

திருஅருட்பிரகாச வள்ளலார் என அன்புடன் போற்றப்படும் ராமலிங்கர் உலகுக்கு அளித்த மகா மந்திரம் `அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை’. செயலனைத்தும் அருள் ஒளியால் கண்டவர் வள்ளல் பெருமான்.
தமிழ் உரைநடைக்கு ராமலிங்கரின் பணி மகத்தானது. `மனுமுறை கண்ட வாசகம்’ என்னும் பெருமானின் உரைநடைகள், தமிழை எளிய மக்களுக்கும் கொண்டுசேர்த்தது. தமிழை புலவர்களின் பிடியிலிருந்து சாதாரண மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில், மகாகவி பாரதிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் வள்ளல் பெருமான்.
அப்பா நான் வேண்டுதல், கோடையிலே இளைப்பாற்றி, எத்துணையும் பேதமுறாது, ஒருமையுடன் நினது திருமலரடி, சாதியிலே மதங்களிலே, தனித்தனி முக்கனி பிழிந்து எனப் பல பாடல்களைச் சான்றாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
மொழி வெறி கடந்து தாய்மொழி மாண்புணர்ந்தவர் ராமலிங்கர். இறை வழிபாட்டுக்கு தாய் மொழியாகிய தமிழே உகந்தது என்றார். அவர் சமத்துவ சமுதாயம் அமைய விரும்பியவர்.
சமதர்மவாதி ராமலிங்கர்
“ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல்” நடத்த வேண்டும் என விழைந்த சமதர்மவாதி ராமலிங்கர். எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதப் பிறவியின் நோக்கம் `தன்னை அறிந்து இன்பமுறுதல்’ எனத் தெளிந்ததால், வடலூரில் ஞான சபை அமைத்து, மனமாசுகள் களையப் பெற்றால் மனம், பளிங்கைப் போல் ஒளிரும். அப்போது அருட்பெருஞ்ஜோதி உள்ளத்தில் ஒளிர்ந்து பிரகாசிக்கும் என்பதை உணர்த்தினார்.
மனிதன் தன்னை அறிந்து கேடின்றி வாழ வேண்டுமானால், அவனுடைய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக வேண்டியது அவசியமாகும். உண்ண உணவு, பண்பட்ட கல்வி, உடுத்த உடை, இருப்பிடம் இவையெல்லாம் இன்றியமையாத் தேவைகள்.
எனவேதான் பசி போக்க சத்திய தருமச் சாலையையும் பண்பட்ட கல்வி அளிக்க சத்திய வேத பாட சாலையையும் அமைத்தார். பாடசாலையில் மனிதத்தின் மாண்பை உணர்த்தவல்ல திருக்குறளைக் கற்பிக்க பணித்தார்.
ராமலிங்க பெருமான் வாழ்ந்த காலம், சாதி அடிப்படையில் மடாதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட காலம். சாதி, மத வெறியின் அடர்த்தி மிகுந்திருந்த காலம். அத்தகைய சூழலில், `சாதியும் சமயமும் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர்’ எனப் பெருமான் உபதேசித்தார் என்றால், நெஞ்சில் திறமும் உண்மைத் தெளிவும் இருந்ததால் மட்டுமே அவருக்கு இது சாத்தியப்பட்டது.
சித்துக்கள் செய்யாத மகான்
`ஒன்றெனக் காணும் உணர்ச்சி’ மேலோங்க உழைத்தவர் பெருமான். எளிமையும் அடக்கமுமே அவரின் சிறப்பு. சித்துக்கள் செய்யும் வல்லமை பெற்றிருந்தும் அவர்தம் எளிமை அந்த வல்லமையைத் தடுத்தது.
