

ஒரு முறை யூத அறிஞர் ஒருவர் அண்ணலாரிடம் வந்து, “ முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க!” என்று முகமன் கூறினார். உடனே அவர்களுக்கருகில் நின்று கொண்டிருந்த ஸவ்பான் எனும் நபித்தோழர் அந்த யூதரைப் பிடித்துத் தள்ளினார்.
நிலைதடுமாறிய அவர், “ஏன் என்னைத் தள்ளுகிறாய்?” என்று கேட்டார். “ இறைத்தூதரே! என்று சொல்லவேண்டியதுதானே! ஏன் முஹம்மத் என்று பெயர் கூறி அழைக்கிறீர்?” என்று கேட்டார். அதற்கு அந்த யூதர், “ அவருடைய குடும்பத்தார் அவருக்கு இட்ட பெயரால்தான் அவரை நாம் அழைக்கின்றோம்” என்று கூறினார்.
அப்போது நபியவர்கள், “ எனது பெயர் முஹம்மத் தான். இதுவே என் குடும்பத்தார் எனக்கு இட்ட பெயர்” என்று சொன்னார்கள். பின்னர் அந்த யூதர், “ உங்களிடம் சில விஷயங்கள் குறித்துக் கேட்பதற்காகவே நான் வந்துள்ளேன்” என்று கூறினார்.
அப்போது பெருமானார், “நான் கூறப்போகும் எந்த விஷயமும் உமக்குப் பலனளிக்குமா?” என்று கேட்டார்கள். அவர், “நான் காது கொடுத்துக் கேட்பேன்” என்றார். அப்போது நபியவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறியவாறு ஆழ்ந்த சிந்தனையுடன் “கேளுங்கள்” என்றார்.
அந்த யூதர் கேட்டார். “ இந்தப் பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் அமைப்பிற்கு மாற்றப்படும் மறுமை நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்?” என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் அவர்கள், “அஸ்ஸிராத் எனும் பாலத்திற்கு அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள்” என்று பதிலளித்தார்.
அவர்,“ மக்களிலேயே அந்தப் பாலத்தை முதன்முதல் கடப்பவர்கள் யார்” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்துச் சென்ற ஏழை முஹாஜிர்கள்” என்று பதிலளித்தார். அந்த யூதர், “ அவர்கள் சொர்க்கத்துக்குள் நுழையும்போது அவர்களுக்கு வழங்கப்படும் பரிசு என்ன?” என்று கேட்டார். அதற்கு, “ மீனின் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டு” என்று பதிலளித்தார்.
“அதற்கடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன?” என்று அவர் கேட்க, சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளை மாடு அறுக்கப்பட்டு அவர்களுக்கு விருந்தளிக்கப்படும்” என்று பெருமானார் பதிலளித்தார்.
பின்னர் அந்த யூதர், “ அதற்குப் பின அவர்கள் எதை அருந்துவார்கள்?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “அங்குள்ள ஸல்ஸபீல் என்ற நீருற்றிலிருந்து அருந்துவார்கள்” என்று பதிலளித்தார்கள். அப்போது அந்த யூதர், “ நீர் கூறியது உண்மையே” என்று கூறினார்.
முந்தைய வேதங்களில் பெருமானாரைப் பற்றிய செய்திகளும் மறுமையைப் பற்றிய விஷயங்களும் இடம்பெற்றுள்ளன. அவ்வேதங்களைக் கற்றறிந்த அறிஞர்களில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். வேறு சிலர் தங்கள் சுயநலனுக்கான உண்மைகளை மறைத்தார்கள்.
ஆனால் இறைவன் முந்தைய வேதங்களில் கூறப்பட்ட உண்மைகளை நபிகள் நாயகம் அவர்களுக்கு அவ்வப்போது வெளிப்படுத்தினான். சொர்க்கவாசிகளுக்கு மீனின் ஈரல் உணவாக வழங்கப்படும் எனும் செய்தி முந்தைய வேதங்களிலும் இடம்பெற்றுள்ளது.
அன்பின் மொழி. அ.ஜாகிர் ஹூசைன்
அறம் பதிப்பகம், 210, ஏசியன் கார்டன்ஸ்,
108 எம்டிஎச் ரோடு, வில்லிவாக்கம், சென்னை- 600 049
தொடர்புக்கு: 09444427086, விலை: ரூ.80/-