

‘இரையைத் தேடுவதோடு இறையையும் தேடு’ என்பார்கள். மனிதன் உயிர் வாழ அடிப்படையானது உணவு. அந்த உணவினைத் தரும் ஒப்பற்ற கடவுள் அன்னபூரணி. அவளது மகிமை ஒப்பற்றது.
காசியில் வாழ்ந்த மகான் நாராயண தீட்சிதர். அவர் ஒருநாள் சில சாதுக்களிடம், தமது இல்லம் வந்து தாம் அளிக்கும் விருந்தை ஏற்குமாறு அழைத்தார். அதனை ஏற்று அவர்களும் வருவதாக கூறினர். அன்னம் அளிக்கப் போகும் ஆனந்தத்துடன் வீடு திரும்பினார் தீட்சிதர். ஆனால் அவருக்கோ எதிர்பாராத அதிர்ச்சி வீட்டில் காத்திருந்தது. காரணம் அவர் இல்லாளுக்கு உடல்நிலை சரியில்லை. கவலையே உருவாக இருந்த அவர் ‘வேறு வழி என்ன? என்ற யோசனையில் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அறுசுவையில் அன்னதானம்
தீட்சிதரின் எதிரே ஒரு பெண் வந்து நின்றாள். அவள் வைர மூக்குத்தியும், மூக்கில் புல்லாக்கும் அணிந்து, கழுத்தில் தங்கத் தாலியுடன் ஜொலித்தாள். அவள் முகத்தில் அன்பு மிளிரும் புன்னகை. தீட்சிதரின் கவலைக்குக் காரணம் கேட்டாள். அவரும் நடந்ததைச் சொன்னார். உடனே அந்தப் பெண், அவரிடம், ‘உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் வந்து சமைத்துப் பரிமாறட்டுமா?‘ என்று கேட்டாள். மகிழ்ச்சி கடலில் திளைத்த தீட்சிதர் பெண்ணைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
அறுசுவை உணவினைத் தயார் செய்தாள். விருந்தாளிகளை வரச் செய்து உணவு பரிமாறினாள். வந்தவர்கள் வயிறார உண்டு வாழ்த்தினர். விருந்தாளிகளை வழியனுப்பும் தருணத்தில் அந்தப் பெண்ணும் தீட்சிதரிடம் சொல்லி விட்டுச் சென்றாள். அவள் போனபின்புதான் தீட்சிதர், ‘வந்த பெண் யார்? எங்கிருந்து வந்தாள்? என்று எதுவும் கேட்கவில்லையே, அவளைப் பசியாறி விட்டுக்கூடப் போகச் சொல்லவில்லையே’ என்றெல்லாம் யோசித்தார். வீட்டிலிருந்து வெளியே வந்து நாற்புறமும் தேடினார். அவள் போன வழியே தெரியவில்லை.
கனவில் வந்த காரிகை
அதிதிகளுக்குச் சிறப்பாக விருந்தளித்தும் சிறு வேதனை அவரை வருத்தியது. அன்றிரவு அவர் கனவில் அந்தப் பெண் தோன்றினாள். “ஐயா, இன்னுமா என்னை அறிய முடியவில்லை? நான்தான் அன்னபூரணி. உங்கள் இல்லம் வந்து சாதம் சமைத்துப் பரிமாறியவள் நான்தான். வீட்டிலிருந்து திரும்பி வரும்போது, வாசலின் கிழக்குத் திண்ணையில் எனது புல்லாக்கு விழுந்துவிட்டது. அந்த இடத்திலேயே எனக்கு ஒரு ஆலயம் எழுப்புங்கள். தங்குவதற்கு இடமின்றி காசியில் நான் அலைந்துகொண்டிருக்கிறேன்” என்று கூறி மறைந்தாள் அந்தக் காரிகை.
கனவு கலைந்தது. தீட்சிதர் வாசலுக்கு ஓடினார். என்ன ஆச்சரியம், கிழக்குத் திண்ணையில் ஒரு புல்லாக்கு மினுமினுத்துக் கொண்டிருந்தது.
அன்னபூரணியின் ஆணைப்படி, அவளது புல்லாக்கு கிடந்த இடத்தில் அவளுக்கென ஓர் ஆலயம் எழுப்பினார் தீட்சிதர். அவர் பெயராலேயே இருக்கும் தெருவில், தத்தாத்ரேயர் ஆலயத்தின் அருகில் இன்றைக்கும் அந்த அன்னபூரணி ஆலயம் இருக்கிறது.
அன்னபூரணி விரதம்
அன்னபூரணியை முறையாக விரதமிருந்து வழிபட்டால் அதிக பலன்கள் உண்டு. மார்கழி மாதம், கிருஷ்ண பஞ்சமி அன்று ( மார்கழி பவுர்ணமியிலிருந்து ஐந்தாம் நாள் ) தொடங்கி 17 நாட்கள் விரதமிருந்து பூஜை செய்ய வேண்டும். தனியாகவோ, குழுவாகவோ விரதமிருக்கலாம். முறையான விரதத்தால் இல்லத்தில் செல்வம் சேரும், அன்னம் பெருகும்.