

ஏகாதசியன்று பரமபத வாசல் வழியாகச் சென்று பரந்தாமனை தரிசித்தால் வைகுந்தப் பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். பரமபதம் என்றால் ஒரு வழிப் பாதைதான். பரமபத நாதனுடன் ஐக்கியமாவதே இதன் அர்த்தம்.
108 திவ்விய தேசங்கள் உட்பட அனைத்து வைணவத்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். ஏகாதசி மரணம் துவாதசி தகனம் என்பது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. ஆனாலும் ஏகாதசி திதியில் பரமபதம் அடைந்தவர்களுக்கு துவாதசி திதியில்தான் வருடாந்திர திவசம் செய்வார்கள்.
பக்த துக்காராமின் ஆரோகணம்
இந்த உன்னத நிலை அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நாமத்தையோ, ராம நாமத்தையோ உச்சரித்துக் கொண்டு இருக்கும் சாதாரண பக்தனுக்குக் கூட வைகுண்டப் பதவி கிடைக்கும். இதற்கு கலியுகத்தில் இன்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பக்த துக்காராமின் ஆரோகணம் ஒரு சாட்சியாய் இருக்கிறது.
வைணவத் திருத்தலங்களை திருப்பதிகள் என்று உயர்வாகக் கூறுவார்கள். பதி என்றால் கணவர் என்று பொருள். திருப்பதி என்றால் திருக் கணவர் எனப் பொருள் கொள்ளலாம். இந்த பூவுகில் தோன்றிய அனைவரும் பெண்கள்தாம். புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு, நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி என்று வடமொழிப் புலவர் காளிதாசர் தமது சாகுந்தலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வைணவ ஆழ்வார்களும் தங்களை பெண்பாலாக பாவித்துக் கொண்டு பாசுரங்கள் பாடியதும் உண்டு. எனவே அனைவருக்கும் திருப்பதி அந்தப் பரம்பொருளே. அவனைத்தான் திவ்ய தேசங்கள் எனப்படும் திருப்பதிகளில் காணச் செல்கிறோம்.
முகவாய்க்கட்டையில் ஏன் வெண்மை?
திருப்பதி என்றே பெயரைக் கொண்டது திருமலை. இந்த திவ்ய தேசப் பெருமாளுக்கு மட்டுமே, முகவாய் கட்டையில் வெண்மை நிறம் காணப்படும். வேறு எந்தப் பெருமாளுக்கும் இந்த அடையாளம் கிடையாது. அரங்கனைப் பாடும் வாயால் குரங்கனைப் பாடுவேனோ என்றார் ஆழ்வார் பெருமான். இத்திருமலையில் உள்ள குரங்குகளுக்கும் எம்பெருமானே தலைவன். இம்மலைவாசனுக்கு முகவாய்க்கட்டையில் வெண்மை பூசப்பட்டதன் காரணத்தை புராணக் கதை விளக்குகிறது.
கலியுகமான தற்போது நிகழும் இந்த யுகத்தில் உதித்தவன் திருமலை வாசன். பத்து அவதாரத்தையும் பல சதுர் யுகங்களில் எடுத்தவன். அவன் திருமலையில் வீற்றிருக்க வந்தான். அப்பெருமாளுக்கு தான் மட்டுமே புஷ்பக் கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டான் அனந்தன் என்ற பக்தன். அதற்காக திருமலையில் தனது பூந்தோட்டத்தை விரிவாக்கம் செய்ய கடப்பாரையால் மண் அகழ்ந்தான். அவனது மனையாளிடம் அகழ்ந்த மண்ணைத் தூரத்தில் கொண்டு கொட்டச் சொன்னான்.
