அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளிய புத்தர்

அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளிய புத்தர்
Updated on
1 min read

அஜபால ஆல மரத்தின் அடியில் இருந்த பகவன் புத்தர் அர்த்தமற்ற கடுமையான உண்ணாவிரதத்தால் உடம்பை வாட்டிக் கடும் தபசு செய்வதிலிருந்து விலகி, நன்மையான மத்திய வழியிலே சென்று புத்தஞானப் பதவியை அடைவது எவ்வளவு நன்மையானது என்று தமக்குள் எண்ணினார்.

இவ்வாறு பகவன் புத்தர் எண்ணியதை அறிந்த மாரன் அவரிடம் வந்து, “உயிர்களைத் தூய்மைப் படுத்துகிற கடுமையான தவம் செய்வதிலிருந்து விலகிவிட்ட நீங்கள், தூய்மையானவர் என்று நினைக்கிறீரா? நீர் சுத்த மார்க்கத்திலிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறீர்கள்” என்று கூறினான். இவ்வாறு பேசியது மாரன் என்பதைப் பகவன் புத்தர் அறிந்துகொண்டார். அவருக்கு இப்படி விடை கூறினார்:

மறைந்த மாரன்

“அமரத்தன்மை பெறுவதற்காக உடம்பை வருத்தித் துன்பப்படுத்திக் கடுந்தபசு செய்வது எப்படியிருக்கிறது என்றால், கடலிலே செல்லும் கப்பலைக் கொண்டு வந்து மணல் நிறைந்த பாலைவனத்தில் வைத்து துடுப்புக் கொண்டு துழாவி ஓட்டுவதுபோல இருக்கிறது.

அப்படிச் செய்வது வீண் முயற்சி என்று அறிந்து, மார்க்க ஞானத்துக்கு நற்பாதையாகவுள்ள சீல, சமாதி, பிரக்ஞை என்கிற மூன்று விதமான குணங்களை மேற்கொண்டு தூய்மையடைந்தேன். மாரனே! உன்னை நான் வென்றேன்,” என்று கூறினார். அப்போது மாரன், பகவன் புத்தர் தன்னைத் தெரிந்துகொண்டார் என்பதையறிந்து, வெட்கமும் வருத்தமும் அடைந்து அவ்விடத்தில் இருந்து மறைந்துவிட்டான்.

மாறுவேடம்

இரவு வேளையில் பகவன் புத்தர் அஜபாலன் என்னும் ஆலமரம் அருகே உலாவிக் கொண்டிருந்தார். பிறகு அருகிலிருந்த ஒரு பாறைக் கல்லின் மேல் அமர்ந்தார். அப்போது மாரன் அவரை அச்சுறுத்த எண்ணினான். மிகப் பெரிய யானையின் உருவம் கொண்டு அச்சம் தரத்தக்க முறையில் அவ்விடம் வந்தான்.

அந்த யானையின் தலை பாறையைப் போன்று பெரிதாக இருந்தது. தந்தங்கள் வெண்மையாக வெள்ளி போன்றிருந்தன. தும்பிக்கை நீண்டு ஏர்க்காலைப் போல இருந்தது. இவ்வாறு வந்தவன் மாரன் என்பதைப் பகவன் புத்தர் அறிந்துகொண்டார்.

“நீண்டகாலமாக என்னை அச்சுறுத்துவதற்காக இனிய, நல்ல உருவங்களையும் அச்சம் தரும் கொடிய உருவங்களையும் தாங்கிக்கொண்டு என்னிடம் வருகிறாய். இது மிக இழிவான செயல். மாரனே, உன்னுடைய முயற்சிகள் வீணாயின” என்று கூறினார். அப்போதும் தன்னைப் புத்தர் அறிந்துகொண்டதை உணர்ந்த மாரன் வெட்கமும் துக்கமும் கொண்டு மறைந்துவிட்டான்.

மற்றொரு முறை மாரன், பகவன் புத்தரை அச்சப்படுத்த எண்ணி, ஒரு நள்ளிரவிலே வெவ்வேறு உருவங்களைக் காட்டினான். அப்போது பகவன் புத்தர், “மாரனே! மனம் வாக்குக் காயங்களை (மனசு, பேச்சு, உடல்) உறுதியுள்ள அரணாக அமைத்துக்கொண்ட முனிவர்கள் உன்னுடைய செயலுக்கு அஞ்சித் தோல்வியுற மாட்டார்கள்,” என்று கூறினார். உடனே மாரன் முன்போலவே அவ்விடத்தைவிட்டுப் போய்விட்டான்.

நன்றி: மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘கவுதம புத்தர்'

தொகுப்பு: ஆதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in