நன்மக்கள் நலம் பெற திருக்கல்யாணம்

நன்மக்கள் நலம் பெற  திருக்கல்யாணம்
Updated on
1 min read

சென்னை மாநகரில் உள்ள ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியில் ஸ்ரீனிவாச கல்யாணம் இறுதிநாளன்று நிகழ்த்தப்பட்டது.

காற்றோட்டமான திறந்தவெளி. பக்தர்கள் அமர வசதியாக நாற்காலிகள். பெரிய திரையில் உடனுக்குடன் காட்சிகளின் ஒளிபரப்பு. வயதான, பார்வை மங்கிய பக்தர்கள் மட்டுமல்ல வெகு தூரத்தில் அமர்ந்திருந்த அனைத்து பக்தர்களும் முழுமையாகக் கண்டு களிக்க இந்த ஒளிபரப்பு தொழில்நுட்பம் வந்தது காலத்தின் நற்பயன்.

திருமலையில் நிகழ்வது போலவே வேத விற்பன்னர்கள் வேத கோஷம் செய்ய, பாலிகை தெளித்து, தீ வளர்த்து, சங்கல்பம் செய்தனர். ஆண்டாள் மாலை ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்து மேளதாளத்துடன் வந்தது.

அந்தக் கூடையில் இருந்த மலர் மாலையை பட்டு வஸ்திரத்தால் மூடி தலை மீது வைத்துக் கொண்டு வந்தார்கள். ஓலைகளால் செய்யப்படும் பிரபல ஆண்டாள் கிளி கூடையில் மேலிருந்து எட்டிப் பார்த்தது ஆனந்தப் பரவசம்.

ஆண்டாளின் வாரணமாயிரம் என்ற பாடல் தொகுப்பில் கடைசி பாசுரத்தில், இப்பாடல்களைப் பாடினால் நன்மக்களைப் பெற்று வாழ்வர் என்கிறாள். வழக்கம்போல் இத்திருமண வைபவத்திலும் வாரணமாயிரம் பாடி தேங்காய் உருட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாளின் மக்களான இந்நிலவுலகத்தினரும் நன்மக்கள் ஆவர் என்பது ஐதீகம்.

கோவிந்த கோஷத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீநிவாசப் பெருமாளின் திருக்கல்யாணம் இனிதே நிறைவேறியது. இவ்வைபவத்தில் ஹோமத் தீ வலம் சுழித்தது பக்தர்களுக்கு வரப்பிரசாதம்.

பாரம்பரியம் மாறாமல் திருமணம் நிறைவுற்றதும் திருப்பதி லட்டு, மஞ்சள் நிற கங்கணக் கயிறு, குங்குமம் ஆகியவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கோவிந்த நாமம் குறைகளைப் போக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in