Published : 27 Apr 2015 18:32 pm

Updated : 27 Apr 2015 18:32 pm

 

Published : 27 Apr 2015 06:32 PM
Last Updated : 27 Apr 2015 06:32 PM

கோர்ட் - இந்திய நீதித்துறையின் அசடுகள்

சினிமா என்பதே காட்சி ஊடகம் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும், மிக முக்கியமாக உரையாடல் மூலம் சொல்ல வேண்டிய கதையை, அல்லது தர்க்கப்பூர்வமான சம்பவங்களை எப்படி சினிமாவாக மாற்றுவது என்பதற்கு மிக சிறந்த உதாரணம், கோர்ட் (Court) என்கிற மராத்திய திரைப்படம்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தை மூலமாக வைத்துதான் நகர்கிறது. ஆனால், ஒரு நல்ல சினிமாவுக்குரிய அத்தனை கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது.


அரசுக்கு அல்லது பொதுப்புத்திக்கு எதிராக தன்னுடைய பாடல்கள் மூலம் களப்பணியாற்றி வரும் மக்கள் பாடகர் நாராயண் காம்ப்ளே என்பவரை காவல்துறை கைது செய்கிறது. மும்பையில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் பவார் என்பவரை தன்னுடைய பாடல்கள் மூலம் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். இது உண்மைதானா, அல்லது அரசு எந்திரங்களுக்கு எதிராக கலகப் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்கள் மீது ஏவிவிடப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கா என்பதை நீதிமன்றத்தில் வாதங்கள் மூலமும், தர்க்கங்கள் மூலமும் நிரூபிக்க இன்னொரு மனித உரிமை போராளியான வழக்குரைஞர் போராடுகிறார்.

படத்தின் மிக முக்கியமான விஷயம், எவ்வித நேரடி வசனங்களும் இல்லாமல், இந்திய நீதித்துறையின் அவலங்களை சுட்டிக்காட்டுவது. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அதன் பின்னணியை நினைத்து சிரிப்பு வந்தாலும், அந்த நகைச்சுவைக்கு பின்னணியில் மிக மோசமான எந்திரமயமான வாழ்க்கை இருக்கிறது என்பதையே படம் காட்சிகள் மூலம் சொல்கிறது.

ஒரு வழக்குக்காக நீதிமன்றம் வந்திருக்கும் பெண்ணை நோக்கி, 'இன்று உங்கள் வழக்கை விசாரிக்க முடியாது' என்று நீதிபதி சொல்கிறார். 'ஏன்?' என்று அந்தப் பெண் கேட்டதற்கு, 'நீதிமன்ற உடைக் கட்டுப்பாடுகளை மீறி, நீங்கள் ஸ்லீவ்ஸ் அணிந்து வந்திருக்கிறீர்கள், எனவே விதிமுறைகளுக்கு மாறாக உங்கள் வழக்கை இன்று விசாரிக்க முடியாது' என்று சொல்லிவிடுகிறார். ஒரு நிமிடம் கூட இல்லாத, படத்தை நகர்த்தும் காட்சிதான் இது. ஆனாலும், இதன் பின்னணியில் எத்தனை மோசமான ஓர் அடிமை புத்தியும், கலாச்சாரக் கட்டுப்பாடும் இருக்கிறது. இந்தியா மாதிரியான வெப்ப பிரதேசத்தில் கூட ஆங்கிலேயர்கள் தங்கள் அலுவலகப் பணிக்காக அணிவது போன்ற உடைகளைத்தான் அணிய வேண்டும் என்று ஒரு விதிமுறை இருக்கிறது என்றால், அது எத்தனை மோசமானது. இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், இந்த விதிமுறை இன்னமும் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது என்றால், இந்திய நீதித்துறையின் ஒவ்வொரு சட்டமும் எத்தனை தூரம் வழக்கொழித்து போயிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

