Last Updated : 12 Mar, 2015 12:52 PM

 

Published : 12 Mar 2015 12:52 PM
Last Updated : 12 Mar 2015 12:52 PM

பேரன்பின் மாபெரும் வெளிப்பாடு: விவிலியச் சிந்தனை

இறைவன் இயேசுவை ஈன்ற அன்னை மரியாள் இந்த உலகத்தில் அனைவருக்கும் மீட்பைத் தரும் உன்னதத் தாய் என்பதை நாம் ஆதி தொடக்க நூல் 3:15 லேயே காண முடிகிறது. சாத்தானைச் சபிக்கும் காலத்தில் இறைவன் இயேசு தம் அன்னையை முன்னிறுத்துகிறார். இதைவிடப் பெரும் பேறு ஏதேனும் உண்டோ?

தூய மரியன்னையின் விவிலிய வெளிப்பாடுகள் ஆழ்கடல் முத்தைப் போல, என்றும் பிரகாசிக்கும் கதிரவனைப் போல என்றென்றும் யாராலும் மறைக்கவோ மறுக்கவோ இயலாத பெட்டகம்.தெய்வீக,தேவனின் பேரன்பின் மாபெரும் வெளிப்பாடு!

ஆதி மனிதனின் பாவங்களுக்காக வருந்திய இறைவன் தம் மீட்புத் திட்டத்தை அளவில்லாத கிருபையுடனும், அன்புடனும், திருவுளமாய்க் கொண்டு தன்னுள் இருந்த வார்த்தையை இயேசு கிறிஸ்துவாக, மீட்பளிக்கும் அபிஷேகம் பெற்றவராகக் கொண்டு தம் சித்தத்தை நிறைவேற்றும் அன்பு மகனாக எண்ணினார்,

நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளாகும்படி கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவராகவும் அனுப்பினார் (கலாத்தியர் : 4:4-5). திருச்சட்டத்துக்குக் கீழ்ப்படிவதிலும் அதை முழுமனதுடன் செயல்படுத்துவதிலும் நம் அன்னை மரியாளுக்கு நிகராக ஒருவரையும் எண்ணிப் பார்க்க முடியாமல் நம் அன்னையை அன்றே தேர்ந்தெடுத்தார்.

இயேசு கிறிஸ்துவின் மீட்புத் திட்டத்தின் முக்கிய முன்னோடியும் ஆதி காரணமுமான தேவதாய் இறைவனின் கட்டளையை, ஆதங்கத்தை சிரமேற்கொண்டு எவ்வித மறுப்புமின்றி “இதோ நான் ஆண்டவரின் அடிமை,உம் வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” (லூக்காஸ்: 1:38-39) எனத் தன்னை மொத்த உருவாக்கி உறுதி மொழியுடன் இறைவனுடன் இணைந்து மீட்புத் திட்டத்தை தொடங்குகிறாள் நம் அன்னை. யாரால் இயலும் ?

இறைவனுக்குள் தம் உறுதியை நிலைப்படுத்தியதால் உலகப் பெண்களுக்குள் பெரும் பேரும் ஆசீரும் நிரம்பப் பெற்றவள் ( லூக்காஸ்: 1:42) என்று வானளாவப் புகழப்பட்டு வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துப் பெறுகிறாள். எல்லா வித வாழ்த்துகளுக்கும் புகழ்ச்சிகளுக்கும் என்றென்றும் அருமையாய் அமையப் பெற்றவள் நம் அன்னை மரியாள் மட்டுமே!

எலிசபத் என்னும் உறவினரால் புகழ்மாலை சூட்டப்பட்ட நம் அன்னை மறுமொழியாக இறைவனுக்குப் பாமாலை சூட்டுகிறாள். “என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து என் இதயம் களி கூறுகிறது. என்றென்றும் இரக்கம் காட்ட நினைவுகூர்ந்து நம் அடியானாகிய இஸ்ரயேலை ஆதரித்தார். (லூக்காஸ்:1:46-55).

