Last Updated : 12 Feb, 2015 12:04 PM

 

Published : 12 Feb 2015 12:04 PM
Last Updated : 12 Feb 2015 12:04 PM

ஆல விருட்சமாய் பரவும் பகவத்கீதை

கடமையைச் செய் என்னை நினை என்றார் கிருஷ்ண பரமாத்மா. கிருஷ்ணரின் திருவாக்காய் அமைந்த பகவத் கீதையைச் சொல்லித் தருவதே தன் கடமையாகக் கொண்டுள்ளார் ஸ்ரீ வித்யா. நூற்றுக்கணக்கில் மாணவர்களைக் கொண்டுள்ள இவரது வசிப்பிடம் பெங்களூர். ஆனால் பகவத்கீதை ஒப்பித்தல் போட்டிக்காக மாணவர்களை அவர் அழைத்து வருவது சென்னைக்கு.

சென்னை மயிலையில் இவரது பெற்றோர் இல்லம் திண்ணையுடன் கூடியது. சிறு வயதில் இவரது தாய் பல குழந்தைகளுக்கு சுலோகம் சொல்லிக் கொடுக்க, அதனைக் கற்று வளர்ந்தவர். பின்னாளில் இவரது தந்தை பகவத் கீதை சொல்லிக் கொடுத்தார்.

பதினெட்டு அத்தியாயங்களும் இவருக்கு மனப்பாடம். பின்னர் திருமணம் காரணமாக பெங்களூர் வாசம். தன் மகனுக்கு இரண்டு வயதானபொழுது, சுலோகம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினரும் தங்களுக்கும் சுலோகம் சொல்லிக் கொடுக்குமாறு கேட்க, வளர்ந்தது கலை.

சுமார் இருபது ஆண்டுகளாக சாதி, மத பேதமின்றித் தொடர்ந்து இப்பணியைச் செய்துவருகிறார். இவரது முயற்சியால் பள்ளிக்கூடமே சென்று அறியாத, வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் பெண்மணியின் மகனும், மகளும்கூட இன்று பகவத்கீதையை பிழை இன்றி ஒப்பிக்கிறார்கள். பரிசுகள் பெற்று வருகிறார்கள்.

இவரது வகுப்புக்கு வர வயதும் ஓர் தடை இல்லை. ஆனால் கட்டு திட்டங்கள் உண்டு. பெண்கள் என்றால் வயதிற்கு ஏற்ப புடவை, சிறுமிகள் என்றால் பாவாடை, சட்டை. கைகளில் வளையல் போட்டிருக்க வேண்டும். தலை பின்னி, பொட்டு வைத்திருக்க வேண்டும்.

ஆண்கள் என்றால் வேஷ்டி. இந்த சீதாராம சங்காவில் தற்போதுள்ள மாணவர்களின் வயது மூன்று முதல் எழுபத்தைந்து வரை. முடிந்தவரையிலும் பகவத் கீதையை எங்கும் பரவச் செய்வதே தன் நோக்கம் என்கிறார் இவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x