

ஸ்ரீவிஜய ராகவ பெருமாள் பிரம்மோற்ஸவம் திருப்புட்குழியில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கியது. வரும் 23ம் தேதி நிறைவு பெற உள்ளது. இதில் முறைப்படி பல வாகனங்களில் திருவீதி உலா வருவார் பெருமாள். வரும் சனிக்கிழமை (பிப்.21) எட்டாம் நாளன்று வழக்கம் போல் அதிசயக் குதிரை வாகனத்தில் அற்புதக் காட்சி அளிக்கிறார்.
பொதுவாக பெருமாள் வாகனப் புறப்பாட்டின்பொழுது, இயல் மண்டபத்தில் எழுந்தருளுவார். பின்னர் பல்லாண்டு மற்றும் ஆழ்வார் பாசுரங்கள் பாடிய பின் பெருமாள் திருவீதி உலா செல்வார்.
தச்சர்களிடம் புல் வாங்கிய பின், குதிரை வாகனருடரான பெருமாள் மீண்டும் இயல் மண்டபம் வந்து, வழக்கம் போல் பல்லாண்டு, பாசுரங்களை பாடிய பின் திருவீதி உலா செல்வார்.
இவரது இந்தக் குதிரை குறித்து அதிசய செய்தி ஒன்றை சொல்கிறார்கள். குதிரையின் தலை, உடல், வால் பகுதி என மூன்றும் தனித்தனியாக மரத்தினால் செய்யப்பட்டதாம். அவை மூன்றையும் இணைத்த பின் உயிர் பெற்ற குதிரை இரவு நேரங்களில் வயற்காட்டை மேய்ந்து தீர்த்ததாம்.
இதனால் இப்போதும் ஆண்டு முழுவதும் இக்குதிரையின் உடல் மூன்றாக பிரிக்கப்பட்டே வைக்கப்படுகிறது. பிரம்மோற்ஸவத்தின் குதிரை வாகன நாளன்று மட்டும் இணைக்கப்பட்டு விஜய ராகவன் திருக்காட்சி அருளுகிறார்.