Published : 25 Feb 2015 09:02 am

Updated : 25 Feb 2015 09:02 am

 

Published : 25 Feb 2015 09:02 AM
Last Updated : 25 Feb 2015 09:02 AM

கசிவல்ல, வெள்ளம்

ஆவணத் திருட்டைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமானால் ‘தெரிந்தது கையளவு, தெரியாதது உலகளவு’ என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஆவணத் திருட்டென்பது மத்திய அரசு அலுவலகங்களில் ஒரு தொழிலாகவே நடந்துவருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது. புதுடெல்லியின் மையப் பகுதியில் கட்டுக்காவலுடன் உள்ள சாஸ்திரி பவன் கட்டிடத்தில் இருக்கும் பெட்ரோலிய அமைச்சக அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டு ‘ஆலோசகர்களுக்கும்’ ஆர்வமுள்ள பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் விலைக்கு விற்கப்படுவதாக வரும் தகவல்கள் அச்சமூட்டுகின்றன.

ஆவணங்கள் தேவைப்படுவோருக்கும் அதைத் திருடித் தருவோருக்கும் உள்ள தொடர்பு மலைக்க வைக்கிறது. இந்த ஆவணங்களைத் திருடும் வேலையை இரவுக் காவலர்தான் செய்வார், அவருக்கு வசதியாக அலுவலக உதவியாளர் ஒருவர் ரகசிய கண்காணிப்பு கேமராக்களைச் செயலிழக்க வைப்பார் என்றெல்லாம் தகவல்கள் கிடைக்கின்றன. அமைச்சகத்தின் கீழ்நிலை ஊழியர்கள் சிலரும், 2 ஆலோசகர்களும், நிறுவனங்களின் 5 பிரதிநிதிகளும் டெல்லி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். ஒரு துறை, ஒரு அமைச்சகத்துடன் மட்டும் நிற்காமல், மேலும் பல துறைகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதை அடுத்தடுத்து வரும் தகவல்கள் உணர்த்துகின்றன.

மத்திய நிதிநிலை அறிக்கைக்கான சில தகவல்கள், அரசு நிறுவனப் பங்குகளை விற்பது தொடர்பாக மத்திய அமைச்சரவையில் நடந்த ஆலோசனைபற்றிய சில குறிப்புகள், பெட்ரோலியத் துறை தொடர்பான முழு ஆவணங்கள் போன்றவை திருடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்கள் நினைத்தால், அரசு அலுவலகங்களில் எளிதில் புகுந்து, தங்களுக்கு வேண்டிய ஆவணங்களையும் தகவல்களையும் அங்குள்ள ஊழியர்கள் உதவியுடன் பெற்றுக்கொண்டுவிட முடியும் என்பது மட்டுமல்ல, இந்தியா யாருடைய கைகளில் இருக்கிறது என்பதற்குமான மற்றுமொரு நிரூபணம்தான் இந்தச் சம்பவம்.

தகவல் திருட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றன. பொதுநலனுக்கு எதிரான அல்லது பாதகம் விளைவிக்கக்கூடிய அரசின் செயல்களை, ஊழல்களை அம்பலப்படுத்தும் ‘விசிலூதிகள்’அவை தொடர்பான தகவல்களைப் பத்திரிகை களுக்குத் தருவது ஒரு ரகம். பெருந்தொழில் நிறுவனங்கள் தங்களுடைய சொந்த ஆதாயத்துக்காகப் பணம் கொடுத்து ஆவணங்களையும் கோப்பு களையும் திருடிவரச் சொல்வது இரண்டாவது ரகம். இந்த இரண்டையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்கக் கூடாது. முன்னது, மக்களுடைய நலனில் அக்கறை கொண்டுசெய்வது. பிந்தையது, பணத்துக்காகப் பெருந்தொழில் நிறுவனங் களின் ஆதாயத்துக்காகச் செய்யப்படுவது. ஆவணங்களைத் திருடியவர் களைக் கையும் களவுமாகக் காவல் துறை பிடித்திருந்தாலும், இவர்களுடைய சூத்திரதாரிகள் இன்னமும் சிக்கவில்லை என்பதை ஆம் ஆத்மி கட்சி சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆவணங்களைத் திருடியவர்களை டெல்லி போலீஸார் கைதுசெய்ததற்காக மோடி தலைமையிலான அரசைப் பாராட்டியாக வேண்டும். இந்த வேகம் குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை பெற்றுத்தருவதிலும் இருக்கிறதா என்று நாடே கவனித்துக்கொண்டிருக்கும்.

இந்தத் தகவல்களால் ஆதாயம் அடைந்த அல்லது ஆதாயம் அடையப்போகும் நிறுவனங்கள் இந்தக் கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டதுகுறித்து நிச்சயம் விளக்கம் அளித்தே தீர வேண்டும். எந்த ஊழலிலும் முறைகேட்டிலும் உளவு நடவடிக்கையிலும் சின்ன மீன்கள்தான் சிக்குகின்றன, பெரிய சுறாக்கள் தப்பிவிடுகின்றன. இந்த முறையாவது சுறாக்கள் சிக்கி, தண்டனையைப் பெற வேண்டும்.

ஆவணத் திருட்டுபெட்ரோலிய அமைச்சகம்கார்ப்பரேட் நிறுவனங்கள்

You May Like

More From This Category

More From this Author