நிறைமாத கர்ப்பிணியான அப்பெண்ணோ மண்ணைக் கொட்டிவிட்டு சடுதியில் திரும்பினாள். அனந்தனுக்கு ஆச்சரியம். இதற்குக் காரணம் கேட்டான். அதற்கு அவளோ அங்கு சிறுவன் ஒருவன் இடையில் வந்து வாங்கிச் சென்று கொட்டுவதாகக் கூறினாள். இது தனது குறிக்கோளுக்கு இடர் என்று எண்ணிய அனந்தன், அச்சிறுவனை சென்றுவிடும்படி கூறினான். இதனைக் கேளாத சிறுவனோ தொடர்ந்து உதவினான். தூரத்தில் கடப்பாரை கொண்டு தோண்டிக் கொண்டிருந்த அனந்தன், கடப்பாரையை அங்கிருந்தே அச்சிறுவன் மீது வீசி எறிந்தான். அடிபட்ட சிறுவன் அங்கிருந்து ஓடி மறைந்தான்.
இந்நிகழ்வுக்குப் பின், திருமலைக் கோயிலை நோக்கி பக்தர்கள் பதைபதைத்தபடி ஓடிக் கொண்டிருப்பதை கண்டான் அனந்தன். காரணம் அறிய தானும் ஓடினான். மூலவர் ஸ்ரீநிவாசன் முகவாய்கட்டையில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருந்தது. அர்ச்சகர் அதனைத் துடைக்கத் துடைக்க மீண்டும் மீண்டும் குருதி பெருகியது. சிறந்த பக்தரான அனந்தன் இதனைக் காணப் பொறாமல் பாய்ந்து சென்று அங்கு பெருமானுக்கு நாமம் சாற்ற வைத்திருந்த பச்சைக் கற்பூரத்தை அள்ளி எடுத்து, முகவாய்க் கட்டையில் அப்பினார்.
பக்தனின் அன்புக் கரம் பட்டதும் ஆனந்தம் அடைந்தாற் போலும், பெருகிய குருதி நின்றது. பின்னர் பச்சைக் கற்பூரம் அப்புவது வழக்கமானது. இன்றும் திருமலைக் கோயிலில் நுழைவாயிலின் சுவறின் மீது அனந்தாழ்வான் கடப்பாரை என்று எழுதப்பட்டு, கடப்பாரை ஒன்று ஆணியில் மாட்டப்பட்டு தொங்கிக் கொண்டு இருக்கிறது.
ஏகாதசியன்று திறக்கும் கதவு
இத்திருக்கோயிலின் மூலவர் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு வலப்புறம் பரமபத வாசல் கதவு சாதாரண நாட்களில் மூடப்பட்டும் வைகுந்த ஏகாதசியன்று திறந்தும் காணப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் பரவாசுதேவனாக ஸ்ரீ, பூ, நீளா தேவி சமேதராக தனிச் சன்னதி கொண்டிருக்கிறார் ஸ்ரீவிஷ்ணு. நின்ற வண்ணம், அமர்ந்த வண்ணம், கிடந்தவண்ணம் என தன் வண்ணங்களை நீல வண்ணமாகவும் காட்டியவன் எம்பிரான் கண்ணன். ஆயிரம் நாமங்களைக் கொண்டவன். ஆயிரம் நாவு கொண்ட ஆதிசேஷன் மீது பாற்கடலில் கிடந்து இருப்பவன். இந்த ஆதிசேஷன், கிடந்தால் படுக்கையாக, நின்றால் குடையாக, அமர்ந்தால் ஆசனமாக மாறி நாராயணனைத் தாங்குபவன்.
விஷ்ணு ராமனாக அவதாரம் எடுத்த பின், லட்மணனாக மனிதப் பிறவி எடுத்து வந்தவன் ஆதிசேஷன். கணப்பொழுதும் பிரியாத, ஆதிசேஷன் வைகுந்தத்தில் பரவாசுதேவனான பெருமாளுக்கு ஆசனமாகவும், குடையாகவும் இருக்க அருகே ஸ்ரீ, பூ, நீளாதேவியுடன் பக்தர்களை வரவேற்கும் கோலத்தில் திவ்ய தம்பதியாய் காட்சி அளிக்கிறார் எம்பெருமான்.
வைகுந்தவாசா வரமருள்வாய்.