

மேலை நாட்டினர் பொதுவாக மனிதனின் உடல் விஷயங்களில் அதிக அக்கறை காட்டினர். இந்தியாவின் பக்தி ஆச்சாரியர்கள் ஆன்மாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த வேறுபாடு கீழ்த்திசைக்கும் மேல்திசைக்கும் இயல்பாக அமைந்துள்ளதுபோல் தோன்றுகிறது. அன்றாடப் பேச்சுவார்த்தைகளிலும் இதையே நாம் காண்கிறோம். இங்கிலாந்தில் மரணத்தைக் குறிப்பிடும்போது, அவன் ஆவியைத் துறக்கிறான் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலோ, அவன் உடலைத் துறக்கிறான் என்று குறிப்பிடுகின்றனர். மனிதன் என்பவன் உடல், அதில் ஆன்மா உள்ளது என்பது முதல் கருத்து. மனிதன் ஆன்மா, அந்த ஆன்மாவிற்கு உடல் உண்டு என்பது இரண்டாவது கருத்து.
மனிதன் ஓர் உடல், அதில் ஆவி உள்ளது என்ற கொள்கையினர் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மனிதன் ஏன் வாழ்கிறான் என்று அவர்களைக் கேட்டால், உடைமைகள், சொத்து, உறவு முதலியவற்றால் இன்பம் பெறுவதற்கே என்று அவர்கள் பதில் சொல்வார்கள்.
இதைவிட மேலானது ஒன்று உள்ளது என்பதைச் சொன்னாலும் மனிதன் புரிந்துகொள்ள மாட்டான். அதனை அவனால் கனவுகூடக் காண முடியாது. இந்த இன்ப நுகர்ச்சியின் தொடர்ச்சியே எதிர்கால வாழ்க்கை என்பதுதான் அவனது கருத்து. அந்த இன்பங்களை அனுபவித்தவாறு எப்போதும் இங்கேயே தொடர்ந்து இருக்க முடியவில்லை, உலகை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்று அவன் மிகவும் வருந்துகிறான்.
எனவே எப்படியாவது இதே இன்பம் தொடர்ந்து கிடைக்கக்கூடிய ஓரிடத்துக்குத் தான் போகக்கூடுமென்று கருதுகிறான். இந்த இலக்கை அடைய கடவுள்தான் வழி. எனவே அவரை வழிபட விரும்புகிறான். அவனுடைய வாழ்க்கையின் லட்சியம் புலனின்பம்தான். இந்த இன்பங்களை நீண்டகாலக் குத்தகைக்குத் தருபவர் இறைவன் என்று நம்புவதால் அவரை வழிபடுகிறான். ஆனால் உண்மையில் வாழ்க்கையின் லட்சியம் இறைவன். அவனுக்கு அப்பாற்பட்டது வேறு ஒன்றுமில்லை.
இப்பொழுது அனுபவிக்கும் புலனின்பங்கள், எதிர்காலத்தில் மேலான ஒன்றைப் பெறுவோம் என்ற நோக்குடன் தற்காலிகமாக அனுபவித்துக்கொண்டிருப்பவையே – இதுவே இந்தியர்களின் கருத்து.