

ஒரு ஞானி தனது சீடருடன் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார். எதிரே ஒரு மாட்டுக்காரன் வந்து கொண்டிருந்தான். அவன் மாடும் உடன் வந்துகொண்டிருந்தது.கயிற்றின் ஒரு முனையை மாட்டுக்காரன் தன் கையில் பிடித்திருந்தான்.
இந்தக் காட்சியைப் பார்த்த ஞானி, தன் சீடரிடம்,"மாட்டை மனிதன் பிடித்திருக்கிறானா அல்லது மாடு, மனிதனைப் பிடித்திருக்கிறதா? மாடு மனிதனிடம் அகப்பட்டிருக்கிறதா? அல்லது மனிதன் மாட்டிடம் அகப்பட்டிருக்கிறானா?சொல் பார்க்கலாம்" என்றார்.
"இது மிகவும் சாதாரணமான விசயம். மனிதன்தான் மாட்டைப் பிடித்து வைத்திருக்கிறான். எனவே மாடுதான், மனிதனிடம் அகப்பட்டிருக்கிறது," என்றார் ஞானியின் சீடர்.
ஞானியோ, "அந்த மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடினால் மனிதன் என்ன செய்வான்?" என்று கேட்டார்.
அந்த சீடர், "அப்போது மனிதன் மாட்டைப் பிடிக்க அதன் பின்னே ஓடுவான்," என்றார்.
"இந்த நிலையில் மாடு மனிதனிடம் அகப்பட்டுள்ளதா அல்லது மனிதன் மாட்டிடம் அகப்பட்டுள்ளானா?," என்று ஞானி கேட்டார். சீடர் சிந்திக்கத் தொடங்கினார். மனிதன் கயிற்றை விட்டுவிட்டு ஓடினால் மாடு, அவன் பின்னே ஓடாது. ஆனால் மாடு கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடினால் மனிதன் கட்டாயம் அதன் பின்னே ஓடுவான். அகப்பட்டிருப்பது யார்? மாடா? மனிதனா?
உண்மையில் மனிதன், மாட்டின் மீது ஆசைகொண்டுள்ளான்.அதை விட்டுவிட அவனால் முடியாது. இப்படித்தான் மனிதன் சாதனங்களின் பிடியில் அகப்பட்டுள்ளான். ஆனால் சாதனங்கள் அவன் பிடியில் இருப்பதாக நினைக்கிறான். சிந்தனை வேறு, செயல் வேறு. ஆழ்ந்து சிந்தித்தால் பிரமை எது, யதார்த்தம் எதுவென்று புரியும்.