நகைச்சுவைக்காக எத்தனை வேண்டுமானாலும், இந்தப் படத்தில் வசனங்களை திணித்திருக்க முடியும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல், கதாப்பாத்திரங்களின் தேவைக்கேற்ப, படத்தின் மையக்கருவில் இருந்து விலகாமல், காட்சிகள் மூலம் சிரிக்க வைத்து, அதன் பின்னணியை ஆராய வைக்கும் இப்படியான காட்சிகள் படத்தில் நிறையவே இருக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், படத்தின் ஹீரோ, வில்லன் என்று இருவகையான கதாப்பாத்திரங்கள் இல்லவே இல்லை. ஒரு வழக்கு தொடர்பாக எல்லாரும் அவரவர் வேலையை செய்கிறார்கள். பொதுப்புத்தி பார்வை கொண்ட ஒரு பெண் அரசு வழக்குரைஞராகவும், மனித உரிமை போராளியாக செயல்படும் ஆண் பாதிக்கப்பட்ட தரப்பு வழக்குரஞராகவும் தங்கள் பணியை செய்கிறார்கள். வணிக ரீதியிலான படத்துக்கும், இப்படி நல்ல சினிமாவாக இருப்பதற்கும் இடையேயான வித்தியாசத்தை இங்கே உணர்ந்துக்கொள்ளலாம்.

வணிக ரீதியான படமாக இருந்தால், நிச்சயம் இதில் காவல்துறையோ, அல்லது அரசு தரப்பு வழக்குரைஞரோ எதிரிகளாக அதாவது வில்லன்களாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் அப்படி இல்லை. இதில் எல்லாரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்கிறார்கள். அதில் அவர்களின் உள்ளக்கிடைக்கை வெளிப்படுத்துகிறார்கள். இங்கேதான் காஸ்டிங் என்கிற திரைப்படத்துக்கே உரிய அருமையான ஒரு பகுதியை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அரசுத் தரப்பு வழக்குரைஞராக வரும் பெண்ணின் சராசரி சிந்தனை, குடும்ப அமைப்பு, கலாச்சாரத்தை போற்றிப் பாதுகாக்கும் தன்மை, அரசுத் தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்கிற போக்கு இவற்றை அடிப்படையாக வைத்து இவரது கதாப்பாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்றவாறு அவருக்கான காட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் மாலை நேரத்தில் தன்னுடைய மகனை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு சந்தைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதும், வார விடுமுறை நாளில் குடும்பத்தோடு, உணவகத்தில் உணவருந்திவிட்டு, மராட்டிய மாநிலம் மராட்டியர்களுக்கே என்று சித்தரிக்கும் நாடகத்தை பார்க்க செல்வதும் என அந்தப் பெண்ணின் கதாப்பாத்திரத்தை விளக்க அத்தனை தூரம் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

இதற்கு நேர் எதிராக, குடும்ப கட்டமைப்பில் இருந்து சிறிது விலகி, மனித உரிமைக்காக போராடுவது, எளிய மக்களின் நியாயங்களுக்காக வாதாடுவது என்று வினய் வோராவின் கதாப்பாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நம்பிக்கைக்கு எதிராக பேசுவதால் அவர் மீது நடத்தப்படும் தாக்குதல், பாதிக்கப்பட்ட மக்கள் பாடகர் நாராயண் காம்ப்ளேவுக்காக, தற்கொலை செய்துக்கொண்டதாக நம்பப்படும் பவாரின் வீட்டுக்கு சென்று அவர்களை தேடுவது, அவரது குடும்பத்திற்கு உதவ நினைப்பது என மிக நேர்த்தியாக இவரது மனநிலையை காட்சிகள் மூலம் விலக்கிவிடுகிறார்கள்.

பவாரின் மனைவியாக வரும் ஷர்மிளா பவாரிடம், நீதிமன்றத்தில் கேள்விகள் கேட்கப்படும்போது, தன்னுடைய கணவர் தினசரி குடிப்பார், அடிப்பார், மனிதக் கழிவுகளை அகற்றும்போது எப்படி உள்ளே நுழைவார், அதை எப்படி தன்னிடம் சொன்னார் என்று எளிய மனிதர்களின் ஆற்றாமையோடு சொல்லி முடிக்கும்போது, இது நாராயண் காம்ப்ளேவின் தவறா, அரசு எந்திரங்கள் எளிய மனிதர்களை மனிதர்களாக நடத்தாமல், அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளை கூட வழங்காமல், அவர்களின் உயிரை பலி வாங்குகிறதா என்கிற கேள்வியே பார்வையாளனின் மனதில் எழுகிறது. படத்தின் மிக முக்கியமான காட்சிகள் ஷர்மிளா பவார் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் காட்சிகள்.

