

ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தே செல்ல வேண்டும். முதலில் அதனை இகழ்ச்சியாக நினைப்பார்கள். இரண்டாவதாக எதிர்ப்பு வரும். மூன்றாவதாக அதனை ஒப்புக்கொள்வார்கள்.
தான் வாழ்கிற காலத்துக்குப் பின்னால் வரப்போவதைச் சிந்தித்துப் பார்க்கிற மனிதனைச் சமுதாயம் நிச்சயமாகத் தப்பாகவே புரிந்துகொள்ளும். ஆகவே எதிர்ப்பும் கொடுமைகளும் வரட்டும். வரவேற்கிறேன்.
நான் மட்டும் தூய்மையுடனும் உறுதி குலையாமலும் இருக்க வேண்டும். இறைவனிடத்தில் அபாரமான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தக் கஷ்டங்களெல்லாம் நிச்சயமாக மறைந்து போகும்.
`மகத்தான பணி ஒன்றைச் சமுதாயத்தில் செய்யவும் வேண்டும். சமுதாயத்தின் மனம் கோணவும் கூடாது’ என்பது நடவாது. அவ்வாறு முயன்றதில் எவரும் எக்காலத்திலும் வெற்றி காணவில்லை. மனசாட்சியின் உத்தரவுப்படி ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும்.
அதன் பிறகு அந்த வேலை சரியானதாகவும் நல்லதாகவும் இருக்குமாயின் சமூகமானது அவனது சொல்லைக் கேட்டு அவனது பாதைக்குத் திரும்பிவிடும். சில சமயம் அந்த மனிதன் செத்து வெகு காலமான பிறகே அந்நிலை ஏற்படும். நமது உள்ளம் ஆத்மா, உடல் இவை அனைத்துடனும் நாம் பணியில் குதித்து மூழ்கிவிட வேண்டும்.
ஒரே கருத்துக்காக, ஒரே ஒரு கருத்துக்காக மட்டும்தான், மற்ற அனைத்தையும் தியாகம் செய்ய ஆயத்தமாகிற வரையில் நாம் வெற்றியின் ஒளியை ஒருக்காலும் காண மாட்டோம். நிச்சயம் காணவே மாட்டோம்.
மனித குலத்துக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் தமது சொந்த சக, துக்கம், பெயர், புகழ், பலவித ஆசை நாட்டங்கள் இவற்றை ஒரு மூட்டையாகக் கட்டிக் கடலில் வீசியெறிந்து விட வேண்டும். அதற்குப் பிறகு பகவானிடம் வர வேண்டும். எல்லா மகா புருஷர்களும் அப்படித்தான் சொன்னார்கள். செய்ததும் அவ்வாறே.
நீங்கள் ஏற்றெடுத்திருக்கிற காரியத்தில் வெற்றி பெறுவது உங்களது பரஸ்பர அன்பைத்தான் முற்றிலும் சார்ந்துள்ளது. கடும் பகையுணர்ச்சியும், பொறாமையும், மமதையும் இருக்கிற வரையில் நல்ல காலமே வராது.
உங்களது சகோதரர்களது அபிப்ராயத்துக்கு விட்டுக் கொடுக்க எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். எப்பொழுதும் சமாதானமாக, சமரசமாகப் போக முயலுங்கள். இதுதான் முழு ரகசியம்.