

சுப்பிரமணிய ஐயர் திருக்கடையூரைச் சேர்ந்த அம்பாள் பக்தர். இசையில் வல்லவர். கவிதை இயற்றுவதில் சிரோன்மணி. அம்பாளை நினைவில் நிறுத்தி தியானம் செய்து வந்தார். இறை உணர்வு மீதூரும்பொழுதெல்லாம், இறைவன் குறித்த பாடல்களைப் பாடுவார். அதனால் அவரைப் புரிந்துகொள்ள இயலாத பொதுமக்கள் அவரைப் பித்தர் என்றே பழித்தனர்.
திருக்கடையூரை அப்போது ஆண்டுகொண்டிருந்த மன்னன் அபிராமவல்லி சமேத அமிர்தகடேஸ்வர சுவாமியை தரிசிக்க இவ்வூருக்கு வந்தான். மன்னன் தரிசிக்க வந்ததால் கோயில் விழாக்கோலம் பூண்டிருந்தது. மன்னன் வந்தபோது தரிசிக்க வந்த பொதுமக்கள் மரியாதை நிமித்தமாக விலகி வழிவிட்டனர். ஆனால் அவ்விடத்தில் தியானத்தில் இருந்த சுப்பிரமணியன் இதனை கவனிக்கவில்லை. தொடர்ந்து தியானத்திலேயே இருந்தார்.
தன்னைக் கண்டு பொய்யாகக்கூட மரியாதை செலுத்தாத அவரைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அருகில் இருந்தவர்களிடம் காரணம் கேட்டார் மன்னர். அவ்ர் ஒரு பித்தன் என்றனர் மக்கள். மன்னன் அவரிடம் சென்று இன்றைய திதி என்ன என வினவ, தியான நிலையிலேயே இருந்த அவரோ, அமாவாசை என்று சொல்வதற்குப் பதிலாக பெளர்ணமி திதி என்று தவறாகக் கூறிவிட்டார்.
இதனைக் கேட்ட மன்னன், அங்கிருந்து அகன்றார். சில மணித்துளிகளுக்குப் பின்னர் தியானம் கலைந்து கண் விழித்த சுப்பிரமணியர் தன் தவறை பிறர் சொல்லக் கேட்டார். மனம் வருந்தினார். எல்லாரும் சொல்வதற்கு ஏற்பத் தான் பித்தனாகவே நடந்துகொண்டதற்காக வருந்தினார். அதற்காக உயிர்த் தியாகம் செய்ய முடிவெடுத்தார். மிகப் பெரிய பள்ளம் வெட்டி அதில் பெரும் மரக்கட்டைகளை அடுக்கினார். அதற்கு மேலே அந்தரத்தில் நூறு கயிறுகளால் உரி ஒன்றைக் கட்டி, அதன் மீது அமர்ந்தாராம். மரக்கட்டைகளுக்கு தீ மூட்டப்பட்டது.
உரியில் அமர்ந்திருந்த பக்தர் சுப்பிரமணியர், தன் பழி நீக்க, அபிராமியிடம் வேண்டினார். தான் நூறு பாடல்கள் பாட இருப்பதாகவும், ஒவ்வொரு பாடலின் முடிவிலும் உரியில் இருக்கும் ஒரு கயிற்றை அறுத்து விடப்போவதாகவும் தெரிவித்தார். நூறாவது கயிறு அறுக்கப்படும்போது, தான் மூட்டிய தீயில் விழுந்து உயிர் மாய்த்துக்கொள்வேன் என்று அபிராமியிடம் சொன்னார் இந்த பக்தர்.
திருக்கடையூர் அபிராமியின் புகழ் பாடும் அந்தாதிப் பாடலைத் தொடங்கினார். தமிழ் இலக்கிய வகையில் சிறப்பு பெற்றது அந்தாதி வகை. அந்தாதி என்றால் அந்தம் + ஆதி = கடைசி + முதல். முன்பாடலின் கடைச் சொல்லை அடுத்து வரும் பாடலின் முதல் சொல்லாக அமைத்துப் பாடுவதே இதன் சிறப்பு.
இவரது சபதத்தைக் கேட்ட மன்னன் அதிசயித்தார். இந்த அதிசயத்தைக் காணத் தானே நேரில் வந்தார். முதல் பாடலைத் தொடங்கினார் சுப்பிரமணியன். சில பாடல்களைப் பாடி முடிப்பதற்குள் அபிராமி, தன் ஒரு தோட்டினைக் கழற்றி வானில் வீசி எறிந்தாளாம். அதன் ஜொலிப்பு சந்திரனை ஒத்ததாக இருந்தது எனப் புராணக் கதை கூறுகிறது. இதன் மூலம் தன் பக்தனுக்காக அமாவாசையையே பவுர்ணமியாக மாற்றினாள் அபிராமி என்று சொல்கிறது இந்தக் கதை.
பழி தீர்ந்துவிட்டாலும், தொடர்ந்து பாடல்களைப் பாடுமாறு அபிராமி அன்னை கூற, வரகவியாக நூறு பாடல்களையும் பொழிந்து தள்ளியதால், அபிராமி பட்டர் என சிறப்புப் பெயர் பெற்றார்.
இதனைக் கண்ட மன்னன் அவரைப் போற்றிப் புகழ்ந்து, பல பரிசில்கள் வழங்கினார். அபிராமி பட்டரது பாடல்கள் எளிய தமிழில் தெவிட்டாத கவித்துவத்துடன் அமைந்திருப்பது அதன் சிறப்பு. பக்தி இலக்கியத்தின் முக்கியமான படைப்பாகவும் இது விளங்குகிறது.