Last Updated : 26 Feb, 2015 10:25 AM

 

Published : 26 Feb 2015 10:25 AM
Last Updated : 26 Feb 2015 10:25 AM

வரம் தரும் த்ரிசக்தியம்மன்

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், நாவலூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது தாழம்பூர் கிராமம். இந்தச் சிறிய கிராமத்தில், மகா சக்தியாக, வேண்டுவோருக்கு மாற்றங்களை அருளும் சக்தியாக அமைந்துள்ளது த்ரிசக்தி அம்மன் திருக்கோயில்.

அமைதி மையம் கொள்ளும் இந்தக் கிராமத்தின் நடுவே அழகாக அமைந்திருக்கும் இக்கோயில் ஒரு பக்தரின் கனவில் மூன்று தேவியரும் தோன்றி அளித்த உத்தரவு மூலம் உருவானது. அந்த பக்தர் தனது கனவை தன் குருவான ஐயப்பன் சுவாமிகளிடம் சொல்லி, குருவின் வழிகாட்டுதலோடு ஆலயமெழுப்பி, ஞான சரஸ்வதி, மூகாம்பிகை, லட்சுமி ஆகியோரைப் பிரதிஷ்டை செய்ததாகத் தல வரலாறு கூறுகிறது.

ஆலயத்தின் அமைப்பு

ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து ஆலயத்தினுள் சென்றால், நெடிதுயர்ந்த கொடிமரத்தைக் காணலாம். கொடிமரத்தின் உச்சியில் உள்ள மணிகள் அசைந்து மெல்லிய நாதத்தை காற்றில் கரைப்பது கேட்க அத்தனை சுகமாக இருக்கும். பிராகாரத்தில் வலம் வரும்போது பால கற்பக விநாயகரை தரிசிக்கலாம்.

அவருக்கு அருகில் தனிச் சந்நதியில் பாலமுருகன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவரை வணங்கி அடுத்துள்ள பைரவரையும் வணங்கி, ஐந்து படிகள் ஏறி, ஆலய மண்டபத்துக்குச் செல்லலாம்.

மண்டபத்தைத் தாண்டி கருவறைகள். மூன்று கருவறைக்கு மேலும் தனித்தனி விமானங்கள். முதலில் ஞான சரஸ்வதி. அன்னைக்கு நான்கு கரங்கள். மேலிரு கரங்களில் ஜபமாலையும், கமண்டலமும் ஏந்தியிருக்கிறாள். இடது கீழ் கரத்தில் ஓலைச்சுவடி இருக்கிறது.

வலது கீழ் கரத்தில் சின்முத்திரைக் காட்டி அருளும் அன்னையின் தரிசனம் மனத்தெளிவைத் தருகிறது. ஞான சக்தியாக போற்றப்படும் அன்னை கல்விக் கடவுளாக வணங்கப்படுகிறாள். 64 கலைகளையும் அருள்பவள். பிரம்மனின் மனைவியான இவளைப் பணிய, படிப்பாற்றலும், படைப்பாற்றலும் மேலோங்கும்.

அடுத்து கிரியா சக்தியாக திகழும் மூகாம்பிகை சந்நதி. அன்னை சக்தியின் வடிவம். அன்னையின் அருள் பார்வை செயல் முடிக்கும் ஆற்றல் தரும். மனவலிமை தரும். அச்சம் போக்கும். கோல மகரிஷியின் தவத்தை ஏற்ற மகாலட்சுமி, மூகாம்பிகை வடிவெடுத்து காமா அசுரனை ஊமையாக்கி அடக்கினாள்.

அதன்பிறகு அவன் மூகாசுரன் என்றழைக்கப்பட்டான். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்னை, மேலிரு கரங்களில் சங்கு சக்கரமேந்தி இருக்கிறாள். கீழ் வலக்கரம் சின்முத்திரையும், கீழ் இடக்கரம் வரதஹஸ்தமும் காட்டி அருள்கிறது. அன்னையின் அழகு முகம் காண, மனது புத்துணர்வும், புது வலிவும் பெறுகிறது.

அடுத்து நாம் தரிசிப்பது இச்சா சக்தியாகிய லட்சுமி தேவியை. மேலிரு கரங்களில் தாமரை மொட்டுக்களை தாங்கியிருக்கும் அன்னை, கீழிரு கரங்களில் அபய&வரத ஹஸ்தம் காட்டி சிரிக்கிறாள். பாற்கடலில் பிறந்த பாவையான இவள், கடலைப் போன்றே வற்றாத வளம் தருபவள். அன்னையின் அருள் பார்வை செல்வமெல்லாம் தரும். வறுமையை விரட்டும்.

பலவிதமான பலன்களை அள்ளித் தரும் இந்த ஆலயத்தின் பிரம்மோற்சவம் தற்போது நடைபெற்றுவருகிறது. இதையொட்டி 3.3.2015 அன்று காலை திருத்தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x