Published : 26 Feb 2015 10:32 AM
Last Updated : 26 Feb 2015 10:32 AM

கண்ணனைத் துதிபாடியவர்

நாமசங்கீர்த்தன வைபவங்களில் இசைக்கப்படும் பாடல்கள் அனைத்தும் பல பெரியோர்களால் இயற்றப்பட்டவை. சங்கீத மும்மூர்த்திகள், தமிழ் மும்மணிகள், ராமதாசர், புரந்தரதாசர், அன்னமய்யா, கபீர்தாசர், மீராபாய் முதலிய இசைமகான்களின் பாடல்களை மனமுருகிப் பாடும்போது பாடுபவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ஆனந்தத்தையும் மனநிறைவையும் தருபவை.

இத்தகைய பாகவத பெரியோர்களின் வரிசையில் ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர் இயற்றிய ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கணி பாடல்கள் நாமசங்கீர்த்தனங்களிலும் மேடைக்கச்சேரிகளிலும் தவறாமல் இடம்பெறுகின்றன.

ஆந்திர மாநிலம் குண்டூருக்கு அருகிலுள்ள காஜா என்னும் ஊரில் 1675-ல் இவர் பிறந்தார். தம் தந்தையாரிடம் வேதம், சாஸ்திரம், சங்கீதம், தர்க்கம் முதலியவற்றைக் கற்றுத்தேர்ந்தார். இவர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த போது ஒரு திருப்பம் நிகழ்ந்தது.

அவரது மனைவி தன் பிறந்த வீட்டுக்குப் போயிருந்தார். தன் மனைவியைப் பார்ப்பதற்காகத் தன் மாமனார் வீட்டுக்குக் கிளம்பிய நாராயண தீர்த்தரின் வழியில் கோதாவரி குறுக்கிட்டது. ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல முயல்கையில் பெருவெள்ளம் வந்து அடித்துச் செல்லப்பட்டார் நாராயண தீர்த்த ஸ்வாமிகள்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு ‘ஆவத் சன்யாஸம்’ மேற்கொண்டார். அதனால் உயிர்பிழைத்த நாராயணதீர்த்தர் தனது வீடு, இல்லறம் ஆனைத்தையும் துறந்து ஸ்ரீசிவராமாநந்த தீர்த்தர் என்பவரிடம் தீட்சை பெற்றார்.

வேங்கடவன் தரிசனம்

குருவின் ஆணைப்படி இறைவனின் நாமங்களைப் பாடி பல ஊர்களில் சுற்றித்திரிந்தவர் திருப்பதி வந்தார். திருப்பதியில் பகவத் பிரசாதத்தைச் சாப்பிடும் சமயம் வேங்கடவனே குழந்தை வடிவில் வந்து பிரசாதத்தைத் தனக்குத் தரும்படி கேட்டார்.

நாராயண தீர்த்த சுவாமிகள் மிகுந்த பசியோடு இருந்ததால் பிரசாதத்தைத் தர மறுத்தார். திடீரென்று குழந்தை மறைந்துவிட, அவருக்கு உண்மை புலப்பட்டது. அதே நேரத்தில் வயிற்றுவலி என்னும் சோதனை ஏற்பட்டது.

குருவின் ஆணைப்படி இறைவனின் நாமங்களைப் பாடி பல ஊர்களில் சுற்றித்திரிந்தவர் திருப்பதி வந்தார். திருப்பதியில் பகவத் பிரசாதத்தைச் சாப்பிடும் சமயம் வேங்கடவனே குழந்தை வடிவில் வந்து பிரசாதத்தைத் தனக்குத் தரும்படி கேட்டார்.

நாராயண தீர்த்த சுவாமிகள் மிகுந்த பசியோடு இருந்ததால் பிரசாதத்தைத் தர மறுத்தார். திடீரென்று குழந்தை மறைந்துவிட, அவருக்கு உண்மை புலப்பட்டது. அதே நேரத்தில் வயிற்றுவலி என்னும் சோதனை ஏற்பட்டது.

அன்று இரவு தூங்கிக்கொண்டிருக்கையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவர் முன் தோன்றி, “ உன் நோய் விரைவில் நீங்கும். இங்கிருந்து திருவையாற்றுக்குச் செல்” என்று கூறி மறைந்தார்.

அவ்வாறே காலையில் கண்விழித்து திருவையாற்றை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார். நடுக்காவிரி என்னும் இடத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் இரவு தங்கினார். அங்கே திருமலைநாதன் கனவில் தோன்றி, அடுத்த நாள் முதலில் கண்ணுக்குப் படும் உருவத்தைத் தொடர்ந்து செல் என்று உத்தரவிட்டார்.

அவ்வாறே காலையில் கண்விழித்ததும் ஒரு வெண்பன்றியைப் பார்த்தார். அதைப் பின்தொடர்ந்தார். நாராயண தீர்த்தர் பூபதிராஜபுரம் என்னும் ஊரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தை அடைந்தார். வராகம் மறைந்தது. நாராயண தீர்த்தரின் வயிற்றுவலியும் குணமாயிற்று.

வராக (பன்றி) வடிவத்தில் மறைந்த அந்த பூபதிராஜபுரம் என்னும் ஊர் அன்று முதல் வரகூர் என்று அழைக்கப்படலாயிற்று. வரகூர் என்னும் ஊரில் ஸ்ரீநாராயண தீர்த்தர் தங்கி ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளை விவரித்துப் புனைந்த பாடல்களின் தொகுப்பே ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்று அழைக்கப்படுகிறது.

இவரது பாடல்களைக் கேட்டு பாலகோபாலனே நர்த்தனமாடினான் என்று கூறப்படுகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இவரது கனவில் கூறிய உத்தரவுப்படி இவர் வரகூரிலிருந்து திருப்பூந்துருத்தி என்னும் ஊரில் சிலகாலம் தங்கினார். அப்போது தான் முக்தியடைய வேண்டிய தருணம் நெருங்கிவிட்டதை அறிந்தார்.

‘சிவ சிவ பவ பவ சரணம்’ என்னும் சிவகீர்த்தனை பாடி முக்தி நிலை அடைந்தார். இம்மகானின் ஆராதனை இவர் முக்திபெற்ற நாளான மாசிமாத சுக்ல அஷ்டமியன்று பல இடங்களில் குறிப்பாகத் திருப்பூந்துருத்தியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x