

விழுப்புரம் மாவட்டம் தொரவி கிராமத்தில் அமைந்துள்ள பெரிய நாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில், மகாபெரியவர் வேதம் படிக்கச் சென்றபோது தரிசித்த இடமாகும். 1300 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தச் சிவாலயம் தற்போது சீர்குலைந்த நிலையில் உள்ளது.
எளிய பலிபீடம் முன்பாக நந்திதேவர் மேற்குமுகமாய் இறைவனை நோக்க அமைந்துள்ளார். மகான்கள், துறவிகள் தொடங்கி எளிய மக்களுக்கும் அருள் வழங்கிய கைலாசநாதர் கிழக்கு முகமாய் காட்சி தருகிறார்.
ஆலயம் சிதிலமடைந்திருந்தாலும் கைலாசநாதரின் அருளுக்குக் குறைவில்லை. ஆதிசங்கரர் வழிபட்ட சிவலிங்கம் என்ற செவிவழி செய்தியும் உள்ளது.
ஆலயத்தின் பின்னால் வலதுபுறம், விநாயகர், முருகன், நாகர் சிலைகள் வானமே கூரையாய் அருள் தருகின்றன. அத்துடன் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது.
காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகர சுவாமிகள் விழுப்புரத்திலிருந்து பகண்டையில் வேதம் படிக்கச் சென்ற போது இக்கிராமத்தில் கேணிகுளம் என்ற இடத்தில் உள்ள குளத்தில் குளித்து அங்குள்ள இரட்டை சிவலிங்கம் மற்றும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு சென்றிருக்கிறார்.
மருத்துவர் கைவிட்டவரையும் காப்பவர்
தொரவி கைலாசநாதர் எளிமையாய் சிதிலமடைந்த கருவறைக்குள் அமர்ந்து அருள்பாலிக்கிறார். மருத்துவரும் கைவிட்ட நோயாளிகளையும் காத்தருளியுள்ளார் இத்தலத்து இறைவன் என்கிறார்கள் பக்தர்கள்.
பெருமைகள் மிக்க இந்த ஆலயம் நித்யபடி பூஜை இல்லாமல் திருவிளக்கு ஏற்றாமல் பாழடைந்திருந்தது. இதை பார்த்த புதுச்சேரியைச் சேர்ந்த சிவநெறித் தொண்டர்கள் மாதம்தோறும் பிரதோஷ வழிபாடு மற்றும் சிவராத்திரியில் அன்னாபிஷேகம் செய்து வருகின்றனர்.
தாயும், தந்தையுமாய் நமக்கு அருள்பாலிக்கும் தொரவி கைலாசநாதருக்கு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை புதுச்சேரி வாழ் சிவனடியார்கள் ஏனாதிநாத நாயனார் அறக்கட்டளை மூலமாய் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதற்கான பாலஸ்தாபன பூஜையும் நடத்தியுள்ளனர்.
விழுப்புரம்-திருக்கனூர்-வழுதாவூர் வழித்தடத்தில் விழுப்புரத்தில் இருந்து 12 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தொரவி திருத்தலம் உள்ளது.