Last Updated : 01 Jan, 2015 03:05 PM

 

Published : 01 Jan 2015 03:05 PM
Last Updated : 01 Jan 2015 03:05 PM

எல்லை இல்லாத இன்பம்

ஆருத்ரா தரிசனம் - ஜனவரி 5

சிவன் பெரும்பாலும் பல சிவத்தலங்களில் லிங்க ரூபமாகவே காட்சி அளிப்பார் என்பது அறியப்பட்ட உண்மை. சிதம்பரத்தில் இடதுபாதம் தூக்கி நின்றாடும் நடராஜராகக் காட்சி அளிக்கிறார். மார்கழி மாதத்தில் வரும் பவுர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும், ஒன்று சேரும் நாளன்று திருவாதிரை ஆருத்ரா தரிசனமாகக் கொண்டாடப்படுகிறது.

‘திருவாதிரையும் ஒரு வாய் களியும்’ என்பார்கள். வெல்லமும்,அரிசிக் குருணையும் கொண்டு செய்யப்பட்டு நிவேதிக்கப்படுவது களி. அன்றைய தினம் ஒரு வாய் களி சாப்பிட வேண்டும் எனக் கூறுவார்கள். ஆனால் அந்த சொலவடைக்கு ஆன்மிக அர்த்தம் வேறு. `உன்னையே போற்றும் எனக்கு, கைலாயப் பதவி உண்டு என்ற ஒரு வாக்கினை அளியும் சிவனே’ என்றே பொருள்படும். பொற்சபையான சிதம்பரத்தில் நடனமாடும் கோலத்தில் சிவன் காட்சி அளிக்க குறிப்பிடத்தக்க இரு புராணக் கதைகள் உண்டு.

இடது பாதம் தூக்கி ஆடிய சிவன்

சிதம்பரத்தில் இருந்த முனிவர்கள் நான்கு வேதங்கள் மற்றும் ஆறு சாத்திரங்களைக் கற்று அவற்றையே மூலப் பொருளாகக் கொண்டிருந்தனர். சிவன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு பூலோகம் வந்தார். சிதம்பரத்தில் இருந்த முனிவர்களுக்கும், யோகிகளுக்கும் தங்களின் சிறப்பை உணர்த்த விரும்பினர்.

அழகிய பெண்ணாக மாறினார் விஷ்ணு. பிச்சாடனர் ஆனார் சிவன். பெண்ணைக் கண்டு இளம் முனிவர்களும், பிச்சாடனரைக் கண்டு முனி பத்தினிகளும் மயங்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மூத்த முனிவர்கள், முதலில் பிச்சாடனரை ஒழிக்க முற்பட்டனர்.

இதற்காக யாகம் வளர்த்தனர். யாகத்தின் விளைவாய் வெளி வந்த மான், மழு, பூதம், அக்னி ஆகியவற்றை ஏவினர். இவற்றை வென்ற பிச்சாடனர், அனைத்தையும் தன் உடைமை ஆக்கிக் கொண்டார். பின்னரே முனிவர்கள் தம் தவறை உணர்ந்து இறை பொருளை வணங்கினர். முயலகன் தன்னைத் தூக்க, இடது பாதம் தூக்கி ஆடினார் சிவன். இதுவே குஞ்சித பாதம் என்னும் தொங்கும் பாதம் ஆனது. இத்திருநாளே ஆருத்ரா தரிசனமாகக் கொண்டாடப்படுகிறது.

நாணம் மேலிட்ட அம்பிகை

அம்பிகைக்கும், ஹரனுக்கும் ஏற்பட்ட ஆடல் போட்டியில் சித் சபையில் நின்று ஆடிய சிவ பெருமான், கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து காதில் அணியக் காலைத் தூக்க, நாணம் மேலிட்டதால் ஆட மறந்து அம்பிகை தலை குனிந்தாளாம். நடன பிரியர் நடராஜர் வென்றார். அம்பிகை தில்லைக் காளியாக சிதம்பரத்தில் தனிக் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் என்பது ஐதீகம்.

திருவாதிரையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பஞ்ச மூர்த்திகள், சிவகாமி மற்றும் நடராஜர் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சித் சபைக்கு அழைத்துச் செல்வார்கள். இங்கு கூடி இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடராஜரும் சிவகாமியும் முன்னும் பின்னும் ஆடியாடிச் செல்வார்கள். இதுவே ஆருத்ரா தரிசனம். இதனைக் காணக் கண்கோடி வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x