Published : 13 Jan 2015 09:10 AM
Last Updated : 13 Jan 2015 09:10 AM

வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்!

மூன்றாம் பாலினத்தோரை நடத்தும் விதத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அதிக வேற்றுமை இல்லை.

ஏற்றப்படாத ஒரு மெழுகுவர்த்தியை என் கைகளில் வைத்தார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் இருக்கைகளில் அமைதியாக உட்கார்ந் திருந்தார்கள். கிரீன்விச் கிராமத்தில் இருந்த எல்.ஜி.பி.டி. சமூக மையத்தில் நவம்பரில் நடந்த ‘மூன்றாம் பாலினர் நினைவுநாள் நிகழ்ச்சி’ அது.

ஆண்டுதோறும் இது நடைபெறுகிறது. கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்துகொண்டோ இறக்கும் மூன்றாம் பாலினர் நினைவாக அந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இறந்தவர்களின் நினைவாக அந்த நாளைக் கடைப்பிடிப்பதற்கு பதிலாக, வெவ்வேறு விதமான மக்களைக் கொண்ட நம்முடைய சமூகத்தவரின் வெற்றிகளைக் கொண்டாடும் நாளாக அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே மூன்றாம் பாலினத்தவளாகிய என்னுடைய விருப்பம். ஆனால் ஆண்டுக்காண்டு இறப்பு அதிகரித் துக்கொண்டே போகிறது, எனவே நானும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினேன்.

லீலா அல்கார்ன்

கடந்த கிறிஸ்துமஸ் முடிந்த ஒரு வாரம் கழித்து, 17 வயது நிரம்பிய லீலா அல்கார்ன் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்து கிங்ஸ் மில்ஸ் பகுதியில் இருந்த தனது வீட்டைவிட்டு நள்ளிரவில் வெளியேறினார். மாநில நெடுஞ்சாலையில் டிரெய்லர் இணைக்கப்பட்ட டிராக்டர் வந்தபோது குறுக்கே பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டார். இறப்பதற்கு முன்னால் டம்ப்ளர் என்ற சமூக வலைதளத்தில் விடுத்த தனது இறுதிச் செய்தியில், “தயவுசெய்து வருத்தப்படாதீர்கள்; நல்லதற்காகத்தான் இதைச் செய்கிறேன். நான் வாழ்ந்திருக்கக்கூடிய வாழ்க்கை வாழத்தக்கதல்ல, காரணம் – நான் மூன்றாம் பாலினத்தவள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆணாகப் பிறந்திருந்தாலும் தன்னைப் பெண்ணாக உணர்ந்து அவ்வாறு வாழ விரும்பிய லீலாவை, பழமையான எண்ணங்களில் ஊறிய அவருடைய பெற்றோர் அவ்வாறு வாழ அனுமதிக்கவில்லை. “நான் (என் விருப்பத்தை) சொன்னபோது என்னுடைய தாய் கடுமையாக கோபம் அடைந்தாள். ‘இப்படியெல்லாம் நினைப்பது சில காலத்துக்குத்தான், நீ உண்மையாகவே பெண்ணாக இருக்க முடியாது. கடவுள் தவறாகப் படைக்க மாட்டார். நீதான் உன்னைப் பற்றித் தவறாகக் கருதிக்கொண்டிருக்கிறாய்.’ இதைப் படிக்கும் அன்பு பெற்றோர்களே, இதை உங்களுடைய குழந்தைகளிடம் கூறாதீர்கள், அப்படி நீங்கள் கூறினால், அது வேறொன்றையும் செய்யாது, அவர்கள் மேலும் தங்களையே வெறுக்கத் தொடங்குவார்கள்; என் விஷயத்தில் அதுதான் நடந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு வாய்ப்பு

லீலா சொல்வதில் தவறேதும் இல்லை. உலகம் பல விதமான மனிதர்களைக் கொண்டது. அவர்களில் ஒரு வகையினர்தான் மூன்றாம் பாலினர். தான் எதுவாக இருப்பதாக லீலா பெருமையாக நினைத்தாளோ அதுவாகவே கருதிக்கொள்ள உலகம் அவளுக்கு ஒரு வாய்ப்பைத் தரவில்லை. அந்த உலகை மாற்ற ஒரே வழி, தான் சாவதுதான் என்ற தவறான முடிவை லீலா எடுத்துவிட்டாள்.

தற்கொலை என்பது மூன்றாம் பாலினரிடையே நிரந்தரமாகிவிட்டது. தற்கொலை செய்துகொள்ளும் மனப்போக்கு அதிகம் கொண்டவர்கள் என்ற நிலையில் மூன்றாம் பாலினர் உள்ளார்கள். மூன்றாம் பாலினரில் 40% பேர் ஏதாவதொரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

நானும் அதில் ஒருத்தி. 1986-ம் ஆண்டு, நோவா ஸ்காட்டியா என்ற இடத்திலிருந்து அட்லான்டிக் கடலில் குதிக்க முடிவு செய்து தயாராகிவிட்டேன். சட்டென்று அடுத்த கணம் ஏதோ தோன்றி அங்கிருந்து திரும்பி நடந்தேன், இதோ உங்கள் முன் நிற்கிறேன்.

