Published : 16 Jan 2015 10:09 AM
Last Updated : 16 Jan 2015 10:09 AM

அவள் இவள் நல்லூர்

ஈசனின் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்று ‘அவள் இவள் நல்லூர்’ எனும் ‘அவளிவணல்லூர்’. இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசன் சாட்சிநாதர் ஆவார்.

அவரது உடனுறை சக்தியாக சவுந்திர நாயகி அம்பாள் விளங்குகிறாள்...ஆலயத்தில் சவுந்திரநாயகி அம்பாள் தெற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலம் அப்பர், சம்பந்தரால் பாடல் பெற்றத் தலமாகும். தலவிருட்சமாக பாதிரி மரம் உள்ளது. தல தீர்த்தம் சந்திர புஷ்கரிணியாகும். இவ்வாலயத்தில் உள்ள சாட்சிநாதரை முருகப்பெருமான், சூரியன், அகத்தியர், காசியபர், கண்வர், விஷ்ணு முதலானோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஈசனை வழிபட்டு வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் சுசீலை. இவளை அரசவைப் புலவரின் மகன் மணந்தான். இவன் தல யாத்திரை மேற்கொண்டு பல சிவத்தலங்களை தரிசித்து பல ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்தான். அப்போது சுசீலை, அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அழகிழந்து, கண் பார்வை இழந்து காணப்பட்டாள். சுசீலையின் தங்கை அழகுடன் இருந்ததால், அவளை தன் மனைவியாக நினைத்து அழைத்தான். சுசீலையை மனைவியாக ஏற்க மறுத்தான்.இதனால் மனம் வருந்திய சுசீலை இத்தல ஈசனிடம் முறையிட்டாள்.

ஈசனும் சுசீலையை கோவில் எதிரில் உள்ள தீர்த்தத்தில் தை அமாவாசை தினத்தில் நீராடும்படி கூறினார். அதன்படி தை அமாவாசை நாளில் இத்தலத்தில் உள்ள சந்திர புஷ்கரிணியில் நீராடி எழுந்த சுசீலையின் உடலில், அம்மை நோயால் ஏற்பட்டிருந்த தழும்புகள் அகன்றன. அவள் முன்பைவிடவும் அழகாக தோற்றமளித்தாள். இழந்த அவளது கண்பார்வையும் திரும்பக் கிடைத்தது. அப்போது சுசீலையின் கணவனுக்கு, ஈசன் உமையவள் சமேதராக காட்சியளித்து

‘அவள் தான் இவள்’ என்று சுசீலையை சுட்டிக்காட்டி மறைந்தார். அன்று முதல் இந்தத் தலம் அவள் இவள் நல்லூர் என்றாயிற்று.

ஈசன், ‘அவள்தான் இவள்’ என்று சாட்சி சொன்னதால், அவர் சாட்சிநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் மூலவர் சுயம்பு லிங்கத்துடன், ஈசன் அம்பிகையுடன் தோன்றி சாட்சி சொன்ன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் தினமும் காலையில் 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வழிபாடு செய்வது சிறப்பு தருவதாகும்.தை அமாவாசை தினத்தில் சாட்சிநாதர், சந்திர புஷ்கரிணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்குவார். அப்போது பக்தர்கள் புனித நீராடுவார்கள்.

தை அமாவாசை தினத்தில் நண்பகலில் , இந்த தீர்த்தத்தில் நீராடி ஈசனையும், அம்பாளையும் ஒரு மண்டலம் தொடர்ந்து வழிபட்டுவந்தால் தோல் நோய்கள் அகலும்; கண் நோய்கள் குணமாகும். இத்தலத்தில் இருக்கும் சப்தகன்னியரை செவ்வாய்க்கிழமை வழிபடுவது விசேஷமானதாகும். இத்தலத்தில் உள்ள வலஞ்சுழி, இடஞ்சுழி இரட்டை விநாயகரை சங்கடஹர சதுர்த்தி நாளில் வழிபட்டால் சங்கடங்கள் விலகி, சந்தோஷங்கள் மலரும். செல்வம் குவியும் என்பது நம்பிக்கை. கும்பகோணத்தில் இருந்து அம்மாபேட்டை சென்று, அவள் இவள் நல்லூரை அடையலாம். பஞ்ச பைரவர் தலமான ஆவூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இந்தத் திருத்தலம் அமையப்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x