Published : 05 Feb 2015 01:54 PM
Last Updated : 05 Feb 2015 01:54 PM

வாழ்வை வளப்படுத்தும் தெய்வ விருட்சங்கள்

மரங்களை வளர்த்தால் மழை பொழிந்து மனித இனத்துக்கு வளம் சேர்க்கும் என்பது பலரும் அறிந்ததே. அழகுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் வளர்க்கப்படுகிற மரங்களைப் போலவே கோயில்களில் தெய்வீக சக்தி நிறைந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. அப்படி வளர்க்கப்படுகிற சில தெய்வீக விருட்சங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

வரம் தரும் தாவரம்

வரம் தருவதால் அது தாவரம் எனப்பட்டது. விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் என்று பெயர். நாம் நடக்கும் பாதையில் இருக்கும் அருகு முதல் ஆண்டவன் சந்நிதிக்குப் பின்புறம் முளைத்தெழும் மரங்கள் வரை அனைத்துமே தெய்வாம்சம் நிறைந்தவைதான் என்று விருட்ச சிந்தாமணி சொல்கிறது. சில மரங்கள் தனித்தன்மை கொண்டவை என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொன்றை மரம்

சரக்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிற இந்த மரத்தை அமாவாசையன்று பூஜை செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.

மகிழ மரம்

இந்த மரம் திருவண்ணாமலை கோயில் மரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெய்வ மரத்தை வீட்டில் வளர்த்து வந்தால், குழந்தைகள் அதன் காற்றைத் தொடர்ந்து சுவாசித்து வர அறிவு வளரும் என்று சொல்வர்.

பன்னீர் மரம்

இந்தப் பன்னீர் மரம் திருச்செந்தூர் கோயில் மரம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த மரத்தை வீட்டில் வளர்த்து அதன் அருகில் வாகனங்களை நிறுத்த, விபத்துகள் நடக்காமல் பாதுகாக்கப்படும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை மற்றும் திரயோதசி திதி நாளில் இந்த மரத்துக்குப் பூஜை செய்யலாம்.

குறுந்த மரம்

வாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள், தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால் இந்த விருட்சத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நடு அறையில் கட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பும்ஸிக மரம்

சந்தான பாக்யத்தைத் தருகிற இந்த தெய்வ விருட்சத்தை வீட்டில் வளர்த்து வந்தால் பிள்ளைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. இதன் காற்று படும்படி மரத்தைச் சுற்றிவர வேண்டும்.

அரிசந்தன மரம்

திருவோண நட்சத்திர நாளில் புதன், சனிக்கிழமைகளில் இந்த மரத்தை வழிபட்டுவர தீமைகள் விலகி, நன்மை சேரும் என்று சொல்வார்கள்.

பரிசாதகம்

அனுமன் மரம், சிரஞ்சீவி மரம் என்ற பெயர்களுடைய இந்த மரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்பது ஐதீகம். அமாவாசை மூல நட்சத்திர நாளில் இந்த மரத்தைக் குழந்தைகள் வழிபட்டு வர ஆயுள் விருத்தியடையும் என்பது நம்பிக்கை.

மந்தாரக மரம்

வெள்ளை மந்தாரை என்ற மலரைத் தருகிற இந்த விருட்சத்தை செவ்வாய், சனி ஏகாதசி தினங்களில் வழிபட்டால் மனதில் எண்ணிய நல்ல செயல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கேட்டதைத் தரும் கல்பதரு என்றும் இந்த மரத்தைச் சொல்வார்கள்.

பின்னை மரம்

திருமண விருட்சம் என்ற அபூர்வமான இந்த மரத்தைத் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் வெள்ளி, பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றி வந்து வணங்கி, கையில் காப்புக் கட்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

கருநெல்லி மரம்

திருமகள் வாசம் செய்வதாகக் கூறப்படும் இந்த மரத்துக்கு லட்சுமி மரம் என்ற பெயரும் உண்டு. வளர்பிறை அஷ்டமி, பூர நட்சத்திரம், பவுர்ணமி நாளில் வழிபட்டால் வறுமை நீங்கி, வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

செண்பக மரம்

சௌபாக்ய விருட்சம் என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளங்கள் சேரும் என்பது ஐதீகம்.

பிராய் மரம்

மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு. தொழிற்சாலை வைத்திருப்போர் முன்பகுதியில் இந்த மரத்தை வளர்த்தால் 5 கி.மீ சுற்றளவுக்கு இடி தாக்காது என்று சொல்வார்கள்.

திருச்சி திருப்பராய்த்துறை சிவாலயத்தில் தல விருட்சமாக ஒரு மரம் மட்டுமே உயிர்வாழ்கிறது. பிராய் மரங்கள் நிறைந்திருந்ததால் திருப்பராய்த்துறை என்ற பெயர் நிலைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x