Published : 05 Mar 2015 11:39 AM
Last Updated : 05 Mar 2015 11:39 AM

சகர சக்கரவர்த்தி

இந்து புராணங்களில் சொல்லப்படும் பகீரதன் கதை,சமண மதத்தில் வேறுவிதமாகக் கூறப்படுகிறது.வத்சகாவதி நாட்டின் மன்னன் ஜெயசேனன். அவனுக்கு ரதிசேனன், திருதிசேனன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். ரதிசேனன் திடீரெனக் காலமாகிவிட்டான்.

மனமுடைந்த அரசன் வாழ்க்கையில் வெறுப்புற்று ஆட்சியைத் திருதிசேனனிடம் ஒப்படைத்தான்.பின் மகாருதன் என்பவனுடன் சேர்ந்து துறவேற்றான். இருவரும் வடக்கிருத்தல் மேற்கொண்டு உடலைத் துறந்துனர். ஜெயசேனன், மகாபலன் எனும் தேவனாகவும் மகாருதன், மணிகேது எனும் தேவனாகவும் பிறந்தனர்.

இருவரும் யார் முதலில் பூலோகத்தில் பிறந்தாலும், மற்றவர் அவருக்கு ஜைனதருமத்தை உரைக்க உறுதி கொண்டனர். முதலில் மகாபலன் உயிர்விட, அயோத்தி மன்னன் சமுத்திரவிஜயனுக்கும் அவன் மனைவி சுபாவுக்கும் சகரன் எனும் மகனாகப் பிறந்தான். சகரன் தந்தைக்குப் பின் பேரரசனானன்

தேவன் மணிகேது, அவதிஞானத்தால் மகாபலன்தான் சகர சக்கர வர்த்தி என உணர்ந்தான். சகரசக்கரவர்த்தியிடம் சென்று தேவலோகத்தில் எடுத்த உறுதிமொழியை நினைவுபடுத்தி ஜைனதருமத்தைப் போதித்தான். துறவும் ஏற்கக் கூறினான். சகரன் ஏற்கவில்லை.

மறுபடியும் மணிகேது, அழகிய முனிவர் வேடந்தரித்து ஜினாலயத்தில் இருந்தான்.அங்கு சகரன் முனிவரைப் பார்த்து, அழகிய வடிவில் உள்ளவர் துறவேற்றதன் காரணம் யாதெனக் கேட்டான். முனிவர், தளிர்இலை போன்ற இளமை நிலையற்றது.ஓட்டைக் குடத்திலுள்ள நீர் எப்போதும் குறைந்துக் கொண்டே இருப்பதுபோல் வயது குறைந்துகொண்டே இருக்கும்.

இவ்வுடல் அசுத்தமானது. மீண்டும் மீண்டும் பிறந்து இன்னல் அடையக் கூடாது.அதனால் துறவு ஏற்றதாகக் கூறினான். சகரன் மனம் தெளிந்தாலும் குடும்பப் பாசத்தால் துறவை விரும்பவில்லை.

மகன்களுக்கு இடப்பட்ட ஆணை

சகரனின் மகன்கள் ஒருநாள் தங்கள் திறமையைக்காட்ட ஏதாவது சொல்லுங்கள் என்று சக்கரவர்த்தியிடம் பிடிவாதம் செய்தனர். அதற்கு சகரன், கைலாசத்தில் பரதசக்கரவர்த்தி, தீர்த்தங்கரர்களின் சிலைகளை அமைத்துள்ளார்.அவர் மகன் அர்க்ககீர்த்தி எண்வகைத்தலம் ஏற்படுத்தியுள்ளார்.அவற்றிற்கு கங்கை நீரால் அகழி அமைக்கவும் என்றார்.

சகரனின் மகன்கள் ஒருநாள் தங்கள் திறமையைக்காட்ட ஏதாவது சொல்லுங்கள் என்று சக்கரவர்த்தியிடம் பிடிவாதம் செய்தனர். அதற்கு சகரன், கைலாசத்தில் பரதசக்கரவர்த்தி, தீர்த்தங்கரர்களின் சிலைகளை அமைத்துள்ளார்.அவர் மகன் அர்க்ககீர்த்தி எண்வகைத்தலம் ஏற்படுத்தியுள்ளார்.அவற்றிற்கு கங்கை நீரால் அகழி அமைக்கவும் என்றார்.

அவ்வாறே மகன்கள் அகழி வெட்ட, மணிகேதுதேவன் ஒரு பெருநாகமாகத் தோன்றித் தன் கண்களால் அவர்களை எரித்தான். பின் மணிகேது, கிழவேடத்தோடு சகரனிடம் சென்றான். தன் மகனை எமன் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அவனை மீட்டுத்தரும்படியும் வேண்டினான்.

சக்கரவர்த்தியோ, உயிர்களுக்கு இறப்பு நியதியே.எனவே வருத்தத்தை விட்டு ஜைனதீட்சை கைக்கொள்ள அறிவுறுத்தினான்.உடனே கிழவன், அரசனிடம் அவனின் பிள்ளைகள் இறந்ததைக்கூறி, அரசனை வாழ்வைத் துறந்து தீட்சை பெறுக என்றான். மனமுடைந்த அரசன், விதர்ப்பமகாதேவியின் மகனான பகீரதனுக்கு அரச பதவியைத் தந்துவிட்டு ஜைனதீட்சை ஏற்றான்.

மாயக்கிழவன், பகீரதனிடம் கங்கை நீரை உன் சகோதரர்களைத் தொடசெய்தால் அவர்கள் உயிர் பெறுவர் என்றான். பகீரதனும் அவ்வாறே செய்ய அனைவரும் உயிர் பெற்றனர். கங்கை ‘பகீரதி’ எனப் பெயர் பெற்றது.

பகீரதன் தன் தந்தை முக்தி அடைந்ததைக் கேட்டு தானும் துறவு ஏற்றான். ஒற்றைக்காலில் நின்று கங்கைக்கரையில் கடுந்தவம் செய்தான்.அவன் தவவலிமையைக் கண்ட தேவேந்திரன் பாற்கடல் நீரால் அவன் திருவடிகளில் அபிஷேகம் செய்தான். அந்நீர் கங்கையில் பட்டதும் கங்கை புனிதமானது.

இச்செய்தி ஸ்ரீ புராணத்தில் அஜித தீர்த்தங்கரர் வரலாற்றிலும் ஜீவசம்போதனை நூலிலும் உள்ளது. இக்கதையே மாமல்லபுரத்தில் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளதாக மயிலை சீனி,வேங்கடசாமி ‘சமயங்கள் வளர்த்த தமிழ்’புத்தகத்தில் ஆய்ந்து எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x