

காசியைப் பிரம்மதத்தர் ஆண்டபோது, ஒரு கிராமத்தில் குயவனின் மகனாகப் போதிசத்துவர் பிறந்தார். கங்கையின் கரைக்கு அருகிலேயே அங்கு அழகான ஏரி ஒன்று இருந்தது. நீர் அதிகமாக இருந்தபோது, கங்கையும் ஏரியும் ஒன்றாகவே தெரியும். ஒரு வருடத்தில் மழை இல்லாமல் போக ஏரியிலும் ஆற்றிலும் தண்ணீர் குறைந்தது. மீன்களும், ஆமைகளும் இந்த ஆண்டு மழை வராது என்பதை உணர்ந்து ஆற்றுக்கு இடம் மாறிவிட்டன. ஆனால் அந்த ஏரியில் வசித்துவந்த ஒரு ஆமை மட்டும், ஆற்றுக்குள் போகாமல் ஏரியிலேயே இருந்தது. “ நான் இங்கேயே பிறந்தேன், இங்கேயே வளர்ந்தேன், நான் இங்கிருந்து வெளியேற மாட்டேன்!” என்று திடமாகச் சொல்லிவிட்டது ஆமை.
கோடை வந்தது. ஏரியில் கொஞ்சநஞ்சமிருந்த நீரும் வறண்டது. ஏரியில் மிஞ்சியிருக்கும் சேற்றில் குழிதோண்டி ஈரம் வேண்டிப் புதைந்துகொண்டது. அப்போது பானைகள் செய்வதற்காகக் களிமண் தேடிவந்த போதிசத்துவர், மண்வெட்டி கொண்டு ஏரியில் உள்ள களிமண்ணைத் தோண்ட ஆரம்பித்தார். களிமண்ணில் புதைந்துகிடந்த ஆமையின் மீது மண்வெட்டியின் கூர்மை பட்டு அதன் ஓடு உடைந்தது. ஓடு உடைந்து ரத்தம் வழிந்த ஆமை, தன் துயரத்தில் புலம்பத்தொடங்கியது. “ பகவானே, நான் இறந்துகொண்டிருக்கிறேன். இந்த ஏரிதான் தாய் வீடு என்று நினைத்த எனக்கு ஏன் இத்தனை நெருக்கடிகள்!” என்றது.
இறந்துகொண்டிருக்கும் அந்த ஆமையைப் போதிசத்துவர் கையில் பரிவோடு எடுத்துக்கொண்டு தன் கிராமத்தவர்களிடம் சென்றார்.
“இந்த ஆமையைப் பாருங்கள். மற்ற எல்லா மீன்களும், ஆமைகளும் வறட்சி காலத்தை முன்னுணர்ந்து ஏரியிலிருந்து தப்பிவிட்டன. இந்த ஆமை மட்டும் தன் தாய் வீடு என இந்த ஏரியை நினைத்து இங்கேயே தன்னைப் புதைத்துக்கொண்டது. கடைசியில் வாழ்வையே நொந்துகொண்டு கடவுளிடம் புலம்பிவிட்டு இறந்தும் விட்டது” என்றார் போதிசத்துவர். போதிசத்துவர், கிராமத்தவர்களிடம் மேலும் பேசினார். “ இந்த ஆமை தனது வீட்டின் மீது அதீதப் பிரியத்துடன் இருந்ததால்தான், தன் மரணத்தைத் தேடிக்கொண்டது. எனது மகன், எனது மகள், எனது பணியாட்கள், எனது நகைகள், எனது சொத்துகள் என்று ஒருபோதும் உடைமையுணர்வு கொள்ளாதீர்கள்” என்றார் போதிசத்துவர்.