

கோடிக் கணக்கானவர்கள் இவ்வுலகில் பிறக்கிறார்கள். ஆனால் நூற்றுக் கணக்கானவர்கள் தான் சரித்திரப் புத்தகத்தில் இடம்பிடிக்கிறார்கள். இவ்விதம் சரித்திரத்தில் தனக்கெனெத் தனியிடத்தைப் பிடித்தவர்தான் சத்ரபதி சிவாஜி. ‘சத்ர' என்றால் குடை என்று பொருள். சத்ரபதி என்றால் குடைக்கு உரியவர். அதாவது அரசர்.
சத்ரபதி சிவாஜிக்கு இரண்டு ஆசிரியர்கள் இருந்தனர். ஒருவர் தாதாஜி கொண்டதேவ். இவர் சிவாஜிக்குச் சிறுவயதில் வில்வித்தை, கத்திச்சண்டை, குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தவர்.
இன்னொருவர் சமர்த்த குரு ராமதாஸர். இவர் சிவாஜியின் ஆன்மீக குரு ஆவார். வீரன் சிவாஜியின் மனதில் நற்பண்புகளும் லட்சியத்தை அடையத் தேவையான உறுதியும் தழைக்கக் காரணமாக இருந்தவர் இவர் தான்.
சமர்த்த குரு ராமதாஸர் ஒரு துறவி. வீடுகளில் பிச்சை பெற்று வாழ்ந்தவர். ஆனால் நுண்ணிய அரசியல் அறிவு கொண்டவர்.
குருவின் திருவருளால் சிவாஜி பல போர்களில் வெற்றி பெற்றுப் பல கோட்டைகளையும் ராஜ்ஜியங்களையும் கைப்பற்றினார். சக்கரவர்த்தி ஆனார்.
ஒரு சமயம் சமர்த்த குரு ராமதாஸர் தனது சீடர்களுடன் தெருக்களில் பிச்சை பெற்றவண்ணம் சதாரா நகரை அடைந்தார். சந்தர்ப்பவசமாக அன்று சத்திரபதி சிவாஜியும் கோட்டையில் இருந்தார். தலைவாசலில் தமது குரு பிச்சை கேட்டு வந்திருக்கும் செய்தி அறிந்த சிவாஜி கால்களில் செருப்புகளைக்கூட அணிய மறந்து குருவை வரவேற்க ஓடோடிச் சென்றார். ஆனால், பாதியிலேயே நின்றுவிட்டார்.
குருவுக்கு என்ன பிச்சையிடுவது என்ற சிந்தனை தான் அவரைத் தடுத்து நிறுத்தியது. எது கொடுத்தாலும் குறைவே என்று மனம் உறுத்தியது. உடனே அவர், மந்திரியை அழைத்துத் தாம் சொல்வதை அப்படியே காகிதத்தில் எழுதச் சொன்னார். பின் அந்தக் காகிதத்தை எடுத்துக் கொண்டு மாளிகையின் வாசலில் நிற்கும் குருவைப் பார்க்கச் சென்றார்.
குருவின் கால்களில் விழுந்து வணங்கினார். தான் எழுதிக் கொண்டு வந்த கடிதத்தைக் குருவின் பிச்சைப் பாத்திரத்தில் வைத்தார்.குரு அதை எடுத்துப் படித்தார்.இதுவரை நான் கைப்பற்றிய அத்தனை ராஜ்யங்களையும் குருவின் காலடியில் சமர்ப்பிக்கின்றேன் என்று எழுதியிருந்தது. தனது மொத்த சாம்ராஜ்யத்தையும் குருவுக்குக் கொடுத்த சிவாஜியைப் பார்த்துக் குரு பெருமிதம் அடைந்தார்..
“ராஜ்ஜியங்களைப் பாதுகாப்பது உன் போன்ற வீரர்களின் கடமை. நாட்டு மக்களை நலமாக வாழச் செய்யும் சக்தி உன் கரங்களுக்கு மட்டுமே உண்டு,” என்று கூறி சமர்த்த குரு ராமதாஸர் அந்தக் கடிதத்தை சிவாஜியிடமே திருப்பிக் கொடுத்தார்.
குருவைப் பெருமைப்படுத்த ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று விரும்பிய சிவாஜி குருவின் பிச்சைப் பாத்திரத்தைத் தன் இரு கைகளில் ஏந்திக் கொண்டு நகரத்து வீதிகளில் சுற்றிச்சுற்றிப் பிச்சை எடுத்தார். கிடைத்த பிச்சையைக் குருவின் கைகளில் கொடுத்தார். குருவுக்குப் பதிலாகப் பிச்சை எடுத்தைப் பெரும் கௌரவமாகவும் பாக்யமாகவும் கருதினார்.