வாழ்வைத் திசை மாற்றிய கள்வனின் அறிவுரை

வாழ்வைத் திசை மாற்றிய கள்வனின் அறிவுரை
Updated on
2 min read

ஹிஜ்ரி 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த இமாம் கஸ்ஸாலி முஸ்லிம் உலகம் போற்றும் மாபெரும் அறிஞர்.

அன்றைய நாள் வழக்கப்படி வீட்டில் ஆரம்பநிலை கல்வி கற்று முடித்ததும், மேல்நிலைக் கல்விக்காக வடகிழக்கு ஈரானின் கல்விசாலைகள் நிறைந்த நிஷாபூருக்குப் பயணப்பட்டார்.

இமாம் கஸ்ஸாலி இளம் வயது முதற்கொண்டே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கியதால் ஆசிரியரின் பாராட்டுதல்களைப் பெற்று முதல்நிலை மாணவனாக விளங்கினார். பாடங்களைக் கவனமாக கேட்டு மனதில் இருத்திக் கொள்வதோடு, மறந்திடாமலிருக்க அவற்றைக் குறிப்பெடுத்து எழுதிவருவதும் அவரது வழக்கமாக இருந்தது. அப்படி குறிப்பெடுக்கும் தகவல்களை பல்வேறு தலைப்புகளின் கீழ் வரிசைப்படுத்தி தொகுத்து வைக்கும் பழக்கத்தையும் அவர் மேற்கொண்டார்.

அப்படி எழுதி தொகுக்கப்பட்ட நூல்களை பொக்கிஷமாக இமாம் கஸ்ஸாலி பாதுகாத்து வந்தார். மேற்படிப்பு முடிந்து கிராமத்துக்கு திரும்பும் வேளையும் வந்தது.

பாலையில் பயணம்

அறிவுக்களஞ்சியமாக தொகுக்கப்பட்ட நூல்களை நான்கு ஒட்டகங்களில் ஏற்றிக் கொண்டு சக மாணவர்களுடன் குழுவாகப் பயணப்பட்டார். வழியில், பாலைநிலக் கொள்ளையர் எதிர்பட்டு பயணிகளின் உடமைகளைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.

கொள்ளையர் தலைவன் இமாம் கஸ்ஸாலியிடம் வந்தான். அவருடைய உடமைகள் ஒவ்வொன்றாய் அபகரிக்கத் தொடங்கினான். கடைசியில், ஒட்டகங்களின் மீது வைத்திருந்த பொதிகள் மீது அவன் பார்வை சென்றது.

இதைக் கண்ட கஸ்ஸாலி, அவனை மறித்து நின்று, “அய்யா, நீங்கள் என்னிடம் உள்ள அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அந்த மூட்டைகளை மட்டும் விட்டு விடுங்கள்!” என்று கெஞ்ச ஆரம்பித்தார்.

இதனால், ஒட்டகங்களின் மீதிருந்த பொதிகளில் ஏதோ விலையுயர்ந்த பொருட்கள் இருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட கொள்ளையர் தலைவன், அந்த மூட்டைகளை பிரித்துப் பார்க்கும்படி கொள்ளையர்களிடம் கட்டளையிட்டான்.

மூட்டைகளைப் பிரித்து பார்த்த அவர்களுக்கு வெறும் குறிப்பேடுகள் மட்டுமே கிடைத்தன.

“என்ன இவை? வெறும் தாள்கள்!” என்று வியப்புடன் கொள்ளையர் தலைவன் இமாம் கஸ்ஸாலியிடம் கேட்க, “இவை உங்களுக்கு பயனற்ற வெறும் தாள்களாக இருக்கலாம். ஆனால், எனக்கோ, என்னுடைய பல்லாண்டு உழைப்பில் உருவான விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள். இவை அழிக்கப்பட்டால், நிச்சயமாக நானும் அழிந்துவிடுவேன்!” என்றார் அவர் கவலையோடு.

“அதாவது.. நீங்கள் கற்றதெல்லாம் இந்த மூட்டைகளில் உள்ள மையால் எழுதப்பட்ட வெறும் தாள்கள் அப்படிதானே?” என்றான் அந்த கொள்ளையர் தலைவன்.

“ஆமாம்..!” என்றார் கஸ்ஸாலி.

“எளிதில் திருடப்படக்கூடிய, நெருப்பு, நீரால் அழிந்து விடக்கூடிய அற்பமான இந்த தாள்கள்தானா அறிவென்பது?” என்று யதார்த்தப்பூர்வமாக சொன்ன அந்தக் கள்வனின் சொற்கள் இமாம் கஸ்ஸாலியை ஆழமாக சிந்திக்கச் செய்தன.

வெறும் ஏட்டறிவு மட்டும்தானா?

இதுவரை தான் கற்றவை எல்லாம், வெறுமனே கேட்டு, எழுதி வைத்த வெறும் ஏட்டறிவு மட்டும்தானா? சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைத்தனமானவையா? அறிவு என்பது ஒரு வட்டத்துக்குள் அடங்கிக் கிடப்பதா? அதனால், யாருக்கு என்ன நன்மை?

இதுபோன்ற கேள்விகள் அடுக்கடுக்காய் மேலெழுந்தன. பேரறிவு என்பது விசாலமானது. கற்றலுக்கும் அப்பாற்பட்டது என்பதை விரைவிலேயே அவர் புரிந்து கொண்டார்.

அதன்பின் வாழ்நாள் முழுக்க அறிவைத் தேடி அவரது தேடல் தொடர்ந்தது. இந்தத் தேடலின் விளைவாக கிடைத்த பேரறிவு உலகம் போற்றும் அறிஞராக இமாம் (தலைவர்) என்ற அடைமொழியுடன் கஸ்ஸாலியை அடையாளப்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in