

தமிழில் ஆன்மிக நூல்கள் என்று சொல்லும்போது ரா. கணபதியின் பங்களிப்பைத் தவிர்த்துவிட்டுப் பேசவே முடியாது. 1935 செப்டம்பர் 1 விநாயகர் சதுர்த்தியில் பிறந்ததால் கணபதி என்று பெற்றோர் அவருக்குப் பெயர் சூட்டினார்கள். எளிமையான குடும்பம், சாதாரணப் படிப்பு என்றாலும் எழுத்துத் துறைக்கு வந்து எழுத்தையே வேள்வியாகத் தொடர்ந்தார்.
ஆதி சங்கரர், மீரா பாய், ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், சாரதா தேவியார், ரமண மகரிஷி, சத்ய சாய் பாபா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை விரிவாகவும் சுவையாகவும் நம்பகத்தன்மையுடனும் எழுதியுள்ளார் ரா. கணபதி.
ஜெயஜெய சங்கர
ஆதிசங்கரர் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல். இதை இந்தியாவின் ஒரு காலகட்டத்து ஆன்மிக வரலாறாகவே பார்க்க முடியும்.
இந்த நூலைக் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உள்ளது. தி.மு.க. தலைவர் அண்ணாவின் அன்னையார் மறைந்த தருணம் அது. அண்ணா மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த வாரம் கல்கி இதழில் ‘ஜெயஜெய சங்கர' தொடரில் ஆதிசங்கரரின் தாயார் மரணம் பற்றி எழுதியிருந்தார் கணபதி. ‘அதில் தாயை இழந்த சோகத்தை சங்கரர் அனுபவித்த விதம் குறித்து கணபதி எழுதியிருந்த விதத்தைப் படித்து நானும் நெகிழ்ந்துவிட்டேன்' என அண்ணா, பாரதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘தன் வரலாறு' நூலில் பதிவு செய்திருக்கிறார்.
காற்றினிலே வரும் கீதம்
மீராபாயின் வரலாற்றைச் சொல்லும் மறக்க முடியாத உரைநடைக் காவியம் இது. கண்ணன் மீதான பக்தியில் தோய்ந்த மீராவின் வாழ்வை விவரிக்கும் நூல்.
அறிவுக் கனலே அருட்புனலே
ராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று நூல் இது. அவர்களைப் புரிந்துகொள்ளவும் போற்றவும் வித்தாக அமைந்த நூல். இவர்கள் இருவரைப் பற்றித் தமிழில் நேரடியாக எழுதப்பட்ட விரிவான நூல் என்று இதைச் சொல்லலாம்.
அம்மா - ஸ்ரீ சாரதா தேவியாரின் வாழ்க்கை வரலாறு
அன்புப் பிரவாகமாய் ஊற்றெடுக்கும் அன்னை சாரதா தேவியாரின் வரலாறு ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகளுக்குச் சிறிதும் குறைவில்லாதவை அன்னையாரின் உபதேச ரத்தினங்கள். அவரைப் பற்றிய நூல், பரமஹம்சரின் கீர்த்தியைக் குன்றிலிட்ட விளக்காய் ஒளிரச் செய்கிறது.
ஸ்வாமி
ரா. கணபதி எழுதிய சத்திய சாய் பாபாவின் வாழ்க்கைச் சரிதம். பாபா பக்தர்களால் இன்றும் ஒரு திவ்ய சரிதமாகவே படிக்கப்படுகிறது. பாபாவின் அற்புதங்கள், உபதேசங்களோடு நிறுத்திவிடாமல் பாபாவின் பல்வேறு சமூகப் பணிகளையும் விரிவாகக் கூறும் நூல் இது.
ரமணாயனம்
ஸ்ரீ ரமண மகரிஷியின் வாழ்க்கை சரிதத்தையும் ரா.கணபதி அர்ப்பணிப்பிலும் பக்தியிலும் தோய்ந்து எழுதியுள்ளார். பாமரன் முதல் பால் பிரண்டன் வரை பக்தியில் உருகிப் பரவசமடையும் தகவல்கள் பல அதில் உண்டு.
தெய்வத்தின் குரல்
காஞ்சி மகா ஸ்வாமிகளின் அருளுரைகள் தெய்வத்தின் குரல் என்னும் தலைப்பில் ஏழு தொகுதிகளாக வந்துள்ளன. மகா பெரியவர் பேசியதைக் கேட்டு அவற்றை எல்லாம் எழுதித் தொகுத்த அரிய பணியைச் செய்தவர் ரா. கணபதி.
7 தொகுதிகள், ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் என்பதைப் பார்க்கும்போது அந்த உழைப்பையும் அதற்குப் பின்னால் உள்ள அர்ப்பணிப்பையும் உணர்ந்துகொள்ளலாம்.
சுவாமி ஆசுதோஷானந்தர்
சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி ஆசுதோஷானந்தர் விளக்க வுரையுடன் பதிப்பித்திருக்கும் உபநிடத நூல்கள் தெய்விக ஞானத் தேடல்களை அழகிய தமிழில் வெளிப்படுத்துகின்றன.
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்?)
கட உபநிஷதம் (மரணத்திற்குப் பின்னால்)
ப்ரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)
முண்டக உபநிஷதம் (நிழலும் நிஜமும்)
மாண்டூக்ய உபநிஷதம் (ஒன்றென்றிரு)
ஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)
தைத்திரீய உபநிஷதம் (வாழ்க்கையை வாழுங்கள்)
ஆகியவை இவரது உபநிடத நூல்கள்.
இவர் பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் ஆகிய நூல்களையும் எளிய தமிழில் தந்து அவற்றுக்கு விளக்கமான உரையையும் எழுதியுள்ளார். “தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளாமல் இறைவன் என்ற மாபெரும் சக்தியிடம் நாம் தொடர்புகொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை” என்று முன்னுரையில் ஆசுதோஷானந்தர் சொல்கிறார்.
அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன்
இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும் வழிபாட்டு முறைகளையும் புராண, இதிகாசக் கருத்துக்களையும் மிக எளிதாகவும் மிகச் சரளமாகவும் கூறும் நூல். கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்த நூல் பத்துத் தொகுப்புகளாக வெளிவந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டது.
பகவத் கீதை, திருவாசகம் சுவாமி சித்பவானந்தரின் உரைகள்
ராமகிருஷ்ணரின் குருகுல மரபைச் சேர்ந்த துறவி சுவாமி சித்பவானந்தர் மதுரை திருவேடகத்தில் ராமகிருஷ்ண தபோவனம் என்னும் அமைப்பை நிறுவினார். அவர் பகவத் கீதை, திருவாசகம் ஆகியவற்றுக்கு எழுதிய உரைகள் முக்கியமான நூல்கள். கீதைக்கு ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர் வரை பலரும் எழுதிய உரைகளையும் பல இடங்களில் குறிப்பிட்டுத் தன் கருத்தையும் விளக்கி எழுதியிருக்கிறார் சித்பவானந்தர். ராமகிருஷ்ணரின் கதைகள், அமுத மொழிகளையும் பொருத்தமான இடங்களில் கையாண்டிருப்பது கூடுதல் சிறப்பு.