

பல்வேறு மதங்களின் தத்துவங்களைப் போல,உயிர்களைப் பற்றி பேசும் சமணம், உயிர் அற்றவைகளைப் பற்றியும் பேசுகிறது. இன்றைய அறிவியல் உலகம்,அணுவைப் பற்றி கண்டறிவதற்கு முன்பே,சமணத் தத்துவம் அதுபற்றி விளக்கியிருக்கிறது.
உயிர் அற்றவை புத்கலம் என்று அழைக்கப்படும். புத்கலம் மிக நுண்ணிய அணுக் களாலானது.அணுவை அதற்கு மேலும் பிரிக்க முடியாது. இது பரமாணு ஆகும்.
ஓரணு முதல் பெரிய பெரிய பொருட்கள் வரை புத்கலம் என்று பொதுப் பெயரால் கூறப்படும்.புத்கலம் இணைய அல்லது பிரியக்கூடியது. பல அணுக்கள் சேர்ந்தது ஸ்கந்தம் ஆகும்.அதாவது மூலக்கூறு(molecule)ஆகும். இவ்வுலகே மிகப்பெரிய ஸ்கந்தமாகும்.
நம் உயிரும் உடலும் வேறு வேறு. எனவே நம் உடலும் புத்கலமே. புத்கலம் நாற்றம், சுவை, ஊறு, வண்ணம், உருவம் இவற்றை உடையது.
உயிர்,உடல் என்னும் புத்கலப் பொருளில் தங்கி தன் வினைப்பயனை அனுபவித்து,பிறவிக்கடலில் சிக்கித் தவிக்கிறது. எனவே உயிர் தன் வினையின் பயனை அனுபவிப்பதற்கு ஆதாரமானப் பொருள் உடல் என்னும் புத்கலம் ஆகும்.
முக்தியும் துன்பமும்
உயிர், இந்த உடல் என்னும் புத்கலம் மூலம் நல் வினைகளை ஆற்றினால் முக்தியை அடையும்.உயிர்,தீவினைகளை ஆற்றினால் மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் வீழும்.
அணுக்கள் பல சேர்ந்த ஸ்கந்தம் ஆறு வகையென மேருமந்திர புராணம் கூறுகிறது.
“நுண்மையுள் நுண்மையும் நல்ல நுண்மையும்
நுண்மையிற் பருமனும் பருமை நுண்மையும்
எண்ணரும் பருமையும் இரு பருமையும்
கண்ணுறும் அணுவின் ஆறாகும் கந்தமே”.
இதன்படி ஐம்பொறிகளால் அறிய முடியாத அணுக்கள் நுண்மையில் நுண்மை எனப்படும். வாய்,மெய்,மூக்கு,செவி இவற்றால் மட்டும் அறியப்படுபவை நுண்ணுயிர் பருமை ஆகும். கண்ணால் கண்டும் கைக்கு பிடிபடாத நிழல், புகை,வெளிச்சம் போன்றவை பருமை நுண்மை எனப்படும்.
தத்தமக்குள் தானாக விலகி னாலும் தானாகவே இணையும் தண்ணீர்,எண்ணெய் போன்றவை பருமை என்பதாகும்.
மலை, பூமி போன்றவை உடைந்தப்பின் தாமாக இணையாதவை.இது இரு பருமை எனப்படும். இவ்வாறு மேருமந்திரபுராணம் ஸ்கந்தத்தை விளக்குகிறது.
அணுக்கள் ஒன்றோடொன்று மோதும்பொழுது எழுவது ஒலி. இதுவும் புத்கலம் ஆகும்.இடியும் உயிரினங்களின் ஒலியும் புத்கலம் ஆகும்..பகவானின் திவ்யதொனியும் புத்கலமே..
இவ்வாறு உயிரற்றப் பொருட்களை பிரித்து அணுவணுவாக ஆய்ந்து அறிவியல் முறையில் சமண சித்தாந்தங்கள் உருவாக்கப்பட்டன.