

தூத்துக்கு- பாளையங்கோட்டை நெடுஞ்சாலையில் வ.உ.சி. கல்லூரிக்கு அருகில் நிற்கும் தெய்வீக வேம்பின் அடியில் குடிகொண்டிருக்கிறாள் ஸ்ரீ வேம்படி இசக்கியம்மன். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளைக் கடந்து அருள்பாலித்து வரும் இசக்கியம்மனின் அருளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
கோடிக்கணக்கான பக்தர்களின் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருபவள். அந்தத் தாயை நெஞ்சில் நிறுத்தும்போது நெக்குருகி கண்ணீர் மல்கும்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடிக்குச் சில மைல்கள் தொலைவில் இருந்து ஒரு பாரவண்டி தூத்துக்குடி நோக்கி வந்தது. அப்போது முன்பாரம் அதிகமாக இருந்ததை உணர்ந்த வண்டிக்காரர், சிறிது தூரம் கடந்த பிறகு வண்டியை நிறுத்தினார்.
சாலையின் அருகே ஒரு பாறாங்கல்லைக் கண்ட அவர், அதை வண்டியின் பின்புறத்தில் ஏற்றி பாரத்தைச் சமப்படுத்தினார். வண்டி ஒரு வேப்பமரத்தின் அருகில் வந்தபோது, மாடுகள் இரண்டும் பாரம் தாங்காததுபோல் கழுத்தைக் கீழே தொங்கப் போட்டன. வண்டிக்காரர், வண்டியின் பின்புறம் உள்ள பாறாங்கல்லை எடுத்து மரத்தின் அடியில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
அந்த வேப்பமரத்தைச் சுற்றியிருந்த இடம் அப்போது கருவேல முள்காடாக இருந்தது. ஆடு மேய்க்கும் ஒரு வயதானவர் அந்தக் கல்லில் தலை வைத்து உறங்கியபோது, ஓர் அசரீரி கேட்டது. ‘என்மீது தலை வைத்து படுத்திருக்கிறாயே’ என்ற அந்தக் குரலைக் கேட்டு விழித்தெழுந்தார் வயதானவர். சுற்றும் முற்றும் பார்க்க, யாரும் தென்படவில்லை.
மரத்தடியில் குடிகொண்டவள்
மறுநாளும் அதே கல் மீது தலைவைத்து உறங்கினார். அன்று இரவு அவர் கனவில் தோன்றிய அம்மன், ‘நீ தலை வைத்து உறங்கும் கல்லில் தான் நான் உறைந்திருக்கிறேன். என்னை நீராட்டி, திலகமிடுகிறாயா?’ எனக் கேட்டிருக்கிறாள்.
அந்த வயதானவர் மெய்சிலிர்த்து எழுந்து, வேப்பமரத்தடிக்குச் சென்றார். கருங்கல்லை நீராட்டி, திலகமிட்டார். இது பல நாட்கள் தொடர்ந்தது. அவர் அம்மனை வழிபட்டு வர, அவரது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் கண்டார். அம்மனின் சக்தியைப் பரிபூரணமாக உணர்ந்தார்.
அந்த வழியாகத்தான் அருகில் உள்ள மில்லுக்கு வேலைக்குச் செல்லும் மக்களிடம் அந்தப் பெரியவர், அம்மனின் அருளை எடுத்துக்கூறினார். பிறகு அவர்களும் வழிபட ஆரம்பித்தனர். தங்களது குறைகளை அம்மனிடம் முறையிட்ட அவர்களுக்கு நல்ல பலன் கிடைத்தது.
நாளடைவில் வேப்பமரத்தின் அடியில் சிறு மாடம் கட்டப்பட்டு, ‘மாடக்கோயில்’ எழுந்தது. பிறகு கற்கோயில் எழும்பியது. இப்படியாக தூத்துக்குடி ஸ்ரீ வேம்படி இசக்கியம்மன் திருக்கோயில் உருவாயிற்று.
அம்மனுக்கு நித்ய பூஜைகள் நான்கு வேளை நடைபெறுகின்றன. வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் வெகு சிறப்பாகக் கொடை விழா நடைபெறுகிறது. பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் விசேஷ அலங்காரமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்தபடி வீற்றிருக்கிறாள் ஸ்ரீ வேம்படி இசக்கியம்மன்.