எல்லாருக்கும் ஆசிர்வாதம் ஒன்றே

எல்லாருக்கும் ஆசிர்வாதம் ஒன்றே
Updated on
1 min read

இயேசு கிறிஸ்து சொன்ன கதை இது. அவருக்கு மிகவும் விருப்பமான கதையும் கூட. ஒரு பணக்காரனுக்குத் தனது தோட்டத்தில் வேலை செய்வதற்கு பணியாட்கள் தேவைப்பட்டனர். அவன் தனது வேலையாளை அழைத்து சந்தைக்குப் போய் ஆட்களைத் திரட்டிவருமாறு கூறினார். அப்போது சந்தையில் இருந்த கூலியாட்கள் தோட்டத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கினர். மதிய நேரத்தில் சில கூலியாட்கள் செய்தி கேட்டு வேலைக்கு வந்தனர். இன்னும் சில பணியாட்கள் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் தோட்டவேலைக்கு வந்தனர். எல்லாரையும் அந்தப் பணக்கார எஜமானர் வேலைக்கு எடுத்துக்கொண்டார்.

பொழுது இருண்டது. தோட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரையும் அழைத்தார் அந்தப் பணக்காரர். எல்லாருக்கும் சமமாக கூலி வழங்கினார்.

காலையிலிருந்து தோட்டத்தில வேலை செய்தவர்கள் கடுமையாக ஏமாற்றம் அடைந்தனர். “என்ன அநியாயம் இது! ஏன் இப்படி செய்கிறீர்கள். நாங்கள் காலையிலிருந்து பணிபுரிகிறோம். இவர்களில் சிலர் மதியப்பொழுதுதான் வேலைக்கே வந்தனர். சிலரோ இப்போதுதான் எங்களுடன் வேலையில் சேர்ந்துகொண்டனர். ஒருத் துளி வேலை கூட செய்யவில்லை. எல்லாருக்கும் ஒரே கூலியா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

அந்த செல்வந்தரோ சிரித்தார். “பிறரைப் பற்றி சிந்திக்க வேண்டாம். நான் உங்களுக்குக் கொடுத்த பணம் போதுமானதா என்று மட்டும் சொல்லுங்கள்” என்றார். “நாங்கள் வேலை செய்ததை விட அதிகபட்ச கூலி இது. ஆனாலும் நீங்கள் செய்தது அநியாயம்” என்றனர் தொழிலாளர்கள்.

“ என்னிடம் அதிக செல்வம் இருக்கிறது. அதிலிருந்துதான் அவர்களுக்குக் கொடுத்தேன். நீங்கள் அதுகுறித்துக் கவலைப்பட வேண்டாம். அவர்கள் வேலை செய்ததற்காக அந்தப் பணத்தைத் தரவில்லை. என்னிடம் உபரியான பணம் இருப்பதால் தருகிறேன்” என்று சொன்னார்.

சிலர் இறைமையை அடைய கடுமையாக உழைக்கின்றனர். சிலர் மதிய நேரம் வரும் தொழிலாளர்களைப் போல, அஸ்தம நேரத்தில் வருபவர்களைப் போல வந்து சீக்கிரமே சொர்க்கத்தை அடைந்துவிடுகின்றனர். அதனால் கடுமையாக உழைத்தவர்கள் விமர்சிக்கின்றனர்.

கடவுளின் எல்லையற்ற கஜானாவான சொர்க்கத்தில் எல்லாருக்கும் இடம் உண்டு. அங்கே நரகம் என்ற ஒன்று இருக்கமுடியாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in