

தமிழ் நாடக உலகில் பாம்பே ஞானம் மற்றும் அவரது ‘மஹாலக்ஷ்மி மகளிர் குழு’வின் நாடகங்கள் அவற்றின் வித்தியாசமான தன்மைக்காக ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றவை. பாம்பே ஞானத்தின் நாடகங்களில் முழுதும் பெண்கள் மட்டுமே மேடையில் தோன்றி நடிக்கின்றனர். ஆண் கதாபாத்திரங்களையும் பெண் நடிகர்களே ஏற்று நடிக்கிறார்கள்.
அக்குழுவின் சமீபத்திய நாடகம் ‘போதேந்திராள்' பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்கள் மட்டுமே நடிக்கும் இந்த நாடகம் நாடக உலகில் மேலும் ஒரு புதுமையைப் புகுத்தியுள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வசனங்கள் பின்னணியில் ஒலிக்க, நடிகர்கள் அதற்கேற்ப வாயசைத்து நடித்தார்கள். ஆண் கதாபத்திரங்களுக்கான வசனங்கள் ஆண்களின் குரல்களிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது. பெண்களே ஆண்களின் பாத்திரங்களை ஏற்ற நிலையில் இது நாடகத்திற்கு ஒரு நம்பகத்தன்மையை அளித்தது.
பாம்பே ஞானம் குழுவினர் தமது அடுத்த தயாரிப்பான ‘ஆதிசங்கரர்’ நாடகத்தின் ஒத்திகையில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த நாடகம் உருவான கதையை ஞானம் நம்முடம் பகிர்ந்துகொண்டார்.
“போதேந்திராள் நாடகத்தினைப் பற்றிக் கேள்விப்பட்டு எங்கள் குழுவிற்கு காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருட்பிரசாதம் வழங்கினார். முழுதும் பெண்களாலேயே நடத்தப்படும் ஆன்மிக நாடகத்திற்கு மடத்தின் ஆசிகள் கிடைக்குமோ என்று பயந்துகொண்டிருந்த எங்களுக்குப் பெரியவரிடமிருந்து கிடைத்த ஆசி மேலும் தெம்பூட்டியது. நேரிலேயே ஆசிகளைப் பெற்று வரலாமென்று முடிவு செய்து எல்லாரும் காஞ்சிக்குப் பயணித்தோம்.
பெரியவர்களை நமஸ்கரித்து எழுந்தபொழுது நிறைய குங்குமத்தினை ஒரு புத்தகத்தின் மேல் இட்டு வழங்கி உங்களின் அடுத்த நாடகத்திற்கான கருத்து இந்த புத்தகத்தில் உள்ளது என்று அவர் கூறினார். குங்குமத்தினை விலக்கிப் பார்த்தால் ‘ஆதிசங்கரர்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. எங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பானது. ஒன்று எங்களின் போதேந்திராள் நாடகத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது, இரண்டு அடுத்த நாடகத்திற்கான விதையையும் பெரியவரே விதைத்தது” என்று ஒரு நாடகக் காட்சிபோல் அந்த அனுபவத்தை விவரித்தார் பாம்பே ஞானம்.
நாடகத்திற்கான வேலைகள் அதி வேகமாக நடைபெற்றுவருகின்றன. ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி சென்னை கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பாக நாரத கான ஸபாவின் ஸத்குரு ஞானானந்தா அரங்கில் நுழைவுக் கட்டணம் ஏதுமின்றி முதல் முறையாக இந்நாடகத்தை மேடையேற்றவுள்ளார்கள்.
“ஆதிசங்கரரின் வாழ்க்கையையும், அவரருளிய பஜ கோவிந்தம் தொகுப்பிலிருந்து சில பகுதிகளையும் மேடையில் சித்தரித்துளளோம்” என்று கூறும் பாம்பே ஞானம், “மஹா பெரியவா என்று எல்லோராலும் அழைக்கப்படும் காஞ்சி மஹா முனிவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்திய, இன்றளவும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் லீலைகளைப் பற்றியும் நாடகத்தில் காட்சிகளாக அமைத்துள்ளோம். வழக்கம் போல் பின்னணி இசைப் பணியை கிரிதரன் (வாதவூரன் புகழ்) ஏற்றுள்ளார்” என்றும் குறிப்பிடுகிறார்.
தயாரிப்புக்கான செலவுகள் ஏராளமாக உள்ள நிலையில், சில நிறுவனங்கள் தங்களால் இயன்ற பொருளுதவியைக் கொடுத்துள்ளார்கள் என்றும் ஞானம் தெரிவிக்கிறார். நாடகத்தில் பங்கேற்கும் கலைஞர்கள் இலவசமாக நடிப்பதுடன், தங்களால் முடிந்த அளவு உதவியும் செய்துள்ளார்களாம். இந்நாடகத்தினைப் பல இடங்களில் மேடையேற்றத் திட்டமிட்டுள்ளார்கள்.