Published : 22 Jan 2015 15:38 pm

Updated : 22 Jan 2015 15:38 pm

 

Published : 22 Jan 2015 03:38 PM
Last Updated : 22 Jan 2015 03:38 PM

மலையின் உருவில் கணபதி

கொங்கணி பிரதேசம், கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வாரில் தொடங்கி மகாராஷ்டிரத்தின் பான்வெல் வரை நீண்டிருக்கிறது. இதன் கடற்கரை மிகவும் ரம்மியமானது. சஹ்யாத்ரி மலைத்தொடர்,

எல்லையில்லாத பளபளக்கும் தங்கக் கடற்கரை. இதில் வரிசைகட்டி நிற்கும் மா,முந்திரி,தென்னை,சவுக்கு மரங்கள் என்று அபரிமிதமான காட்சிகள். இங்கேதான் ரத்னகிரி என்ற ஊர் உள்ளது. அல்போன்சோ மாம்பழங்களுக்கு மிகவும் பிரசித்தம். இதைச் சுற்றிலும் அழகான ஆலயங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் கஜானன் வீற்றிருக்கும் கணபதிபுலே.


கடலின் கரையில் விநாயகர்

பச்சை போர்த்திய ஒரு குன்று. அதன் கீழே அடிவாரத்தில் சிவப்பும் வெள்ளையுமாக ஒரு கோவில்.எதிரே அலை புரளும் கடல். இதுதான் கணபதிபுலே. 300 வீடுகள் கரையிலேயே உள்ள சிறிய கிராமம் இது. இந்தக் கணேசர் சுயம்புவானவர்.

மிகவும் புராதனமான இந்தக் கோவில் பேஷ்வாக்கள் காலத்திலிருந்தே உள்ளது. புராணங்களில் இந்த ஸித்தி விநாயகர் மேற்கு துவார பாலகன் அல்லது மேல்திசைக் கடவுள் என்றும் வழங்கப்படுகிறார்.

இவருக்கும் ஒரு கதை உண்டு. முகலாயர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோவில் உள்ள இடத்தில் தாழை வனம் இருந்தது. அங்கே பிடே என்றொரு அந்தணர் இருந்தார். ஒரு சமயம் அவருக்கு வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலை வந்தது. வைராக்கியம் கொண்ட அவர் அங்கிருந்து சொல்லாமல் அந்த வனத்திலேயே காற்றை மட்டும் உட்கொண்டு தன் துயர் தீர மங்கலமூர்த்தியை (விநாயகர்) நோக்கித் தவம் இருந்தார்.

பிள்ளையாரும் அவர் கனவில் தோன்றி, “நான் பக்தர்களின் குறைதீர்க்க இங்கே வந்துள்ளேன். இந்த மலைதான் என்னுடைய நிராகார ரூபம் (அரூபம்).நீ இங்கேயே பூஜைகளை நடத்து. உன்னுடைய குறைகள் தன்னாலேயே மறையும் “ என்றருளினார்.

அதன் பின் ஒரு நாள் பிதேவினுடைய பசுக்களில் ஒன்று பால் கொடுக்கவில்லை. காரணத்தை அறிய முற்பட்டபோது அந்தப் பசுவானது இப்போது கணபதியினுடைய சிலை இருக்கும் இடத்தில் பால் சொரிவது தெரிய வந்தது. இடையன் இந்த அதிசயத்தை பிதேவினிடம் கூற , அவர் அந்த இடத்தை முழுவதுமாகச் சுத்தம் செய்தபோது கனவில் கண்ட லம்போதரனின் விக்ரகம் இருந்தது. அவர் அங்கேயே கோவில் கட்டி நித்யானுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தார்.

மலையே லம்போதரர்

கருவறை செங்கல்லாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்டது. ஜக்மோகன் அல்லது பக்தர்கள் தரிசிக்கும் கூடமானது கொங்கணி பாணியில் ஆனது.சுயம்பு கணபதி பசுமையான மலையின் பின்னணியில் அசலாகத் தெரிகிறார். இந்தக் குட்டி மலையே லம்போதராரகக் கருதப்படுகிறது.