படத்தின் மையமே நீதிமன்றமும், வாதங்களுமேதான். ஆனால் நீதிமன்றக் காட்சிகளுக்கு இடையே வழக்கில் தொடர்புடைய ஒவ்வொருவரின் இயல்பு வாழ்க்கையையும் பதிவு செய்வது சினிமாவின் மொழிக்காக மட்டுமல்ல, அவர்களின் கதாப்பாத்திர நீதி உணர்த்தளுக்காகவும்தான்.காம்லேவுக்கு பெயில் கொடுத்துவிட்டு, பின்னர் மீண்டும் அதனை ரத்து செய்யும்போது, பாதிக்கப்பட்ட தரப்பு வழக்குரைஞர் இன்றுதான் நீதிமன்றத்திற்கு இறுதி வேலைநாள். நாளைமுதல் நீண்ட விடுமுறையில் செல்கிறோம். எனவே இவருக்கு இப்போது பெயில் அவசியம் தேவை என்று வாதாடுதவதைக் கண்ட நீதிபதி, விடுமுறை செசன் நீதிமன்றத்திற்குதான். நீங்கள் உயர்நீதிமன்றத்தில் பெயில் மனு தாக்கல் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு நீதிமன்றத்தின் வேலையை முடித்து வைக்கிறார். இந்தக் காட்சியும், அதற்கு அடுத்து நீதிமன்ற அறை மட்டுமே காண்பிக்கப்படும் காட்சியும் மொத்தம் இரண்டு நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்ற அறையை ஒரு நிமிடத்திற்கும் மேலாக காட்ட வேண்டிய அவசியமென்ன? மிக சாதாரண சினிமா மொழிதான். அதற்கடுத்து நீதிமன்றத்திற்கு நீண்ட விடுமுறை இருக்கிறது, தவிர பாதிக்கப்பட்டவரின் மனநிலையில் இருந்து அந்தக் காட்சி நகர்கிறது. கோடை விடுமுறையில் நீதிபதி என்ன செய்கிறார் என்கிற காட்சிகளோடு படம் முடிகிறது. இந்த இயல்புத் தன்மைதான் கோர்ட் திரைப்படத்தை மிக முக்கியமான படமான முன்னிறுத்துகிறது.

பார்வையாளனிடம் யாரையும் எதிரிகளாக முன்னிறுத்தவில்லை, யாரையும் ஹீரோவாக முன்னிறுத்தவில்லை. இத்தனைக்கும் நாராயன் காம்ப்ளே மக்களுக்காக கலகக் குரல் கொடுக்கிறார், தொடர்ச்சியாக கைது செய்யப்படுகிறார், கம்யூனிச, அம்பேத்கர் சிந்தனையில் ஈடுபடுகிறார். அவருக்காக வாதாடும் வோரா மனித உர்மைப் போராளியாகவும், எளிய மனிதர்களின் நியாயங்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார். இவர்கள் இருவரையும் ஹீரோவாக முன்வைத்து படத்தை நகர்த்தியிருந்தால், படத்தின் வணிகத் தன்மை கூடியிருக்கும். ஆனால் சினிமா என்கிற ஊடக மொழி சிதைந்திருக்கும். நலிந்துப் போன எளிய மக்களை நோக்கிய நகைச்சுவை கேலிகள் இல்லை, வில்லன்கள் அல்லது எதிரிகள் யாரும் கதாப்பாத்திர சித்தரிப்பில் இல்லை. யாரையும் காயப்படுத்தாமல், நம்மை மீறி சிரிக்கவைத்து, அதன் பின்னணியில் சிந்தனையையும் வைத்து, இறுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிந்திக்க வைக்கும் இந்தத் திரைப்படம்தான் உண்மையான சினிமா. மக்களுக்கான சினிமா.

தமிழ் ஸ்டுடியோ அருண் - தொடர்புக்கு thamizhstudio@gmail.com

கோர்ட்மராட்டிய சினிமாமராட்டிய படம்சினிமா பார்வை

You May Like

More From This Category

More From this Author