Last Updated : 08 Jan, 2015 02:45 PM

 

Published : 08 Jan 2015 02:45 PM
Last Updated : 08 Jan 2015 02:45 PM

எல்லைகள் இல்லா இசை உலகம்

‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் அறிமுகமான இளையராஜா விரைவிலேயே தமிழகத்தையே தன் பக்கம் இழுத்துவிட்டார். புதுமை நிறைந்த இசையமைப்பும் கிராமிய இசையும் கர்னாடக இசையும் மேற்கத்திய இசையில் தேர்ந்த ஞானமும் இவர் விரல் நுனியில் இருந்ததே இதற்குக் காரணம்.

திரை இசையில் மட்டுமல்லாமல் இசையின் பல்வேறு வடிவங்களிலும் அசாத்தியமான தேடலுடன் சாதனைகள் புரிந்துவரும் இவர் அண்மையில் தனது எல்லையை இசை வெளிப்பாட்டின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்தியிருக்கிறார். ஸ்வப்னம் என்னும் நாட்டிய நிகழ்ச்சிக்கு இசையமைத்ததன் மூலம் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்.

தொடக்கத்திலிருந்தே திரை இசை என்னும் எல்லைக்கு அப்பாலும் தனது இசைக் களத்தை விரிவுபடுத்திவரும் இளையராஜா, முதன்முதலில் பக்திப் பாடல்களை ஒலிநாடாவாக வெளியிட்டார். ‘கீதாஞ்சலி’, ‘கீத வழிபாடு’ போன்ற ஒலிநாடாக்களில் பக்திப் பாடல்களை ஒரு பரிமாணத்திற்குக் கொண்டுசென்றார். வேத மந்திரங்களைக் கற்றுக்கொண்டு இளையராஜாவின் ‘வேத கோஷம்’ என்ற ஒலிநாடாவையும் வெளியிட்டார்.

தன் ஆழ் மனதில் உருவெடுத்த இசைக் கோவைகளை ஒலி வடிவமாக்கி, ‘ஹவ் டு நேம் இட்’ என்று தலைப்பிட்டு வெளியிட்டார். அடுத்து ‘நத்திங் பட் வின்ட்’ என்னும் இசைக்கோலத்தை வெளியிட்டார். இதுவே அவர் சிம்பொனி என்ற மேற்கத்தியப் பாரம்பரிய இசைக் களத்தில் அடியெடுத்துவைக்க உதவியது.

இத்தகைய புதிய முயற்சிகளைத் தன்னுடைய 71-ஆம் வயதிலும் தொடர்ந்து கொண்டிருப்பவர் இளையராஜா. இந்த வரிசையில் பக்தி இசை வடிவமாக ரமண மகரிஷி பற்றிய ‘ராஜாவின் ரமண மாலை’, சபரிமலை ஐயப்பன், ஷீரடி சாய்பாபா முதலானோர் மீதான பக்திப் பாடல்கள் ஆகிய தொகுப்புகளும் முக்கியமான படைப்புகள்.

இதுபோன்ற முயற்சிகளின் தொடர்ச்சியாகச் சமீபத்தில் இளையராஜா ஒரு புதிய இலக்கைத் தொட்டுள்ளார். ‘ஸ்வப்னம்’ என்னும் நாட்டிய நிகழ்ச்சிக்கு இசை அமைத்துக் கொடுத்துள்ளார். பரமசிவனைக் குறித்த கனவுகள் அடங்கிய நிகழ்ச்சி இது.

ஒரு முழு நேர நாட்டிய நிகழ்ச்சிக்கு, குறிப்பாக மேடை நாட்டிய நிகழ்ச்சிக்கு இளையராஜா இசையமைப்பது இதுவே முதல் முறையாகும். ஆதியும் அந்தமும் இல்லா அகன்ற ஜோதியாய் அண்ட சராசரங்களையும் தன்னுள்ளே அடக்கி ஆளும் ஒரே சக்தியாய்த் திகழும் பரமசிவனைப் பற்றிய கனவு என்றால், அதற்கு எல்லையே இல்லை என்பதே இந்நிகழ்ச்சியின் ஊன்றுகோல்.

