

அகங்காரம் என்பது பற்றியும், அதன் செயல்கள் பற்றியும், ஆத்மா பற்றியும் இங்கு பேசப்படுகிறது.
சுவாசக்காற்றை உள்ளே இழுத்தல், வெளியே விடுதல், கொட்டாவி விடுதல், தும்மல் போன்றவை பிராணன் முதலிய ஐந்தின் இயல்புகள். பசியும் தாகமும் பிராணனது தர்மமே. அபானன் முதலிய மற்றவற்றுக்கு இதில் சம்பந்தம் இல்லை. அந்தக்கரணம் மட்டும் சிதாபாச ஒளியினால் கண், காது, மூக்கு, மெய், வாய் ஆகிய இந்திரியங்களோடு பொருந்தி, சாரீரத்தை உறுதியாக `நான்’ என்று அபிமானம் பாராட்டும். அந்த அபிமானமே அகங்காரம். இது அந்தக்கரணத்தின் தொழிலே.
அந்த அகங்கார வடிவான அந்தக்கரணமே காரியங்களைச் செய்யும் கர்த்தா. அது சுகத்தையும் துக்கத்தையும் அனுபவிப்பது. ஸத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் ஆகியவற்றின் சேர்க்கையால் ஜாக்ரத், ஸ்வப்ந, ஸூஹூப்தி என்ற மூன்று நிலைகளையும் அடைகிறது. ஸத்வத்தினால் சொப்பனத்தையும், ரஜோகுணத்தால் ஜாக்ரத்தையும், தமோ குணத்தால் சுஷூப்தியையும் அடைகிறது.
அனுகூலமான நிலைவந்தால் சுகத்தையும், பிரதிகூலநிலை ஏற்படின் கஷ்டத்தையும் அடைகிறது. ஆகவே சுகதுக்கங்கள் அகங்காரத்தின் அநுபவமே; ஆத்மாவினுடையது அன்று. வெளி விஷயங்களில் ஒன்றிலாவது சுகம் என்பது கிடையாது. ஆனால் அவற்றினின்று வருகின்ற சுகம் உண்மையில் ஆத்மாவிலிருந்தே வருகின்றது. ஆகவே அவை தாமே சுகம் ஆகா. சுகமும் ஆத்மாவும் வேறன்று. ஆத்ம சுகம் ஒன்றே உள்ளது. உண்மையில் எண்ணங்கள் பூர்த்தியாகும் போதெல்லாம் மனம் தன் உற்பத்தித்தானமாகிய ஆத்மாவிற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது.
விரும்பிய பொருள் கிடைத்தபோதும், வெறுத்த பொருளுக்குக் கேடு உண்டாகும்போதும் மனமாகிய அகங்காரம் அந்தர்முகப்பட்டு ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது. தூக்கம், நிர்விகற்ப சமாதி, மூர்ச்சைக் காலங்களிலும் மனம் தன் யதாஸ்தானமாகிய ஆத்மாவில் அகமுகப்பட்டு சுகரூபமாகத் திகழ்கிறது. இவ்வாறு ஆத்ம சுகத்தை அனுபவிப்பதினாலேயே யாவர்க்கும் தம்மிடத்திலேயே அத்யந்தம் பிரியம் உண்டாகிறது.
இதனால் ஆத்மாவில் ஒரு சிறிதும் துக்கம் இல்லை என்பது உறுதியாகிறது. ஆகவே வெளி விஷயங்களிலிருந்து வருகின்ற சுகமும்கூட மனம் அகமுகப்படுவதால் உண்மையில் ஆத்மாவிலிருந்தே வருகிறது. நாம் அவிவேகத்தால் பாஹ்ய விஷயங்களில் சுகம் உள்ளதாக நினைத்து அவற்றை அபிமானித்து இறுதியில் துக்கத்தை அடைகிறோம். ஆகவே சுகதுக்கங்கள் அகங்கார தர்மம் என்றும், இப்படி சொல்லப்படுவதற்கு சுருதி, பிரத்யக்ஷம், ஐதீகம், அனுமானம் ஆகியவை பிரமாணங்கள் என்றும் கூறுகிறார் ஸ்ரீ சங்கரர்.
ஆதி சங்கரர் அருளிய விவேக சூடாமணி
தமிழில்: தமிழ் அநுவாதம்
(விவேக சூடாமணி, திருக்கு திருசிய விவேகம்) பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி.
விளக்கவுரை: வித்வான் ஹெச். வைத்தியநாதன், கே. ஸ்ரீராம்.
வெளியீடு: ரமண பக்த ஸமாஜம், ஜி2, ஷிர்டி க்ரஹா,
42/18, சம்பங்கி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600 033.
விலை: ரூ.200/-