Published : 03 Apr 2014 01:39 PM
Last Updated : 03 Apr 2014 01:39 PM

தெய்வத்தின் குரல்: ராம நாமமே காக்கும் மந்திரம்

நன்மையும்
செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைத்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்

(கம்ப ராமாயணம் - சிறப்புப் பாயிரம் 14)

ஸ்ரீராமநவமியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் கம்பராமாயணத்தில் ஸ்ரீ ராமாவதார கட்டத்தில் உள்ள கீழ்காணும் பாகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

வேய்புனர் பூசமும் விண்ணு ளோர்களும்
தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே.
சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்
நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்
தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஒங்கவே.
ஒருபகல் உலகெல்லாம் உதரத்துட் பொதிந்
தருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை.

(கம்ப ராமாயணம்: பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்)

இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கிரமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நிதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றிக் கொண்டு, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக உள்ள கீழ்காணும் பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிஷம் பஜனை செய்து, ஊர்ப் பொதுச் செலவில் ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

மங்கள கீதம் பாட
மறையோலி முழங்க வல்வாய்ச்
சங்கினம் குமுறப் பாண்டில்
தண்ணுமை யப்பத் தாவில்
பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப்
பூமழை பொழிய விண்ணோர்
எங்கள் நாயகனை வெவ்வேறு
எதிர் அபிடேகஞ் செய்தார்.
மாதவர் மறைவ வாளர்
மந்திரக் கிழவர் முற்று
மூதறி வாளர் உள்ளஞ்
சான்றவர் முதனீ ராட்டச்
சோதியான மகனு மற்றைத்
துணைவரும் அனுமன் தானும்
தீதிலா இலங்கை வேந்தும் - பின்
அபிடேகஞ் செய்தார்.
சித்தமொத் தனன்என் றோதுந்
திருநகர்ச் செல்வ மென்ன
உத்தமத் தொருவன் சென்னி
விளங்கிய உயர்பொன் மௌலி
ஒத்துமெய்க் குவமை கூர
ஒங்குமூ வுலகத் தோர்க்குந்
தத்தம் உச்சியின்மேல் வைத்தது
ஒத்தெனத் தளர்வு தீர்த்தார்

(கம்ப ராமாயணம்: யுத்த காண்டம் திரு அபிடேகப் படலம்)

ராமபிரானின் சிரத்தின் மேல் பொன் கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொற்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மகிழ்ந்தவர்கள் என்பது கடைசிச் செய்யுளின் கருத்து.

நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீராமன் என்றால் ஆனந்தம்

ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்ப வன் என்று அர்த்தம். மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்ற அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ராமன் தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக் குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக துக்கங்களில் சலனமில்லாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு, பின்பற்றி வாழ்வதுதான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகா மல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம் குறைந்து, அது தெளிய ஆரம்பிக் கும். இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும். இந்த சித்த சுத்தி மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்கான மத் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கு பார்த்தாலும், இது என் அபிப்பிராயம் என்று சொல்லவே மாட்டார். ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்லுகிறது என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரம புருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தான்.

ராவணன் ஸீதையைத் துரத்திக் கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்தே ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம். என்று கேலி செய்து கேட்டவர்கள். எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான். மநுஷ்ய ரூபத்திலேயே இருந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து இந்தக் குழந்தைகள் யார் என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள். நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார் என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும். வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாதாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது, இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள். ராகவா, எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும் என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.

நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியமும் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விட்டுவிடக் கூடாது. ராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான். அண்ணா. தர்மம் தர்மம் எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்ஜியத்தை நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், “ராமோ விக்ரஹவான் தர்ம” என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்துவருகிறான். சாக்ஷாத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ராம என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர் களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x