இந்த நாட்டிய நிகழ்ச்சிக்குக் குறைந்தது நான்கைந்து பாடல்களுக்கேனும் இளையராஜா இசையமைத்துக் கொடுக்க வேண்டுமென்று அவரை அணுகியபோது, மொத்த நிகழ்ச்சிக்கும் நானே இசையமைத்துத் தருகிறேன் என்று பளிச்சென்று கூறினாராம். “இது கனவா நனவா என்று தெரியவில்லை” என்கிறார் இந்த நிகழ்ச்சியின் சூத்திரதாரிகளில் ஒருவரான கிருத்திகா சுப்ரமணியன்.

கட்டிடக் கலை நிபுணராக தொழில்புரியும் கிருத்திகா, பரதநாட்டியத்திலும் தேர்ச்சி பெற்றவர். சுதாராணி ரகுபதியின் சீடர். இந்தக் கனவு நிகழ்ச்சியின் முக்கிய அங்கம் இவர்.

நாட்டியம் சார்ந்த பல திரைப்படங்களுக்கும் நாட்டியம் சார்ந்த திரைப்பாடல்களுக்கும் இசை அமைத்திருந்தாலும் ஒரு முழுநேர மேடை நிகழ்ச்சிக்கு இசையமைப்பது பற்றிக் கூறுகையில், “இசை என்பது ஒன்றுதான். அது அமையும் களத்தைப் பொறுத்து அதன் தன்மை விளங்கும்.

நிதம் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு ரத்தமோ அதனைக் கண்டு பயமோ கிடையாது. ஆனால் நோயாளிக்கோ ரத்தத்தைக் கண்டாலே நடுக்கம்தான். அதுபோலதான் இசை எனக்கு ஒரு தொழில்” என்று இளையராஜா குறிப்பிட்டார்.

தாளக் கட்டில் பல புதுமைகளைப் புகுத்திய இளையராஜா, இந்நிகழ்ச்சிக்காக சங்கீர்ணம் (9 மாத்திரை) மற்றும் மிஸ்ரம் (7 மாத்திரை) கொண்ட தாளக்கட்டை வைத்து அர்த்தநாரீஸ்வர அஷ்டகத்தை இசை வடிவமாக்கி மீண்டும் புதுமை செய்துள்ளார்.

சங்கீர்ணத்துக்கு பக்வாஜ் எனும் தாள வாத்தியத்தையும் மிஸ்ரத்துக்கு நமது மிருதங்கத்தினையும் பயன்படுத்தி, புரிதலுக்கு வழிவகுக்கிறார். மேக் மற்றும் காபி ராகங்களில் குழைந்து ஷரத், அருண்மொழி ஆகியோரின் குரல்கள் வெளிப்படுவது புதிய அனுபவம்.

இந்த நாட்டிய நிகழ்ச்சிக்காக சுமார் 30 இசைக் கோவைகளை இளையராஜா அளித்திருந்தாலும் அதில் ஒன்பதை மட்டும் குறுவட்டாக வெளியிட்டுள்ளனர். பாடகர்கள் அபிஷேக் ரகுராமன், பரத் சுந்தர், வசுதா ரவி, பூர்ணிமா சத்தீஷ் ஆகியோருடன் சுதா ரகுநாதனின் பங்களிப்பும் இதில் உள்ளது. குறுவட்டில் மராட்டிய பாடகி ராஜ பதக் பாடியுள்ளார்.

எல்லாவற்றிலும் இசை ஞானி தன் தனித்தன்மையை முத்திரையாகப் பதித்திருந்தாலும் நம்மை மேலே செல்லவிடாமல், திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டுவது முதல் இசைக் கோவை. பாரம்பரிய மேற்கத்திய இசையையும் கர்னாடக இசையையும் கலந்து ஒரு புதிய வண்ணத்தை அளித்திருக்கிறார். பெரும் திரை இசையமைப்பாளராகப் பெரும் புகழையும் பெயரையும் பெற்றாலும் திரை இசை என்னும் எல்லையைத் தாண்டியும் தனது படைப்புக் களத்தை விரிவுபடுத்திக்கொண்டேபோவது இளையராஜாவின் இசை விலாசத்துக்குச் சான்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x