சித்துக்கள் செய்து `உலகெலாம் பெரியவர்… பெரியவர்… எனச் சிறக்கும்’ ஆசையே இல்லாதிருந்தார். ஏதேனும் சித்து செய்வார் என அவரைச் சுற்றி மக்கள் பெருங் கூட்டமாகக் குழுமி இருந்தனர். சித்துக்களை மறுக்க உபதேசித்த உண்மையாளரிடமிருந்து சித்தாற்றல் பிறக்குமா?
பெருமானின் முதன்மைச் சீடர் மூலமாகவே இவ்வுண்மையை நாம் அறியலாம். பிரம்மஞான சங்கத்துக்கு தொழுவூர் வேலாயுதனார் எழுதியதாவது:
“இவர் சாதி வேற்றுமை பாராட்டலாகாது என்று போதித்ததால் ஜனங்கள் பிரியப்பட்டார்களிலர். எனினும் பல சாதியாரும் இவரைச் சற்றிப் பெருங்கூட்டமாய்க் கூடினர். அவர்கள் இவருடைய போதனைக்காக வந்திலர். ஆயினும் அவர் அற்புதச் சித்திகளைப் பெற்றவர் என்று கேள்வியுற்று அவ்வற்புதங்களைப் பார்க்கவந்தவர்”
தொழுவூராரின் மேற்கூற்றிற்கு வலுசேர்ப்பது போல சாதனை செய்யும் மார்க்கம் ஏதேனும் ஒன்றைக் காட்டுமாறு பெருமானை வேண்டிய நண்பர் ஒருவருக்கு, நம் பெருமானின் கூற்று அமைந்துள்ளது இவ்வாறு:
“நீ என்னைப் போல் ஏழை. சாதனை செய்யின் சிறிது ஒளி தோன்றும் சில சித்திகள் நடக்கும். அதைக்கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட்டுவிடுவோம். ஆதலின் உனக்குச் சாதனை ஒன்றும் வேண்டாம். எல்லா உயிரும் தன் உயிர் போல் நினைக்கும் பழக்கத்தை வருவித்துக் கொள். அப்பழக்கம் வந்தவர் எவனோ, அவனே எல்லாம் வல்லவனும் கடவுளுமாம்.”
எவ்வுயிரும் தம்முயிர் போல்…
இந்த ஒருமை உணர்வுதான் பெருமானின் தனித்துவம். அதனால்தான், இறைப்பொருளை, `இயற்கை உண்மைக் கடவுளே’ என்றும் இறைவன் நடனமிடும் சிற்சபையை `எங்குமாய் விளங்கும் சிற்சபை’ என்றும் எடுத்துரைத்தார்.
இந்த ஒருமை உணர்வுதான் கருணையின் இருப்பிடம். இந்நிலைப்பாடுதான் உலகை உய்விக்கும் என்பதைப் பெருமான் உணர்ந்திருந்தார். `ஜீவகாருண்ய ஒழுக்கம்’ என்ற அருந்தமிழ் உரைநடை நூலின் வாயிலாக `மோட்ச வீட்டின் திறவுகோல் ஜீவகாருண்யமே’ என அறுதியிட்டு உரைத்தார்.
இறைவன் வாழும் இடம் எது எனக் கேட்டால், பெருமான் இவ்வாறு கூறுவார்:
“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடமென நான் தெரிந்தேன்…”
தைத் திங்களன்று பூசப் பெருவிழா வடலூர் பெரு வெளியில் சிறப்புற நடைபெறும் திருவிழாவாகும். அப்போது, நம் மனத்தின் அழுக்குகள் அகற்றப்பட வேண்டும் என்பதை விளக்கும் வகையில், சத்திய ஞான சபையின் ஏழு திரைகளும் அகற்றப்படும். நம் உள்ளமே ஞானசபை. நம்முள்ளேயே அருட்பெருஞ் ஜோதி விளங்கவல்லது. எனவேதான்,
“சபை எனதுளமெனத்தான் அமர்ந்தெனக்கே
அபய மளித்தோர் அருட்பெருஞ் ஜோதி” என்றார் வள்ளல் பெருமான்.