Published : 19 Feb 2015 12:16 PM
Last Updated : 19 Feb 2015 12:16 PM

சிகப்பு சாத்தி, பச்சை சாத்தி உலா : திருச்செந்தூர் மாசித் திருவிழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்கள், கந்த சஷ்டி விழா, வைகாசி விசாகம், தைப்பூசம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

மாசித் திருவிழா மிகவும் விசேஷம். இதுவே முருகனுக்குரிய மகோற்சவம். மாசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் தொடங்கி, மகம் வரை 12 நாட்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானின் அருளைப் பெறும் பெருந்திருவிழா.

திருச்செந்தூரில் முருகன்தான் மூலவர். திருச்செந்தூர் முருகனுக்கு இரண்டு உற்சவர்கள். பிரதான உற்சவர் சண்முகக் கடவுள். இன்னொரு உற்சவர் ஜெயந்திநாதர். உற்சவர்களுக்கே உற்சவர்கள் உள்ளது திருச்செந்தூரின் சிறப்பம்சமாகும். குமரவிடங்கப் பெருமான் சண்முகரின் உற்சவர்.

அலைவாயகந்தப் பெருமான் ஜெயந்திநாதரின் உற்சவர். இந்த நான்கு உற்சவர்களுக்குமே கோயிலில் தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இந்த உற்சவ சுவாமிகள் மாசித்திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் செந்தூர் நகரின் ரத வீதி உலாக்களில் தரிசனம் கொடுத்து பக்தர்களுக்கு முருகனின் திருவருளை அளிக்கின்றனர்.

சப்பரத்தில் வீதி உலா

மாசித் திருவிழாவின் முதல் நாளில் கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப பூஜை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் திருக்கோயில் செப்புக் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படும்.

மாலையில் திருச்செந்தூர் நகரின் சன்னதி தெருவில் உள்ள அருள்மிகு அப்பர் சுவாமிகள் திருக்கோவிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் முருகப்பெருமான் “தந்தப் பல்லக்குச்” சப்பரத்தில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

ஐந்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஏழாம் நாள் திருவிழா மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் மட்டுமே பிரதான உற்சவர் சண்முகக் கடவுளின் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கின்றது. ஏழாம் திருவிழா அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைவார்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். “சிவபெருமானும் தானும் ஒருவரே” என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் இவ்வாறு காட்சி தருகிறார்.

பிரம்மாவும் நானே

எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியில் சண்முகர் எழுந்தருளி, திருவீதி வலம் வருகிறார். “படைக்கும் தொழிலைப் புரிகின்ற பிரம்மாவும் நானே” என்பதை உணர்த்தும் விதத்தில் இவ்வாறு வலம் வருகிறார். பின் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று பகல் 12.00 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் சேர்கிறார்.

“காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலும் நானே” என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்சி தருகிறார். பச்சை சாத்தியில் வருகின்ற முருகப்பெருமானை லட்சக் கணக்காண பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து தேங்காய், பழம் படைத்து வழிபடுவார்கள். இதனால் நகரின் ரத வீதிகளில் பன்னீர் வாசனையை நாள் முழுவதும் பக்தர்கள் உணர முடியும்.

கயிலாய வாழ்வுக்குச் சமம்

ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழாத் தேரோட்டம் அன்று காலை 6 மணிக்கு மேல் துவங்கும். பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திரு வீதி வலம் வந்து நிலை சேர்கிறது.

பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி செந்தூர் நகரின் ரத வீதிக்கு மெற்கே உள்ள தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெறும். 12-ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறும்.

“கயிலை மலையனைய செந்திற்பதிவாழ்வே” என திருச்செந்தூரில் வாழ்வது கயிலாய வாழ்விற்குச் சமமானது என்று அருணகிரியார் போற்றிப் புகழ்கிறார். அப்புகழ் பெற்ற திருச்செந்தூரில் மாசித்திருவிழாவில் முருகப் பெருமானை தரிசனம் செய்வது மனதிற்கு நிம்மதியையும் நிறைவையும் தரக்கூடியது.

ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழாத் தேரோட்டம் அன்று காலை 6 மணிக்கு மேல் துவங்கும். பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திரு வீதி வலம் வந்து நிலை சேர்கிறது.

பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி செந்தூர் நகரின் ரத வீதிக்கு மெற்கே உள்ள தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெறும்.

12-ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறும். “கயிலை மலையனைய செந்திற்பதிவாழ்வே” என திருச்செந்தூரில் வாழ்வது கயிலாய வாழ்விற்குச் சமமானது என்று அருணகிரியார் போற்றிப் புகழ்கிறார். அப்புகழ் பெற்ற திருச்செந்தூரில் மாசித்திருவிழாவில் முருகப் பெருமானை தரிசனம் செய்வது மனதிற்கு நிம்மதியையும் நிறைவையும் தரக்கூடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x