமானது. மேற்கொண்டு விவரங்கள் தேவைப்பட்டால் போலீஸார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்வார்கள். இதற்காக ரயிலில் இருந்து இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஜிஆர்பி எனப்படும் தமிழக அரசு ரயில்வே போலீஸ் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடி உதவியும், நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.

தொலைபேசி எண்கள்

ஜிஆர்பி - 9962500500, ஆர்பிஎப் - 9003161710, இலவச ஹெல்ப்லைன் - 1322 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு ரயில் பயணிகள் புகார் கொடுக்கலாம். தமிழகத்துக்குள் பயணம் செய்யும்போது தமிழக அரசின் ஹெல்ப்லைன்(ஜிஆர்பி) எண்ணுக்கு புகார் தெரிவித்தால் உடனடி உதவி கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x