

இந்தியர்களின் முக்கியமான கருத்து மோட்சம்; மேல் நாட்டினருக்கு முக்கியமானது தர்மம். நாம் விரும்புவது முக்தி. அவர்கள் வேண்டுவது தர்மம். இங்கே தர்மம் என்ற சொல் மீமாம்ஸகர்களின் கருத்துப்படி உபயோகிக்கப்படுகிறது. தர்மம் என்றால் என்ன? மனிதனை இந்த உலகிலாவது மறு உலகிலாவது இன்பத்தைத் தேட வைப்பது தர்மம் எனப்படும்.
தர்மம், செயல் புரிவதன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்பத்தை நோக்கி இரவுபகலாக மனிதனை ஓடவைத்து, இன்பத்துக்காக வேலை செய்ய வைப்பது தர்மமாகும்.
முக்தி என்றால் என்ன? இந்த வாழ்க்கையில் காணப்படும் இன்பம்கூட அடிமைத்தனமாகும். வரப்போகிற வாழ்க்கையின் இன்பமும் அப்படியேதான். ஏனெனில் இந்த உலகமோ மறு உலகமோ இயற்கையின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. ஒரு வித்தியாசம் என்றால் மறு உலக இன்பம் தங்கச் சங்கிலியாலான விலங்கு ஆகும். அன்றியும் இன்பம் எங்கே இருந்தாலும் சரி, இயற்கையின் சட்டத்துக்கு உட்பட்டதால், அது சாவுக்கும் உட்பட்டதாகும்.
முடிவின்றி அது நீடிக்காது. ஆகவே மனிதன் முக்தன் என ஆக, வீடுபெற விழைய வேண்டும். உடலாகிய பந்தத்தை மீறிக் கடந்து அவன் அப்பால் செல்ல வேண்டும். அடிமைத்தனம் கூடாது. இந்த மோட்சப் பாதை பாரதத்தில் மட்டுமே தான் உள்ளது. வேறெங்குமில்லை.
தர்மம், முக்தியுடன் பொருந்தி வாழ்ந்த ஒரு காலம் பாரத நாட்டில் இருந்தது. யுதிஷ்டிரன், அர்ஜுனன், துரியோதனன், பீஷ்மர், கர்ணன் போன்று தர்மத்தை வழிபட்டவர்கள் இருந்தனர். அவர்களுடன் கூடவே முக்திக்காக விழைந்த வியாசர், சுகர், ஜனகர் போன்றோரும் இருந்தனர்.