

இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் இந்தியாவுக்கு பல்வேறு போராட்டங்களை ஏற்று இங்கு போதிக்க வந்தார்.அவர் போதனை செய்த இடங்களில் மிக முக்கியமானது சென்னை சைதாப்பேட்டையிலுள்ள சின்னமலை ஆரோக்கிய அன்னை திருத்தலம் ஆகும்.
சின்னமலை, பாரத மண்ணுக்கே இயேசுவின் விழுமியங்களை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. புனித தோமையாரின் புண்ணான கால்கள் அழுந்திப் பதிந்து உரமேறிய ஞான பூமி இந்த புண்ணிய பூமி.
புனிதர் வசித்த குகை
இங்கு அமைந்துள்ள சிற்றாலயத்தின் அடியில் ஒருவர் மட்டுமே நுழையக்கூடிய குறுகலான வாசலில் குனிந்து கொண்டே சென்றால் புனிதரின் முழு உருவ சொரூபம் நமக்கு ஆசி கூறி நிற்பதை காணலாம்.சற்று வலப்பக்கம் திரும்பினால் சிறு துவாரத்தை நாம் காணலாம்.
பகைவர் தன்னைக் கொல்ல வருவதை அறிந்ததால் அங்கிருந்து பரங்கிமலை எனவும் தோமையார் மலை எனவும் அழைக்கப்படும் மலைக்குத் தப்பி சென்றார். கிறிஸ்தவர்கள் இன்றும் சாட்சியாக பகரும் “என் ஆண்டவரே, என் தேவனே” என்னும் அமுத மொழிகளை (யோவான் 20;28) வெளியிட்டவர்.
இன்றும் வற்றாத நீரூற்று
குகையின் பின்பக்கம் சற்று உயரத்தில் தோமையார் போதனை செய்கையில் தாகத்தோடு வந்த மக்களுக்காக தன் கோலால் தட்டி உருவாக்கிய வற்றாத நீரூற்றை நாம் காணலாம். தன் கையாலேயே செதுக்கிய கற்சிலுவை இன்றும் சாட்சியாய் நிற்கிறது. அதைச் சுற்றிலும் அவர் கால் தடங்களும் உள்ளங்கை தடங்களும் இன்றும் அவரின் வருகையை உறுதி செய்கின்றன.
புண்ணிய பூமி
இயேசு கிறிஸ்துவின் இறப்பின் நிகழ்வுகளைச் சித்தரிக்கும் சிலுவைப்பாடுகள் அனைத்தும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.இயேசுவின் மலைப் பிரசங்கத்தை ஒத்த சிறு சிறு குன்றுகள் தோமையாரின் உயர்ந்த லட்சியங்களையும் கொள்கை பிடிப்பையும் பறைசாற்றுகின்றன.
அழகிய வட்ட வடிவ தேவாலயம்
இங்கு அன்பு,கனிவு,அருளை வாரிவழங்கும் ஆரோக்கிய மாதாவுக்கு ஆறு பிரமாண்ட தூண்களை கொண்ட வட்ட வடிவத் தேவாலயம் காண்பதற்கு அருமையாய் அமைந்துள்ளது.
இன்றுவரை புனித தோமையாரின் புண்ணிய தலங்களான தோமா மலை, சாந்தோம் பேராலயம், தோமா கல்லறைக்கு வருகைதரும் உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் சின்னமலை புண்ணிய பூமியையும் தரிசித்து அற்புத வரங்கள் பெற்று செல்கின்றனர்.