

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி உள்ளது. இதனை இராஜமன்னார்குடி என்றும் அழைப்பர். இது கும்பகோணத்திலிருந்து கிழக்கே 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற இராஜகோபால சுவாமி கோயிலும் ஹரித்திரா நதி தெப்பக்குளமும் இருக்கின்றன.
இவற்றின் அருகில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப் பழமையான சமணர் கோயில் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தைச் சேர்ந்தது.
இந்த ஆலயத்தின் மூலவர் பூமாலை முதலாய புனையாத திருமூர்த்தி ஆவார். பத்தொன்பதாம் தீர்த்தங்கரரான பகவான் மல்லிநாதர் இவர். அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
பிரமதேவர், தருமதேவி அம்மன், பத்மாவதி அம்மன், ஜுவாலாமாலினி அம்மன் ஆகிய யட்சன், யட்சிகள் தனித் தனிக் கருவறைகளில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் வன்னி மரம் தல விருட்சமாக உள்ளது.
மகாஉற்சவம் நடக்கும் ஆலயம்
ஒவ்வொரு வருடமும் வைகாசி வளர்பிறை சப்தமியில் 11 நாட்கள் இக்கோயிலில் மகாஉற்சவம் நடைபெறுகிறது. தமிழ் நாட்டு சமணர் கோயில்களில் ஆண்டுதோறும் மகாஉற்சவம் ஒரு சில கோயில்களில்தான் நடைபெறுகிறது. இந்த ஜைன ஆலயம் அவற்றில் ஒன்றாகும்.
சமண மதத்தின் எட்டாவது தீர்த்தங்கர ரான மலர்மிசை ஏகிய பகவான் சந்திரப் பிரபுவின் யட்சியாக (காவல் தெய்வமாக) ஜுவாலாமாலினி அன்னை திகழ்கிறார்.
இங்கு ஆட்சி செய்யும் ஜுவாலாமாலினி அம்மன் பெரும் சக்தி வாய்ந்ததென, சமணர்கள் நம்புகிறார்கள். மகாஉற்சவத்தின் இறுதி நாளன்று ஜூவாலாமாலினி கண்ணாடிப் பல்லக்கில் வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
காணும் பொங்கலன்று நடைபெறும் சந்தனக் காப்பும் ஜுவாலாமாலினி அம்மனின் வீதி உலாவும் வெகு சிறப்பாக இருக்கும். இந்த விழாக்களைக் காண பல்வேறு ஊர்களிலிருந்தும் சமண மக்கள் வருகின்றனர்.
மன்னார்குடியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வச்சிரநந்தி எனும் சமணச் சான்றோர் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்து தமிழை வளர்க்கப் பாடுபட்டுள்ளார்.