Last Updated : 16 Feb, 2015 12:36 PM

 

Published : 16 Feb 2015 12:36 PM
Last Updated : 16 Feb 2015 12:36 PM

ஒபாமாவின் வருகையால் என்ன பயன்?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப் பயணம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அரசியல் ரீதியாக பல்வேறு சாதக, பாதக அம்சங்கள் இந்த பயணத்தால் நிகழ்ந்ததைப் போல தொழில்துறையிலும் சில அனுகூலங்கள் நிகழ்ந்துள்ளன.

2010-ம் ஆண்டு ஒபாமா. இந்திய சுற்றுப் பயணத்தின்போது எந்தப் பயனும் ஏற்படவில்லை. அந்த வகையில் இந்த பயணம் ஓரளவு இந்தியாவுக்குச் சாதகமான பலன்களை அளிக்கும் என நிச்சயம் நம்பலாம்.

ஒபாமாவைச் சந்திக்க இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் பலரும் வரிசையாக நின்றதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு பல கேலிகளும், கிண்டல்களும் வெளியாயின. இவர்கள் அனைவரும் ஒபாமாவுடன் கைகுலுக்கி அங்கு நடைபெற்ற அமெரிக்க-இந்திய வர்த்தகக் கூட்டத்தில் ஒபாமாவின் பேச்சைக் கேட்டனரே தவிர, தொழில் ரீதியான எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.

இரு நாடுகளின் எதிர்காலம்

இந்தக் கூட்டத்தில்தான் இந்தியாவின் எதிர்காலமும், அமெரிக்காவின் எதிர் காலமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத உறவு என்று ஒபாமா குறிப்பிட்டார். இது எந்த அளவுக்கு பயனளிக்கப் போகிறது என்பதைக் காலம்தான் உணர்த்த வேண்டும்.

ஒபாமா, மோடி இடையிலான புரிதல் பல தருணங்களில் நன்கு வெளிப்பட்டது. இது எதிர்காலத்தில் இந்தியா, அமெரிக்கா இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்த உதவும். இரு நாடுகளும் பரஸ்பர இலக்கை எட்டுவதற்கும் துணை புரியும் என்று நம்பலாம்.

அணுசக்தி ஒப்பந்தம்

இந்திய அணுசக்தி விபத்து சட்டத்தில் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் விளைவாக அமெரிக்க நிறுவனங்கள் இனி இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பாதுகாப்பு துறை சாதனங் களைக் கூட்டாக உற்பத்தி செய்ய வழியேற்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்களை கூட்டாகத் தயாரிப்பது உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த 10 ஆண்டு ஒப்பந்தமும் தயாராகி வருகிறது.

2008-ம்ஆண்டு கொண்டு வரப்பட்ட அணு சக்தி விபத்து இழப்பீட்டு மசோதா காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தயக்கம் காட்டின. ஆனால் இப்போது இதற்காக ரூ. 1,500 கோடி காப்பீட்டு நிதியம் உருவாக்கப்படும் என்ற இந்தியாவின் முடிவை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு எவ்வித சட்ட திருத்தமும் தேவையில்லை என்பதும் அமெரிக்க நிறுவனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அமெரிக்க நிறுவனங்களான ஜிஇ, வெஸ்டிங்ஹவுஸ் மட்டுமின்றி ஹிடாச்சி போன்ற பிற வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் அணு மின் நிலையங்கள் அமைக்க முன் வரக்கூடும். இந்த நிதியத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் ரூ. 750 கோடியை ஒதுக்க வேண்டியிருக்கும், எஞ்சிய தொகையை மத்திய அரசு அளிக்கும்.

இந்தியாவின் பிடிவாதம் தளர்ந்தது

பருவ நிலை மாறுபாடு பிரச்சினையில் வளரும் நாடுகளைச் சேர்க்க வேண்டும் என்ற இந்திய நிலைப்பாட்டில் சிறி தளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா வெளியேற்றும் கரியமில வாயு அளவுக்கு கட்டுப்பாடு கொண்டு வரவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவில் கரியமிலவாயு வெளியிடும் நாடுகளில் மூன்றாமிடத்தில் இந்தியா உள்ளது. இருப்பினும் மேலை நாடுகளில் சராசரி நபர் வெளியிடும் அளவை விட இது குறைவு என இதுவரை இந்தியா வாதிட்டது.

