

ஒருநாள் பாக்தாத்தின் பெரும் வணிகர் ஒருவர் இறைஞானி பஹ்லூலிடம் வந்தார்.
“அறிஞர் பெருமானே!” என்று மரியாதையுடன் அழைத்தார்.
“எனது வணிகம் பெருகி செழிக்க தாங்கள்தான் நல்ல உபதேசம் செய்ய வேண்டும்!” என்று வேண்டி நின்றார்.
“இரும்பு மற்றும் பருத்தியை கொள்முதல் செய்து விற்பனை செய்யுங்கள்!” என்றார் பஹ்லூல் அந்த வணிகரிடம்.
பஹ்லூல் சொன்னபடியே அந்த வணிகர் பெருமளவு செல்வத்தைத் தமது வணிகத்தில் முதலீடு செய்தார். இரும்பையும், பருத்தியையும் வாங்கிக் கையிருப்பில் வைத்துக் கொண்டு விற்பனை செய்ய ஆரம்பித்தார். வெகு விரைவிலேயே சரக்குகள் விற்றுத் தீர்ந்து நல்ல லாபமும் அவருக்குக் கிடைத்தது.
மீண்டும் அந்த வணிகர் பஹ்லூலிடம் வந்தார். அலட்சியமாகப் பார்த்தார்.
“கிறுக்கு பஹ்லூலே! என் வணிகத்தில் எதைக் கொள்முதல் செய்தால் கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்!” என்று ஆணவத்துடன் கேட்டார்.
பஹ்லூல் தமது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளாமல், “வெங்காயமும், தர்பூசணியும் கொள்முதல் செய்து விற்பனை செய்யுங்கள்!” என்றார் அமைதியாக.
அங்கிருந்து சென்ற அந்த வணிகர் தனது மொத்த செல்வத்தையும், வெங்காயம் மற்றும் தர்பூசணியில் கொள்முதல் செய்தார். வெகு விரைவிலேயே வெங்காயமும், தர்பூசணியும் அழுகிப்போய் துர்நாற்றமடிக்க ஆரம்பித்தது.
அந்த வணிகரின் மொத்தக் கொள்முதலும் விரயமாகி அவருக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.
பஹ்லூலைத் தேடிச் சென்ற வணிகர், “எனது வணிகம் செழிக்க அறிவுரை வேண்டி வந்தபோது, முதல்முறை… இரும்பு மற்றும் பருத்தியையும் கொள்முதல் செய்து விற்கச் சொன்னீர்கள். நானும் அப்படியே செய்து பெருமளவு ஆதாயமும் அடைந்தேன்.
ஆனால், இரண்டாவது முறை அறிவுரை கேட்டபோது, நீங்கள் சொன்ன வெங்காயம், தர்பூசணியைக் கொள்முதல் செய்து மொத்த செல்வத்தையும் இழந்து நிற்கிறேனே நான்” என்று புலம்பலானார்.
“சகோதரரே! முதல்முறை நீங்கள் அறிவுரை வேண்டிவந்தது அறிஞர் பஹ்லூலிடம். அதற்கேற்பவே அறிவுரையும் கிடைத்தது. லாபமும் அடைந்தீர்கள். ஆனால், இரண்டாவது முறை நீங்கள் அறிவுரை வேண்டி நின்றது, கிறுக்கனிடம்.
கிறுக்கன் பஹ்லூலிடம் கிறுக்குத்தனமான அறிவுரையன்றி வேறு எதைதான் எதிர்பார்த்தீர்கள்?” என்று அமைதியுடன் கேட்டார் பஹ்லூல்.
தனது மடத்தனமான நடத்தையை எண்ணி அந்த வணிகர் தலைகுனிந்தவாறே அங்கிருந்து சென்றார்.