இஸ்லாம் | வாழ்வியல் - கொடுத்தால் கிடைக்கும்

இஸ்லாம் | வாழ்வியல் - கொடுத்தால் கிடைக்கும்
Updated on
2 min read

“இறைவனின் தூதரே! ஒருவர் எனது பேரீச்சம் பழத்தோட்டத்தை எடுத்துக் கொண்டார். அதை நீங்கள்தான் எனக்கு வாங்கித் தர வேண்டும்.” கண்ணீர் பொங்க அழுதவாறு வந்தான் ஓர் அநாதைச் சிறுவன்.

“அழாதே மகனே.. வா.. வந்து இப்படி உட்கார். யார் உனது தோட்டத்தைப் பறித்துக் கொண்டார்கள்? என்ன நடந்தது என்று இப்போது விவரமாக சொல்!” சிறுவனை அருகில் இருத்திக் கொண்ட நபிகளார், அவன் சொன்னதைப் பொறுமையுடன் கேட்டார்.

அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து அவரிடமும் விசாரித்தார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நபிகளார் அநாதைச் சிறுவனுக்குச் சாதகமாக எந்த நியாயமும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டார்.

தீர்ப்பைக் கேட்டதும் சிறுவன் அழ ஆரம்பித்தான்.

இதைக் கண்டு நபிகளார் மிகவும் வேதனைப்பட்டார். அவரது கண்கள் கலங்கிவிட்டன.

தோட்ட உரிமையாளரிடம் நபிகளார், “சகோதரரே! உங்கள் வாதத்தில் நியாயம் இருந்தது. சட்டப்படி தோட்டம் உங்களுடையதுதான்! ஆனால். பாவம். இந்தச் சிறுவனைப் பாருங்கள். யாருமில்லாத அனாதைச் சிறுவன். அதனால் தோட்டத்தை இவனுக்கே கொடுத்துவிடுங்கள். இதற்குப் பதிலாக உங்களுக்கு இறைவன் மறுமையில் சொர்க்கத்தில் ஒரு தோட்டத்தை அளிப்பான்!” என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், தோட்டக்காரர் அதை ஏற்கவில்லை.

அங்கு குழுமியிருந்தோரில் நபியின் தோழர் அப்வாலித் ஹத்தாவும் இருந்தார். நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த அவர், தோட்டக்காரரை தனியே அழைத்துச் சென்றார். “சகோதரரே! தோட்டத்தை இந்த அனாதைச் சிறுவனுக்கு கொடுத்துவிடுங்கள். அதற்குப் பதிலாக நான் எனது தோட்டங்களில் மிகச் சிறந்த ஒன்றை உங்களுக்குத் தருகிறேன்! தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்!” என்று கெஞ்ச ஆரம்பித்தார்.

தனது தோட்டத்தைவிட அப்வாலித் ஹத்தாவின் தோட்டம் செழிப்பானது! குலை குலையாக உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் காய்க்கக் கூடியது என்பதை அறிந்த தோட்டத்தின் உரிமையாளர் அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

அப்வாலித் ஹத்தாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நேரே நபிகளாரிடம் சென்றவர், “இறைவனின் தூதரே! எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?” என்றார் பணிவோடு.

“தாராளமாகக் கேளுங்கள் ஹத்தாஹ்” என்றார் நபிகளார் புன்னகையுடன்.

“இறைவனின் தூதரே! அனாதைச் சிறுவனுக்கு தரும்படி தாங்கள் கேட்ட தோட்டத்தை நான் வாங்கி அனாதைச் சிறுவனுக்குக் கொடுத்தால், எனக்கு மறுமையில், சொர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்குமா?” என்றார்.

கண்களில் மகிழ்ச்சி பொங்க நபிகளார் சொன்னார். “நிச்சயமாக ஹத்தா! நிச்சயமாக உமக்கும் ஒரு தோட்டம் சுவனத்தில் கிடைக்கும்!”

“அப்படியென்றால்.. நான் எனது தோட்டத்தை கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்த சிறுவன் கேட்கும் தோட்டத்தை வாங்கி கொடுத்துவிடுகின்றேன். இதற்கு தாங்களே சாட்சி!” என்றார் அப்வாலித் ஹத்தா.

அதைக் கேட்டு நபி பெருமானார் பெரிதும் மகிழ்ந்தார். ‘அனாதைகளுக்கு நன்மை பயக்கக்கூடிய செயல்முறையை மேற்கொள்வதே உத்தமமாகும்!’ என்ற திருக்குர்ஆனின் போதனையை எடுத்துரைத்து, தமது தோழரைக் கட்டித் தழுவிப் பாராட்டினார்.

தோட்டம் திரும்பவும் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த அனாதைச் சிறுவனும் சிரித்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in