நீங்காத செல்வம் அருளும் நீராட்டம்

நீங்காத செல்வம் அருளும் நீராட்டம்
Updated on
1 min read

மாசி மாதம் கோயில்கள் திருவிழாக் கோலம் பூணும் மாதம். இம்மாதத்தில் வரும் மக நட்சத்திரமே இதற்குக் காரணம். இதனையொட்டியே பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பாகக் கொண்டாடப்படுவது மகாமகம்.

அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் மகாமகக் குளத்தில் நீராடுகின்றனர். கும்பகோணத்தில் உள்ள இந்தக் குளம், தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் ஒரு அமிர்தமே.

ஒவ்வொரு சதுர்யுகம் முடிந்த பின் உலகம் ஊழி்ப் பேரலையில் மூழ்கிவிடும். மூழ்கிய உலகினை மீட்டு, உயிர்ப்படையச் செய்ய வேண்டும். இந்தப் பேரலையில் அடித்து வரப்பட்ட ஓர் கலசம் கரை ஒதுங்கியது. இதனை சிவபெருமான் அம்பு எய்து உடைத்தார் அதிலிருந்த அமிர்தத்தின் ஒரு பகுதி தெறித்து விழுந்தது. எனவே அவ்விடம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றது.

கங்கை, யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற பன்னிரு புண்ணிய நதிகள் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் இக்குளத்திற்கு மகாமகத்தன்று வந்து சேருகின்றன. அவை தங்களிடம் சேர்ந்துள்ள மனிதர்களின் பாவங்களை கழுவிக் களைகின்றன என்கிறது இப்புராணம்.

மீண்டும் புனிதமாகிவிட்ட அந்நதிகள் ஒரு சேர இங்கு சேர்ந்துள்ள நிலையில், நீராடினால் பல பிறவிகளின் பாவம் முழுவதும் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகத் திருவிழா 2016 ம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது.

இத்திருநாள் மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத மக நட்சத்திரத்தன்று முருகன், சிவன், பெருமாள் என்று கடலோரம் கோயில் கொண்ட கடவுளர் உட்பட அனைத்துத் திருக்கோயில்களிலும் மாசி மகத் திருவிழா காணுதல் உண்டு. அவ்வகையில் அந்தந்தப் பெருமாள் கோயில்களில் உள்ள திருக்குளத்தில் சக்கரத்தாழ்வார் நீராட்டம் பெறுவார். கடலோரம் குடி கொண்ட பெருமாளோ, கருட வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளுவார்.

இத்தகைய மாசி உற்சவத்தில் திருக்கண்ணபுரத்து செளரிராஜ பெருமாள் திருமலைராயன் பட்டணப் பகுதியில் உள்ள கடற்கரையில் தீர்த்தவாரி கண்டு, மீனவர்கள் அளிக்கும் மரியாதையை ஏற்பார்.

மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில் என்பது பிரபலமான சொலவடை. மகாமகம் ஏற்படுவதற்கு முன்னரே தீர்த்தவாரி நல்லூரில் ஏற்பட்டதாக அவ்வூர் தல வரலாறு குறிப்பிடுகிறது.

சென்னை திவ்ய தேசமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாசி மகத்தையொட்டி மெரினா கடற்கரையில் எழுந்தருளுவார். மயிலை மாதவ பெருமாளும் கண்ணகி சிலை அருகே கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

மாசி மக நீராட்டம் மனித வாழ்க் கையை மலர் தேரோட்டமாக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in