

தவக்காலம் என்பது புனிதத்தின் காலம் என்றும் இறை இயேசுவோடு, உறவை பலப்படுத்துகின்ற காலம் எனவும் கூறுவர். அவ்வகையில் இயேசு கிறிஸ் துவை இவ்வுலகில் அன்பு செய்து தன் மடியில் கருவாக இடம்கொடுத்த அன்னை மரியாளைப் பற்றியும் சிந்திக்கின்ற காலமாகவும் தவக்காலம் அமைந்துள்ளது. நாம் நாற்பது நாட்கள் மட்டுமே ஆண்டவரும் ரட்சகருமான இயேசுவுக்காக நோன்பும் தவமும் செபமும் செய்து நம்மை நாமே சுத்திகரித்துக் கொள்கின்ற காலமாக அமைத்துக் கொள்கிறோம். ஆனால் இயேசுவைக் கருவில் சுமந்த நாள் முதற்கொண்டு அவர் கல்லறையில் அடக்கம் செய்கின்ற நாள்வரை தனது சொல்லொண்ணாத் துயரங்களை மன ஆழத்தில் வைத்துக் கொண்டிருந்தார். அன்னையின் ஏழு பிரதான துயரங்களைக் காண்போம்.
சிமியோனின் இறைவாக்கு
அன்னை மரியாளும் தூய சூசையப்பரும் குழந்தை இயேசுவோடு எருசலேம் தேவாலயம் சென்றபோது, அங்கு சிமியோன் என்ற தூயவர் அன்னை மரியாளை நோக்கி, “ உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ” என்றார். இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் சிலுவைச் சாவையும் குறித்தே அவ்வாறு கூறினார். அவ்வேளை தனது முதல் துயரத்தை அனுபவித்தார் அன்னை மரியாள்.
எகிப்துக்குத் தப்பி ஓடுதல்
இறைவனின் தூதர் தூய சூசையப்பருக்குக் கனவில் தோன்றி தம் திருமைந்தனை ஏரோது மன்னன் கொல்லத் தேடிக்கொண்டிருப்பதை அறிந்து, அவரை சுமந்து கொண்டு எகிப்துக்கு ஓடிச் சென்றபோது இரண்டாவது முறையாக மிகுந்த மனவேதனை அடைந்தார் அன்னை மரியாள்.
பன்னிரெண்டு வயதில்
பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் பெற்றோருடன் சென்றபோது இயேசு காணாமல் போய் விட்டார். மூன்று நாட்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து தேடிய வேளை மிகுந்த மன உளைச்சலுக்கும் துயரத்துக்கும் ஆளானார் அன்னை மரியாள்.
கல்வாரி சிலுவைப் பாதையில்
கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதையில் சுமக்க இயலாத சிலுவையை தோள் மேல் தூக்கிச் சென்ற தன் அன்பு மகன் இயேசுவை அன்னை மரியாள் சந்தித்த வேளை அவர் எவ்வளவு துயரம் அடைந்திருப்பார் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.
இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் உயிர்துறந்த போது
தன் வயிற்றில் சுமந்து பெற்ற இறைமகன் இயேசுவை சிலுவையில் அறைந்து கள்வர் களுக்கு மத்தியில் தொங்கி உயிர்விட்டதை தன் கண்களால் காண இயலாத அன்னை மரியாளின் துயரத்திற்கு ஈடு எதுவுமில்லை.
இயேசுவின் திருவுடல் அன்னையின் மடியில்
அன்பார்ந்த மகனின் உயிரற்ற திருவுடலை தம் மடியில் வைத்த வேளை துன்பத்தின் வாள் அவரின் இதயத்தை ஊடுருவிப் பாய்ந்த போது சொல்லொண்ணா துயரம் அடைந்தார்.
இயேசுவின் தூய உடல் கல்லறையில்
தன் கருவறையில் சுமந்த அன்பு மகனின் உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட போது மிகக் கொடூரமான மனவேதனையில் அன்னை மரியாள் துவண்டு போயிருப்பார் எனச் சொல்லவும் வேண்டுமோ?