அந்த மலையைச் சுற்றி வலம் வருவதைப் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.பாதையின் மேல் தேக்கு மரத்திலான கூரை போடப்பட்டிருக்கிறது. இது கோடையில் குளிர்ச்சியையும் குளிரில் வெப்பத்தையும் தர வல்லது. மேற்குப்புற நுழைவாயில் நான்கு அடிதான் உள்ளது. குனிந்துதான் நுழைய வேண்டும்.

கணநாதனின் மஞ்சம்

கோவிலின் வடக்குப் பக்கத்தில் ஒரு இடத்தில் நகைகளும் மற்ற விலையுயர்ந்த பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.கணநாதனின் பள்ளியறை, கோவிலின் தெற்கில் உள்ளது. அவருக்கு மஞ்சம் கூட இருக்கிறது. சங்கடஹர சதுர்த்தி அன்றும் மற்ற விசேஷ நாட்களிலும் வெள்ளியிலான கணேசரின் விக்ரஹத்தைப் பல்லக்கில் வைத்து ஊர்வலம் நடைபெறும்.

பிறகு பிரசாதம் விநியோகிக்கப்படும். இத்தலம் அஷ்ட வினாயகர்களில் ஐந்தாவதாக உள்ளது. தெற்கு புறத்தில் சிறிய குளம் உள்ளது. அருகிலயே கிணறும் உள்ளது. கோவிலின் இருபக்கத்திலும் கொங்கணி பாங்கில் ஐந்து தீபத்தூண்கள் உள்ளன.

மூலவர் சிவப்பாக மொழு மொழுவென்று அழகாக உள்ளார். சிறிய விக்ரகம் குங்குமம் பூசி (சிந்தூர்)பிரதான விக்கிரகத்துக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. இவர் அஷ்ட வினாயகர்களில் ஐந்தாவதாக உள்ளார்.

எழில்மிகு கடற்கரைக் காட்சிகள்

கணபதிபுலேவைப் பற்றி சொல்லும் போது அதனுடைய கடற்கரையைப் பற்றி வர்ணிக்காவிட்டால் முழுமை பெறாது. ரத்னகிரியிலிருந்து வரும் போதே கவின்மிகு காட்சிகள் நமது கண்களுக்கு விருந்தாக இருக்கும். திடீரென்று சாலையின் கீழே கடல் அலை மோதும். பின் பல வண்ணங்களில் நிலபரப்பும் ,அதில் சிவப்பு மணலும், பச்சை வயல்களும் பழங்கள் குலுங்கும் மரங்களும் அதிவேகமாய்ப் பயணத்தில் கடக்கும்.

ஊரை அடைந்ததும் கடற்பரப்பு நம்மைப் பிரமிக்க வைக்கும். இந்தக் கரையில் காலாற நடக்கிறோம். இங்கே சூரியோதயமும் அஸ்தமனமும் மிகப் பிரபலமானது. வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் சூரிய கிரணங்கள் நேராக மூலஸ்தானத்தில் விக்ரகத்தின் மேல் விழும். ஒட்டகங்கள் ஆங்காங்கே உலவுகின்றன. கரையில் உள்ள பாதை நேராகக் குன்றின் மேல் கொண்டு போய் விடுகிறது.

அங்கிருந்து பார்த்தால் கடற்கரையின் இரு பக்கங்களும் அற்புதமாகத் தெரிகிறது. இரண்டு நாட்கள் தங்கினால் வசீகரிக்கும் கடற்கரையையும், கோவிலையும் படமெடுத்து நீங்காத நினைவுகளை எடுத்துச் செல்லலாம்.


ஆன்மிகச் சுற்றுலாகர்நாடகாகொங்கணிகடற்கரை விநாயகர்கணநாதன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x