இதில் நம் அன்னையின் சிந்தனை, சொல், செயல், முற்றிலும் இறைவனுக் காகவும் அவர் தம் திட்டத்துக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டவை என்பதை எண்ணிப் பார்க்குங்கால் நம் சிந்தை இனிக்கிறது. இறைவனை வாழ்த்திப் பாடும் இப்பாடல் எல்லாத் துதிப் பாடல்களுக்கும் தலையாக, மணிமுடியாகப் பிரகாசிக்கிறது.

குழந்தை இயேசுவை ஆசீர்வதித்த சிமியோன் நம் அன்னையைப் பாராட்டும் வேளையில் ‘இப்பாலன் இஸ்ரயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ, எழுச்சியாகவோ அமைந்துள்ளான். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்.’ (லூக்காஸ்: 2:34-35) இந்தச் சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் நம் அன்னையின் சீர்மிகு பயணத்துக்கு விளக்காகவும், அதே வேளையில் நம் அன்னையின் எண்ணங்களுக்கு ஒரு வடிகாலாகவும் அமையப் பெற்றுள்ளன. பின்னர் நடைபெறும் பயணங்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் காணப்படுகின்றன.

பன்னிரெண்டு வயதில் காணாமல் போன தம் மகனைப் பரிதவிப்புடன் தேடிக் கண்டுபிடிக்கும் வேளையில் உலகத் தாய்மார்களின் சாதாரண ஆதங்கத்துடன் ‘மகனே ஏன் எங்களுக்கு இப்படிச் செய்துவிட்டாய் ? இதோ உம் தந்தையும் நானும் உன்னை ஏக்கத்தோடு தேடிக்கொண்டிருந்தோம்’ (லூக்காஸ்: 2:48) என்று உரைத்து அதன் மூலம் இயேசுவின் அருமையான மீட்புத் திட்டத்தை முதல் முறையாக அறிந்துகொள்வதை நாம் காண்கிறோம்.

இறை இயேசுவின் மீட்புப் பாதையின் தூண்டுகோலான நம் அன்னை அவரின் இறைப் பயணத்தையும் கானாவூர் திருமணப் புதுமை வழியாகப் பாங்குடன் வெளிப்படுத்துகிறார். அத்துடன் மட்டுமல்லாது நாம் என்றென்றும் மறக்க இயலாத ‘அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’ என்று மேலான விருது வாக்கைப் பிரகடனப்படுத்துகிறார். இச்சீர்மிகு விருது வாக்கைத் தவிர மேலான அறிவுரை கிடையவே கிடையாது.

அன்னை மரியாள் இறைவனின் திருவுளத்தை முழுமனதுடன் நிறைவேற்றிய பேறு பெற்ற முதல் நபர் எனலாம். ‘இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் சகோதரரும் ஆவார்’ (மத்தேயு: 13:49) எனக் கூறி விண்ணகத்தில் இறைவனின் திரு உள்ளத்தை நிறைவேற்றுபவரைத் தன்தாயின் நிலைக்கு உயர்த்துகிறார் என்றால் தன் தாயை எந்த அளவுக்கு மகிமைப்படுத்துவார் என்பது தெளிவு.

இறைவனின் திருச்சித்தம் அறிந்து அதை முழு மனதுடனும் தாழ்ச்சியுடனும் எவ்வித எதிர்பார்ப்புமின்றித் தாராள குணத்துடன் ஏற்றுக்கொண்ட தம் தாயை ஒவ்வொரு கணமும் இறை இயேசு பெருமைப்படுத்துகிறார்.

‘உம்மைத் தாங்கிப் பாலூட்டிய உம் தாய் பேறு பெற்றவள்’ (லூக்காஸ்: 11:27) எனச் சாதாரணப் பெண்மணியால் பாராட்டப்பட்டபோதும் அதைவிட இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர் அதனினும் பேறு பெற்றவர் எனக் கூறுகையில் கீழ்ப்படிதல், தாழ்ச்சி, உடனடியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு இவற்றால் நம் அன்னை உயர்வடைகிறாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x