தொடக்க காலத்திலேயே தாங்கள் விரும்பும் பாலினமாக மாறிவிடுவதே மூன்றாம் பாலினத் தவர்களுக்கு நல்லது. ஆனால், எங்களில் பெரும் பாலானவர்களுக்கு அது இயலாத காரியம், காரணம் குடும்பத்தினர் அந்த முடிவை ஆதரிப்பதே இல்லை. மேற்கொண்டு காலடி எடுத்து வைக்கவே அச்சமூட்டும் புதிய பாதையில் நடக்க பண வசதி உள்ளிட்ட ஆதாரங்கள் மூன்றாம் பாலினருக்கு அவசியம். இந்த நிலையில் எதிர் காலத்தின் மீது நம்பிக்கை வைத்து உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்வதற்கான உத்திகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த வழியாக இருக்க முடியும். எனக்கு உதவியாக இருந்தவை லீலாவுக்கு உதவிகரமாக இருந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், நான் எப்படி இவ்வளவு தூரம் கடந்து வர முடிந்தது என்று சிந்தித்துப் பார்க்க கடந்த வார அவகாசம் உதவியது.

காப்பாற்றிய புத்தகங்கள்

என்னுடைய வாழ்க்கையை புத்தகங்கள் ஓரளவுக்குக் காப்பாற்றின. ஜேன் மாரிஸ் எழுதிய ‘கானன்ட்ரம்’ என்ற நூல் என்னைப் போன்றவர்கள் வாழக்கூடிய இன்னொரு விண்மீன் கூட்டத்தை எனக்குக் காட்டியது. லீலா உயிரோடு இருந்திருந்தால் அவரிடம் ஜேனட் மாக் எழுதிய ‘ரீடிஃபைனிங் ரியல்நெஸ்’, கேட் போர்ன்ஸ்டெயின்ஸ் எழுதிய ‘ஹலோ குரூயல் வேர்ல்ட்’ என்ற புத்தகங்களையும் கொடுத்திருப்பேன்.

அவை நிச்சயம் அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். புத்தகங்களைப் படிப்பது எனக்கு மன ஆறுதலைத் தந்தது என்றால் எழுதுவதும் அப்படியே. புத்தகங்களைப் படிப்பது, பத்திரிகைகளுக்கு எழுதுவது, புதுப்புது உலகங்களைக் கண்டுபிடிப்பது போன்றவை என் சிந்தனையை நல்ல விதமாக திருப்பிவிட உதவிகரமாக இருந்தன. எதையும் விவரமாக எழுதுவது என் மனக் குழப்பங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள உதவியது.

சில வேளைகளில் உரத்த குரலில் கத்துவேன், அது என்னுடைய மன அழுத்தங்களை வெளியேற்றும் வடிகாலாக உதவியிருக்கிறது. எங்களுடைய வீட்டு பியானோவை வாசிக்கத் தொடங்கி அதன் கம்பி அறுந்துபோகும் வரையில் உச்சஸ்தாயியில் வாசித்துக்கொண்டிருப்பேன். ஒரு இசைக் குழுவிலும் சேர்ந்து பாடிவந்தேன். அவர்கள் 2 பாடல்களைப் பிரதானமாகப் பாடுவார்கள். ‘உன்னுடைய அன்பு வெள்ளத்தைப் பாய விடு’ என்பது அதில் ஒன்று. நான் பாடுவதே, நான் வாழ்கிறேன் என்று எனக்கு நானே ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக. அதே சமயம் என்னுடைய மன வலிகளை நான் உணர்ந்த வகையில் வெளிப்படுத்தவும் பாடினேன். சில குளிர்கால இரவுகளில் வானத்தைப் பார்த்துக் கூச்சலிடுவேன். என்னுடைய குரலே எதிரொலியாக என்னை நோக்கித் திரும்பி வரும்.

படி, எழுது, கத்து என்பது சாப்பிடு, பிரார்த்தனை செய், அன்புடனிரு என்பதைப் போன்ற அன்றாட சடங்கல்ல. ஆனால், என்னைப் பொறுத்தவரை மிகவும் உதவியாக இருந்தன. 1970-களில் எனக்குக் கிட்டாத பல வசதிகள் இப்போது நவீன காலத்தில் வந்துள்ளன. வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணங்களை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டவர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் இணையதளங்கள் இன்று வந்துவிட்டன.

லீலாவின் இறுதி ஆசைகளில் ஒன்றே ஒன்றை நம்மால் நிறைவேற்ற முடியும்: “என்னுடைய மரணம் சிலருக்கு அர்த்தமுள்ளது. இந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மூன்றாம் பாலினத்தவரில் மேலும் ஒரு எண்ணிக்கையை என்னால் கூட்ட முடிந்திருக்கிறது. யாராவது ஒருவர் இதைப் பார்த்து, ‘போதும், இந்த எண்ணிக்கையோடு நிறுத்துங்கள், இதோடு இது நிற்க வேண்டும்’ என்று சொல்ல வேண்டும். நானும் கேட்டுக்கொள்கிறேன், சமூகமே இத்தோடு நிறுத்து, தயவுசெய்து!”

- © தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x