Published : 27 Feb 2015 15:40 pm

Updated : 27 Feb 2015 15:46 pm

 

Published : 27 Feb 2015 03:40 PM
Last Updated : 27 Feb 2015 03:46 PM

மெக்கல்லம் அதிரடி தொடருமா? வெற்றி யாருக்கு? ஆஸ்திரேலியா-நியூசிலாந்து போட்டி: ஒரு பார்வை

இந்த உலகக்கோப்பை போட்டித் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அடுத்தபடியாக மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டியில் நாளை ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஏற்கெனவே ஆஸி.-நியூசி. அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்று கிளென் மெக்ரா உள்ளிட்டோர் கணித்துள்ள நிலையில் நாளை ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

நியூசிலாந்து அணி தங்களது அனைத்துப் போட்டிகளிலும் இதுவரை வெற்றி கண்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு புள்ளிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ், நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த வாய்ப்பு என்று கூறுகிறார்.

இவர் அதிகம் நியூசிலாந்து மைதானங்களில் விளையாடியிருப்பதால், “ஆக்லாந்து ரசிகர்கள் நியூசிலாந்துக்கே ஏகமனதாக ஆதரவு அளிப்பவர்கள். மேலும் கிரிக்கெட் ஆட மிகவும் கடினமான இடம் ஆக்லாந்து, அங்கு விளையாடி வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.”

ஆனாலும் ஆஸ்திரேலிய அணியில் நியூசி.யை வீழ்த்த நிறைய வீரர்கள் உள்ளனர். இருப்பினும் ஆக்லாந்தில் நியூசிலாந்தை வீழ்த்துவது கடினம்.” என்றார் ஸ்டீவ் வாஹ்.

இங்கிலாந்தை அன்று ஊதித்தள்ளினார் பிரெண்டன் மெக்கல்லம். இங்கிலாந்து இன்னிங்ஸ் 123 ரன்களுக்கு மடிய, பல்தேய்த்துவிட்டு வந்து பார்த்தால் 7 ஓவர்களில் நியூசி.யின் ஸ்கோர் 100 ரன்கள். எந்த பவுலருக்கும் மெக்கல்லம் கிரீஸில் நிற்கவில்லை.

ஆனால் நாளை ஆஸ்திரேலிய அணியை 123 ரன்களுக்கெல்லாம் நியூசி.யால் சுருட்ட முடியாது என்று கூறலாம். டிம் சவுதீ, டிரெண்ட் போல்ட் ஆகியோரை எப்படி ‘கவனிக்க’ வேண்டும் என்பதை இந்நேரம் ஆஸி.பயிற்சியாளர் டேரன் லீ மேனும், கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் தீர்மானித்திருப்பர். வார்னர், ஏரோன் ஃபின்ச், கிளார்க், மேக்ஸ்வெல், வாட்சன், ஸ்டீவ் ஸ்மித் மிட்செல் மார்ஷ் வரிசையில் நிச்சயம் 4 வீரர்கள் ஆடி விடுவார்கள். பந்துவீச்சில் பேட் கமின்ஸ் வருகிறார்.

நியூசி. அணியில் சவுதீ, டிரெண்ட் போல்ட் தவிர அனுபவமிக்க டேனியல் வெட்டோரியின் பங்கும் நாளை முக்கியமானது. அதாவது 300 ரன்களுக்கும் மேல் நியூசிலாந்து குவித்து விட்டால், பந்து வீச்சில் வெட்டோரியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

அதேபோல் பிரெண்டன் மெக்கல்லத்தை தொடக்கத்திலேயே வீழ்த்தவும் இந்நேரம் வியூகம் வகுக்கப்பட்டிருக்கும். ஆனால் கேன் வில்லியம்சன் என்ற ஒரு வீரர் எந்தப் பந்துவீச்சையும் நின்று நிதானித்து பிறகு ஒரு கை பார்க்கக்கூடியவர், இவருக்கு எதிராக ஆஸி.வியூகம் செல்லுபடியாவது கடினமே. அதே போல் ராஸ் டெய்லர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எடுத்த 117 ரன்களே நியூசி அணி வீரர் ஒருவரின் ஆஸி.க்க்கு எதிரான அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். நாளை இவையெல்லாம் உடைய வாய்ப்பிருக்கிறது.

மெக்கல்லமிற்கு எதிராக பேட் கமின்ஸை கண்ணில் காண்பிக்காமல் இருப்பது நல்லது. மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன் ஆகியோரை பயன்படுத்துவதே சிறந்தது. அப்படித்தான் கிளார்க் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். கிளார்க் ஒரு புத்திசாலித் தனமான, ஆக்ரோஷமான கேப்டன், பிரெண்டன் மெக்கல்லம்மின் சமீபத்திய கேப்டன்சி-பேட்டிங் எழுச்சி ஆகியவற்றுக்கிடையே, போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற சுவாரசியத்தை விட கிரிக்கெட் நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

2010-ஆம் ஆண்டு ஈடன் பார்க் மைதானத்தில் நியூசி.யை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. 2005-இல் நியூசிலாந்து அணி 337 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாகத் துரத்தி வென்றது.

எந்த நிலையிலும் நியூசிலாந்து அணி ஒரு சுலபமான அணி அல்ல. அதுவும் அவர்கள் சொந்த மண்ணில் நிச்சயம் அவர்கள் ஆட்டத்தில் கூடுதல் பொறி பறக்கும்.

‘ஸ்லெட்ஜிங்’ ஒரு பெரிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கலாம். இதில் ஆஸி. வீரர்கள் பலமானவர்கள். இதன் மூலம் நியூசி. பவுலர்களின் தன்னம்பிக்கையை குலைக்க முயற்சி செய்யலாம்.

எது எப்படியிருந்தாலும் ஒரு அருமையான போட்டி காத்திருக்கிறது. நாளை காலை இந்திய நேரப்படி காலை 6.30 மணி முதல் இந்தப் போட்டியைக் காணலாம்


ஆஸ்திரேலியா-நியூசிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் 2015பிரெண்டன் மெக்கல்லம்கிளார்க்வார்னர்ஜான்சன்சவுதீ

You May Like

More From This Category

More From this Author