மேலும் இந்தியாவில் அன்றாடம் ஒரு டாலருக்கும் குறைவான வருவாய் ஈட்டும் மக்கள் உள்ளதால், பொருளாதாரத்தை மேம்படுத்து வதுதான் முக்கியம் எனக் கூறி வந்தது. ஆனால் இப்போது தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டுள்ளது. ``வளரும் நாடுகள் குறிப்பாக இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் பருவநிலை மாறுபாட்டைச் சமாளிப்பது சாத்திய மில்லை’’, என ஒபாமா உறுதிபடக் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும். இது சாதகமா? பாதகமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

வர்த்தகத்தை அதிகரிக்க

இரு நாடுகளிடையிலான வர்த்த கத்தை ஐந்து மடங்காக அதிகரிக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இப்போது இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 10,000 கோடி டாலராக உள்ளது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகம் 2012-ம் ஆண்டிலேயே 58 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்பதில் இரு தலைவர்களும் உறுதியாக உள்ளது அவர்களது பேச்சில் வெளிப்பட்டது. 400 கோடி டாலர் முதலீடு மற்றும் கடன் அளிக்க ஒபாமா முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே.

அமெரிக்க நிறுவனங்கள் ஊக்குவிப்பு

இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களை ஊக்கு விக்கும் வகையில் அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கு 100 கோடி டாலர் நிதி உதவி அளிக்கப்படும் என ஒபாமா அறிவித்துள்ளார். இதேபோல அமெரிக்க வெளிநாடு தனியார் முதலீட்டு கார்ப்பரேஷன் 100 கோடி டாலர் நிதியை சிறு மற்றும் நடுத்தர இந்திய நிறுவனங்களுக்கு கடனாக அளிக்கும் என்பதும் சிறு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியே.

இது தவிர மரபு சாரா புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு உதவ 200 கோடி டாலரை அமெரிக்க வர்த்தக மேம்பாட்டு முகமை ஒதுக்குவதாகக் கூறியுள்ளது இத்துறை சார்ந்த நிறுவனங்களை ஊக்குவிக்கும். அனைத்துக்கும் மேலாக இரு தலைவர்களும் நேரடியாக பேசு வதற்காக `ஹாட்லைன்’ வசதி ஏற்படுத் தப்படும் என்ற அறிவிப்பு, இருதரப்பு உறவை மேலும் வலுப் படுத்தவும், வர்த்தகத்தை அதிகரிக்க உதவும் என்று நிச்சயம் நம்பலாம்.

ஒபாமா, மோடி இடையிலான புரிதல் பல தருணங்களில் நன்கு வெளிப்பட்டது. இது எதிர்காலத்தில் இந்தியா, அமெரிக்கா இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்த உதவும்.

பலன்கள் 10

$ அணு சக்தி ஒப்பந்தத்தில் இரு நாடுகளிடையே நிலவி வந்த தேக்க நிலை நீங்கியுள்ளது.

$ அணு விபத்து பாதுகாப்பு பிரச்சினையிலிருந்து இந்தியா வெளி வந்துள்ளது.

$ இரு நாடுகளிடையே முதலீடுகளை ஊக்குவிக்க 400 கோடி டாலர் ஒதுக்குவதாக ஒபாமா அறிவித்துள்ளார்.

$ சுற்றுச் சூழல் பாதுகாப்பு மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக வழியேற்பட்டுள்ளது.

$ இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 100 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

$ இரு நாடுகளிடையிலான ஒப்பந்தங்களை கண்காணித்து அதிகாரிகள் நிலையிலான முட்டுக்கட்டையை நீக்க குழு அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

$ பரஸ்பர முதலீட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் அலுவலகம் முன்வந்துள்ளதோடு பெரிய திட்டப் பணிகளை கண்காணிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

$ 10 ஆண்டுகளுக்கான புதுப்பிக்கக் கூடிய ராணுவ ஒப்பந்தம் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் ராணுவத்துக்குக் கிடைக்க வழியேற்பட்டுள்ளது. புதிய ராணுவ சாதனங்களை கூட்டாக இந்தியாவில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

$ விசாகப்பட்டினம், ஆஜ்மீர், அலகாபாத்தில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க ஒத்துழைப்பு அளிக்கவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.

$ பாரம்பரிய மருத்துவ முறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்படவும் அமெரிக்கா தயாராக உள்ளது.

தொடர்புக்கு: ramesh.m@thehindutami.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x