

நம் தமிழகத்தில் குன்றுதோறும் குமரக்கடவுள் இருப்பது போல பல்வேறு இடங்களில் சமண சமயத்தின் தடயங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று அனந்தமங்கலம் எனும் ஊர் ஆகும்.இது சென்னையிலிருந்து திருச்சி நெடுஞ்சாலையில் தொழுப்பேடு என்ற ஊரின் அருகே அமைந்துள்ளது.
இங்குள்ள சிறிய மலை மீது கற்பாறைகளில் சமண சமயத்தைச் சேர்ந்த திருவுருவங்கள் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்கின்றனர் ஆய்வாளர்கள். அறப் பயிர் விளைத்த அனந்தநாதர் அமர்ந்த நிலையில் அருள் தருகிறார்.இவர் சமணத்தைப் போதித்த பதினான்காவது தீர்த்தங்கரர். இவர் பெயரையே இவ்வூர் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
சாந்தமாவநாதரின் உருவம்
சிலையின் அருகில் ஒரு யட்சி குடை பிடிக்க மற்றொரு யட்சி சாமரம் வீசுவதாக உள்ளது. இதற்கு பக்கத்தில் ஒருபுறம் அம்பிகா யட்சியும், மறுபுறம் இரு தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும் காட்சிதருகின்றன. மற்றொரு பாறையில் இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரர், பத்தறம் அகன்ற பார்சுவநாதரின் உருவம் கண்களைக் கவர்கின்றது.
இச்சிலைகள் எல்லாம் பராந்தகசோழனின் முப்பத்தெட்டாம் ஆண்டில் (கி.பி.945) உருவாக்கப்பட்டவையென கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. இங்கு குகை ஒன்று உள்ளது.இதில் முனிபுங்கவர்கள் தவம் இருந்துள்ளனர்.அருகிலொரு உரல் காணப்படுகிறது.இதன் மூலம் முனிவர்கள் மருந்து தயாரித்து மக்களுக்கு உதவியதாகத்தெரிகிறது.பாறைகளில் பந்தல் அமைக்கத் துளைகள் வெட்டப்பட்டுள்ளன.
இங்கு ஜினகிரிபள்ளி எனும் பள்ளிக்கூடம் இருந்துள்ளது.பள்ளி எனும் வார்த்தையே அக்காலத்தில் சமண சான்றோர்களால் பயன்படுத்தப்பட்டதுதான். ஜினகிரி பள்ளி மூலம் கல்வித்தொண்டு ஆற்றியுள்ளனர். மேலும் இப்பள்ளி மூலம் வினபாசுர குருவடிகள் மாணவர் வர்த்தமானப் பெரியடிகள் நாள்தோறும் ஒரு சமண அடியவருக்கு ஆகாரதானம் அளித்துள்ளார்.அதற்காக ஐந்து கழஞ்சு பொன் தானம் செய்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
மூன்று கற்படுக்கைகள்
இந்த சிலைகளும் கல்வெட்டுகளும் நூறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக வெயில், மழை, இடி, மின்னல், புயல் போன்றவற்றைத் தாங்கி சரித்திரங்கள் சொல்கின்றன.இம்மலையின் அருகில் ஒரத்தி எனும் கிராமத்தின் மலை உச்சியில் சமண அறவோர்கள் வாழ்ந்த அறிகுறியாக இப்பொழுது மூன்று கற்படுக்கைகள் உள்ளன.
அங்கிருந்த வரலாற்று சின்னங்களான சுமார் இருபத்தைந்து கற்படுக்கைகள் கல் உடைப்போருக்கு இரையாகிவிட்டதாக கிராம மக்கள் வருந்துகின்றார்கள். அவர்களின் முயற்சியால்தான் மீதமுள்ளவை காப்பாற்றப்பட்டுள்ளன.
இதுபோன்ற வரலாற்று கருவூலகங்களை அழிவிலிருந்தும் சமூக விரோதிகளிடமிருந்தும் காக்க அகிம்சை நடை எனும் அமைப்பைத் தொடங்கி பாண்டிச்சேரி அ.ஸ்ரீதரன் என்பவர் அரும்பாடுபட்டு வருகிறார்.வரலாற்று புதையல்கள் உள்ள இடங்களுக்கெல்லாம் அவர் அகிம்சைநடைக் குழுவினருடன் சென்று மக்களிடையே விழிப்புணர்வை மாதந்தோறும் ஏற்படுத்தி வருகிறார்.